Enable Javscript for better performance
கீழடியும் நெடுநல்வாடையும்- Dinamani

சுடச்சுட

  
  tm1

  தமிழரின் பண்பாட்டுத் தளம் 2,600 ஆண்டுகள் பழைமையுடையது என்பதைக் கீழடி அகழாய்வுகள் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன. ஓர் இனத்தின் வரலாற்றைச் சான்றுகளோடு நிறுவ வேண்டுமெனில் கல்வெட்டுகள், பானை ஓட்டு எழுத்துகள், அகழாய்வுகளில் கிடைக்கும் தானியங்கள், எலும்புத் துண்டுகள், உலோகங்கள் ஆகியவை முதன்மை பெறுகின்றன. இப்பொருள்களைக் காட்டிலும் இலக்கியங்கள் தொடர்ச்சியான ஒரு வரலாற்றை நம் முன் வழங்கியுள்ளன. 

  சங்க இலக்கியமான "பத்துப்பாட்டில்' ஒன்றாகப் போற்றப்படும் நெடுநல்வாடை 188 அடிகளால் நக்கீரர் என்னும் நல்லிசைப் புலவரால் பாடப்பெற்ற நூல். இந்நூலின் பாட்டுடைத் தலைவன் பாண்டிய மன்னன் ஒருவன். அம்மன்னன் பாண்டிய நெடுஞ்செழியன் என்பது சான்றோர் கூற்று. இந்நூல் பாண்டிய மன்னர்களின் வரலாற்றுப் பின்புலத்தில் எழுந்ததே என்பதற்கு, பாண்டியர்கள் மாலையாகச் சூடும் வேப்பந்தாரைப் பதிவு செய்துள்ளதால் (நெடுநல்-176) தெளியலாம். நக்கீரரால் பாடப் பெற்றிருக்கும் நெடுநல்வாடைப் பாண்டியனின் தலைநகரமான மதுரையை மையப்படுத்திப் பாடப்பட்டுள்ளது. 

  இன்றைக்கு அகழாய்வு நடந்து கொண்டிருக்கும் கீழடி மதுரையிலிருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ளது. ஏறத்தாழ இரண்டும் ஒரே பண்பாட்டுத்தளம். நெடுநல்வாடை மற்றும் கீழடியின் காலமும் ஏறத்தாழ ஒரே காலம். இவ்விரண்டு பகுதிகளும் அக்காலத்தில் வழக்கில் இருந்த யானையின் தந்தத்தால் செய்த பொருள்களைப் பற்றி பேசுவது இங்கு மிகவும் நோக்கத்தக்கது. 

  கீழடியில் கிடைத்த அகழாய்வுப் பொருள்களில் குறிப்பிடத்தக்க ஒன்று யானை தந்தத்தால் செய்யப்பெற்ற சீப்பு.  தலை வாறுவதற்காகத் தமிழர் பயன்படுத்திய பொருள். சீப்பு என்னும் இந்த எளிய பொருளை உயர்ந்த யானை தந்தத்தால் தமிழர் தயாரித்துப் பயன்படுத்தியுள்ளனர் என்பது கீழடி தமிழரின் செல்வ வளத்தைக் காட்டுகிறது. யானை தந்தத்தை நுட்பமாகக் குடைந்து சீப்பாக்கி உள்ளனர் 

