தமிழர் நீதி

அரசனுடைய செங்கோல் வளையாமல் இருந்ததனால் காவிரி சோணாட்டில் நடந்தது என்பதை,
தமிழர் நீதி

அரசனுடைய செங்கோல் வளையாமல் இருந்ததனால் காவிரி சோணாட்டில் நடந்தது என்பதை,

மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண்  விழித்தொல்கி நடந்தாய் வாழி காவேரி
கருங்கயற்கண் விழித்தொல்கி நடந்தவெல்லாம் நின் கணவன்
திருந்து செங்கோல் வளையாமை என்றறிந்தேன் வாழி காவேரி

என்கிறாள் மாதவி (சிலப்.கானல்வரி). நீதி குனியாது இருக்கும் நாட்டிலேயே இயற்கை ஒழுங்கு சிதையாது. நீதி செலுத்திய அரசன் சான்றோர் அவையத்தில் தக்கோரை வைத்து வழக்குகளை ஆராய்ந்து தீர்ப்பு நல்கினன். நெடுநுகத்துப் பலகாணி போல வேந்தனும் சான்றோரும் நடுவுநிலைமை பிறழாமல் நீதி வழங்கினர்.

நீதிகாத்த நெடும்புகழினர்

சேர, சோழ, பாண்டிய நாடு மூன்றும் நீதி வழங்குவதில் தலை நிமிர்ந்து நின்றன. சோழ வேந்தர்களின் முன்னோனான சிபிச்சோழன் புறா ஒன்றின் உயிர்காக்கத் தன் தசை அரிந்து கொடுத்து, அது ஈடாகாது கண்டு தானே துலையில் (துலாக்கோலில்) ஏறி அமர்ந்தான். இதில் மிகைத்தன்மை இருப்பினும் சோழர் அறம் வழங்குவதில் தன்னலமற்றுத் திகழ்ந்த கருத்துப் புலனாகும்.
சேர அரசர்கள் மான மாண்பு மிக்கவர்கள். தமக்கொரு நீதி, பிறர்க்கொரு நீதி என வாழாதவர். பெருஞ்சேரலாதன் கரிகாலனோடு பொருதபோது கரிகாலன் வேல் சேரனின் மார்பை ஊடுருவிப்  புறம் போயிற்று. அவன் முதுகு காட்டவில்லை. ஆயினும் என்ன? எப்படியோ முதுகு புண்பட்டுவிட்டது. போர்க்கள நீதிக்கு இது புறம்பாகும். எனவே, அவன் வாட்படை பரப்பிப் போர்க்களத்திலேயே உயிர் நீத்தான்.
கணைக்கால் இரும்பொறை என்னும் சேர அரசன் மான மாண்பு கருதிச் சிறையில் உயிர்விட்டான். இவையெல்லாம் அரச நீதியுள் அடங்கும். புறமுதுகிட்டாரை, புண்பட்டாரை, உறுப்பறை உற்றாரை, அடைக்கலமானவரைக் கொல்லக்கூடாது என்பது தமிழர் போர்க்களத்தில் கடைப்பிடித்த நீதியாகும்.
பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி போர்க்கு வருங்கால் பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், நோயுற்றோர், புதல்வரைப் பெறாதோர் ஆகியோரை பாதுகாப்பான இடத்திற்குச் செல்க என அறிவித்தான். 
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் "யான் என் பகைவர் எழுவரையும் வெல்லேனாயின் திறனற்ற ஒருவனை என் அவையில் நீதி வழங்குவோனாகக் கொண்டு மெலிகோல் செய்தவன் ஆகுக' என்று சூளுரைக்கின்றான். இத்தகு தமிழ்வேந்தர் தலைமையில் செங்கோல் நிமிர்ந்து  நின்றது.

அனைத்திலும் நீதி 

இல்லறம், துறவறம், போரறம் என அறத்தைக் கண்ட தமிழர் சொல்லிலும் அறம் பின்பற்றினர். வழுக்கியும் வாயால் தீய சொலல் என்றார் திருவள்ளுவர். இல்லறத்தில் தலைவனும் தலைவியும் ஊழால் ஒன்றுபட்டனர் என்றும் அவர் என்றும் பிரிவிலர் என்றும், எல்லாப் பிறப்பிலும் அவர்தாமே கணவன் மனைவியராய்த் தோன்றுவர் என்றும் குறுந்தொகை கூறக்காணலாம். துறவிலும் அறத்தைப் பேணினர் தமிழர். அவர்தம் துறவு அருளாட்சி உடையது. சிந்தனை, சொல், செயல் மூன்றும் வேறுபடாத ஒருமைப்பாடுடையது. 

கழுவாய் சொல்லாத நீதி 

வைதிக நெறியினர் எத்தீவினைக்கும் கழுவாய் செய்தால் அது நீங்கவிடும் என்னும் கருத்தினர். கங்கையிலே மூழ்கி எழுந்தால் கரிசெல்லாம் நீங்கும், புண்ணியத் தலங்களுக்குச் சென்று வழிபடப் பொல்லாத துயர் நீங்கும், பார்ப்பார்க்கு தானம் கொடுப்பின் பெரும் பேறு வாய்க்கும் என்கிற பிராயச்சித்தம் (கழுவாய்) எதனையும் தமிழர் நீதி ஏற்கவில்லை. நீதி வளைந்தால் அதனை நிமிர்த்துவது உயிர்தான் என்ற கோட்பாட்டைப் பாண்டியன் நெடுஞ்செழியன் வாழ்க்கை காட்டுகிறது.

அனைவர்க்கும் ஒத்த நீதி

பொருள் உரிமை பற்றிய வழக்காயினும் குற்ற வழக்காயினும் வழக்குகள் எத்தகையன என்று நோக்கியே அக்காலத் தீர்ப்பு அமைந்தது. வைதிக சமயம் வருண அடிப்படையில் நீதி வழங்கியதைத் தமிழர் ஏற்கவில்லை. மனுதர்ம நூல் குலத்துக்கொரு நீதி கூறியதைத் தமிழர் ஏற்கவில்லை.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நீதி
எல்லா உயிர்க்கும்  பிறப்பு ஒத்த தன்மை உடையது என்பது திருவள்ளுவர் கூற்றாகும். குடிப்பிறப்பும், தோலின் நிறமும், குலச்சார்பும் ஒரு மனிதனின் உயர்வுக்கோ தாழ்வுக்கோ உரிய அளவுகோல்கள் அல்ல என்று உணர்த்தியது தமிழ்மறை. திருக்குறள் நீதியே தமிழர்தம் நீதி கோட்பாடாகும். மனு ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்றதனைப் புறக்கணித்த தமிழ்க்குலம், 
வள்ளுவர்செய் திருக்குறளை
மறுவற நன்குணர்ந்தோர்
உள்ளுவரோ மனுவாதி
ஒரு குலத்துக்கு ஒரு நீதி
என்று கருதியமையினை மனோன்மணியம் 
சுந்தரனார் காட்டுகிறார்.
செல்வத்துப்பயனே ஈதல்
பொருள் ஈட்டுவதும், அதனை நல்வினையால் ஈட்டுவதும், அதனை அறங்கருதிப் பிறர்க்கீதலும், ஒப்புரவு நெறியில் ஒழுகலும், மனம் - மொழி மெய்த்தூய்மைகளும் தமிழரால் போற்றி ஒழுகப்பெற்ற நீதி நெறிகளாகும்.
தமிழர் நீதி புகழை அவாவுவது; பழியை விலக்கி வாழ்வது. உலகுடன் பெறினும் பழியை ஏலாதது. தமிழர் பிறர்க்கென முயலுநர். உடைமைகளைத் துய்ப்பதிலும் அவர்தம் நீதியில் சமத்துவம் ஒளிர்வதை,
தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி  
வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவர்க்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே
அதனால் செல்வத்துப் பயனே ஈதல்
துய்ப்போம் எனினே தப்புந பலவே 
(புறநா.189)
என்னும் பாட்டில் காணலாம். இதையே வலியக்கூறின் மார்க்சியம், மென்மையாகக் கூறின் காந்தியம். அதுவே பண்டையத் தமிழியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com