  தமிழர். தமிழரின் நுண்ணிய தொழில்நுட்பத்திற்கு இந்த சீப்பு மாபெரும் சான்றாகும். 
  நெடுநல்வாடை என்னும் நூல் பாண்டிய நெடுஞ்செழியனின் மனைவியாகிய பாண்டிமா தேவிக்காக உருவாக்கப்பட்ட கட்டிலானது நாற்பது ஆண்டுகள் நிரம்பியதும், போர்த்தொழிலில் சிறப்புடையதும், முரசம் போன்ற கால்களை உடையதும், போரிலே விழுப்புண் பட்டு இறந்த யானையின் (தானாக விழுந்த) தந்தத்தைக் கொண்டு அரசிக்காக செய்யப்பட்ட கட்டிலின் கால்கள் உருவாக்கப்பட்டதாக நெடுநல்வாடை நவில்கிறது. இங்கு 40 ஆண்டுகள் என்பது ஆண் யானையின் சிறந்த வயதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. போரில் இறந்த யானையின் தந்தம் என்பது வீரத்தின் அடையாளமாகவும், யானை இறந்த பின்னரே தந்தத்தைக் கைப்பற்றுதல் என்னும் உயர் நேயத்தையும் விளக்குகிறது. இதனை,
  தசநான் கெய்திய பணைமருள் நோன்றாள்
  இகன்மீக் கூறும் ஏந்தெழில் வரிநுதல்
  பொருதொழி நாக மொழியெயி நருகெறிந்து
  சீரும் செம்மையும் ஒப்ப வல்லோன்
  கூருளிக் குயின்ற ஈரிலை யிடையிடுபு
  தூங்கியல் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 
  புடைதிரண் டிருந்த குடத்த லிடைதிரண்டு
  உள்ளி நோன்முதல் பொருந்தி அடியமைத்துப் 
  பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டில் 
  (நெடுநல் : 115 - 123)

  இப்பாடலடிகள் பண்டைத் தமிழரின் ஏராளமான வரலாற்றுக் குறிப்புகளைத் தாங்கி நிற்கின்றன. தச நான்கு என்பது 10பு4=40 என்ற பெருக்கல் கணக்கினை முன்வைக்கிறது. 

  தசம் என்பது வடமொழியில் 10 என்னும் எண்ணைக் குறிக்கும். நாற்பது ஆண்டுகள் என்பது ஆண் யானையின் சிறந்த இளமைப் பருவம் என்னும் உயிரியல் அறிவை வெளிப்படுத்துகிறது. சிறிய உளியைக் கொண்டு தச்சர்கள் யானைத் தந்தத்தைச் செதுக்கினர் என்பது பண்டைத் தமிழகத்தில் சிறந்திருந்த தச்சுத் தொழிலையும் வெளிப்படுத்துகிறது. பாண்டில் என்ற சொல்லாட்சி கட்டிலைக் குறித்து நிற்கிறது.
  கீழடியில் கிடைத்த பொருள்கள் கார்பன் சோதனைக்கு அனுப்பப்பட்டு அதன் காலத்தைக் கணித்திருப்பது சிறப்பு. யானை தந்தத்தில் செய்யப்பட்ட சீப்பு, அந்த யானையின் எத்தனை வயதில் அதன் தந்தத்தைப் பறித்து செய்யப்பட்டது என்ற ஆய்வும் மேற்கொள்ளப்பட்டால், நெடுநல்வாடை கூறும் 40 வயதுடைய யானை என்னும் குறிப்பு பொருந்துகிறதா 
  என்பதை ஆராய உதவும். மேலும், இந்த ஆய்வு தமிழரின் நுண்ணிய வாழ்வியலை வெளிப்படுத்துவது திண்ணம். 
  நெடுநல்வாடைப் பாடலடிகளில் இடம்பெறும் யானையின் தந்தத்தாலான கட்டிலின் கால்களும், கீழடியில் கிடைக்கப் பெற்றுள்ள யானை தந்தத்தாலான நுட்பமான சீப்பு இரண்டும் ஒரே புள்ளியில் இணைகின்றன. இவை இரண்டும் பாண்டிய நாட்டில் மதுரைக்கு அருகில் பாடப்பெற்ற, கிடைத்த பொருள்களாகும். இவை இரண்டும் சங்ககாலம் எனப்படும் சமகாலத்தவை. இங்கு நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய செய்தி, சங்க காலத்தில் அரச குடியைச் சேர்ந்தோர் மட்டும் செல்வ வளத்தோடு வாழ்ந்து உயர்ந்த பொருள்களை (யானையின் தந்தத்தாலான கட்டிலின் கால்கள்) பயன்படுத்தவில்லை. பாண்டிய நாட்டில் வாழ்ந்த மக்களும் செல்வச் செழிப்போடு வாழ்ந்து, உயர்ந்த பொருள்களைப் 

  (தந்தத்தால் ஆன சீப்பு) பயன்படுத்தியுள்ளனர் என்பது  ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படுகிறது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai