பாரதியின் நகைச்சுவை!

பாரதியாருடைய முறுக்கு மீசையும், வெறித்த பார்வையையும், விரைப்பான உருவத் தோற்றத்தையும் நேரிலோ அல்லது உருவப் படத்திலோ பார்த்தவர்கள் அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்க்க மாட்டார்கள்.
பாரதியின் நகைச்சுவை!

பாரதியாருடைய முறுக்கு மீசையும், வெறித்த பார்வையையும், விரைப்பான உருவத் தோற்றத்தையும் நேரிலோ அல்லது உருவப் படத்திலோ பார்த்தவர்கள் அவரிடம் நகைச்சுவையை எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த ஆசாமிக்கும் நகைச்சுவைக்கும் வெகுதூரம் என்று சொல்லத்தான் அவர்களுக்குத் தோன்றும். அனற் பொறியைக் கக்கும் அவருடைய தேசீயப் பாடல்களைப் படிக்கின்றபோது இந்த எண்ணம் முற்றிலும் வலுப்பட்டு விடுகின்றது. 

பயமெனும் பேய்தனை அடித்தோம் பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்
என்ற மாதிரி இடிப் பாடல்களையும்,
வலிமையற்ற தோளினாய் போ போ போ
மார்பிலே ஒடுங்கினாய் போ போ போ

என்பது போன்ற கர்ஜிக்கும் வரிகளையும் எழுதிய கைக்கும் மென்மை வாய்ந்த நகைச்சுவைக்கும் என்ன தொடர்பு இருக்கப் போகிறது என்று நினைப்பது இயற்கைதானே? ஆனால், அவரது நாட்டுப் பாடல்களை விட்டு, கண்ணன் பாட்டு, குயிற் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய நூல்களுக்கு வரும் போதே அவருடைய நகைச்சுவை ஆங்காங்கு மின்னுவதை நாம் பார்க்கலாம்.

அங்காந்திருக்கும் வாய் தனிலே - கண்ணன்
ஆறேழு கட்டெறும்பைப் போட்டு விடுவான்
என்ற கண்ணன் பாட்டிலும்,
மேனி அழகினிலும் விண்டுரைக்கும் வார்த்தையிலும்
கூனி இருக்கும் கொலுநேர்த்தி தன்னிலுமே
வானரர் தம் சாதிக்கு மாந்தர் நிகராவாரோ 

என்று குயிற் பாட்டு வரிகளிலும் நகைக்சுவை கொப்பளிக்கின்றது. பாரதியாருடைய நகைச்சுவையை உணர்ந்து மகிழ அவருடைய வசன நூல்களுக்குத்தான் முக்கியமாகச் செல்ல வேண்டும்; அங்குதான் அது சிறப்பாக வெளிப்படுகின்றது.

நகைச்சுவையை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று என்றும் சிரிப்பை உண்டாக்கி இன்பம் பயப்பது; மற்றொன்று முதல் தடவை படிக்கும்போதோ அல்லது கேட்கும்போதோ மட்டும் இன்பங் கொடுப்பது, முன்னது உயர்ந்தது; பின்னது தகுதியில் குறைந்தது. முன்னது இடையறாது பெருகும் தேன் ஒழுக்கு; பின்னது துளிக்கும் கொம்புத் தேனில் ஒரு சொட்டு. பாரதியாரின் கட்டுரைகளில் இடையறாத இன்ப ஊற்றான உயர்ந்த நகைச்சுவையை நாம் ஆங்காங்கு காண்கின்றோம்.

"பெண்' என்ற கட்டுரையிலே பிரமராய வாத்தியாரைப் பற்றி அவர் சொல்லுவதைப் பாருங்கள்:

""இவர் இந்தத் தெருவில் வார்த்தை சொன்னால் மூன்றாவது தெருவுக்குக் கேட்கும். பகலில் பள்ளிக்கூட வேலை முடிந்தவுடனே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஆறு மணி முதல் எட்டு வரை தன் வீட்டுத் திண்ணையில் சிநேகிதர்களுடன் பேசிக்கொண்டு, அதாவது கர்ஜனை செய்து கொண்டிருப்பார். பிறகு சாப்பிடப் போவார். சாப்பிட்டுக் கையலம்பி, கை ஈரம் உலர்வதற்கு முன்பு, மறுபடி திண்ணைக்கு வந்து சப்தம் போடத் தொடங்கி விடுவார். இவருடைய வீட்டுத் திண்ணைக்கு அக்கம் பக்கத்தார் "இடிப் பள்ளிக்கூடம்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்த இடிப் பள்ளிக்கூடத்துக்கு வந்து மாலைதோறும் நாலைந்து பேருக்குக் குறையாமல் இவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருப்பார்கள். அந்த நாலைந்து பேருக்கும் இன்னும் காது செவிடாகாமலிருக்கும் விஷயம் அநேகருக்கு ஆச்சரியத்தை உண்டாக்குகிறது.''

அந்த வாத்தியாருடைய பேச்சிலே சில வார்த்தைகளையும் கேளுங்கள்:

""துருக்கி தேசம் தெரியுமா? அங்கே நேற்று வரை ஸ்திரீகளை மூடி வைத்திருப்பது வழக்கம். கஸ்தூரி மாத்திரைகளை டப்பியில் போட்டு வைத்திருக்கிறார்களோ இல்லையோ? அந்த மாதிரி; திறந்தால் வாசனை போய்விடும்.''

எத்தனை தடவை படித்தாலும் சிரிப்புண்டாகிறது. அதே சமயத்தில் நம்மை அறியாமல் அது நமக்குள்ளே மாறுதலைச் செய்கிறது. நல்ல நகைச்சுவை உள்ளத்தில் சுருக்கென்று தைக்காது, நோவில்லாமலே குணம் கொடுக்க வேண்டும். மேல் நாட்டில் பல நகைச்சுவை எழுத்தாளர்களின் வார்த்தைகளே சமூகத்தில் பல சீர்திருத்தங்களை யாருக்கும் மனக் கசப்பில்லாமல் செய்திருக்கின்றன. அம்மாதிரியே பாரதியாரும் நகைச்சுவையைக் கையாண்டிருக்கிறார். ஹார்மோனியத்தைப் பற்றி அவர் எழுதியிருப்பதைப் பாருங்கள்:

""அந்தப் பெட்டி (ஹார்மோனியம்) போடுகிற பெருங்கூச்சல்தான் என் காதுக்குப் பெரிய கஷ்டமாகத் தோன்றுகிறது. மேலும், சங்கீதத்திலே கொஞ்சமேனும் பழக்கமில்லாதவர்களுக்கெல்லாம் இந்தக் கருவியைக் கண்டவுடனே ஷோக் பிறந்து விடுகிறது.

சத்தமுண்டாக்குவதற்கு நல்ல துருத்தி கைக்கு ஒத்ததாகப் பின்னே வைத்திருக்கிறது. ஒரு கட்டையை உள்ளே அழுத்தி முன் பக்கத்துச் சாவிகளை இழுத்துவிட்டு, துருத்தியை அசைத்தால், "ஹோ' என்ற சத்தமுண்டாகிறது. உடனே பாமரனுக்கு மிகுந்த சந்தோஷ முண்டாகிறது. நாம் அல்லவா இந்த இசையை உண்டாக்கினோம்?' என்று நினைத்துக் கொள்கிறான். உடனே வெள்ளைக் கட்டைகளையும் கறுப்புக் கட்டைகளையும் இரண்டு தட்டுத் தட்டுகிறான். பேஷான தொனிகள்! மேலான தொனிகள்! பாமரன் பூரித்துப் போகிறான். ஒரு வீட்டில் ஹார்மோனியம் வாசித்தால் பக்கத்திலே ஐம்பது வீட்டுக்குக் கேட்கிறது. அறியாதவன் தனது அறியாமையை வீட்டில் இருந்தபடியே இரண்டு மூன்று வீதிகளுக்குப் பிரசுரம் பண்ண வேண்டுமானால், அதற்கு இந்தக் கருவியைப் போலே உதவி வேறொன்றுமில்லை.''

இதைப் படித்த பிறகும் அந்த வாத்தியத்தைத் தொட ஆசை உண்டாகுமா? 

சில சமயங்களில் பாரதியாருடைய நகைச்சுவை இந்த மென்மையை விட்டுச் சற்று உறுத்தவும் தொடங்குகிறது. கொஞ்சம் இடித்துக் காண்பிக்க வேண்டும் என்பது அவர் கருத்து:

""கும்பகர்ணன் தூங்கினானாம். இலங்கையில் சண்டை நடக்கிறது. மூன்று லோகமும் நடுங்குகிறது. அப்படிப்பட்ட சண்டையின் அதிர்ச்சியிலே கூட, கும்பகர்ணனுடைய தூக்கம் கலையவில்லை. ஆயிரக்கணக்கான ஆடு, மாடு, குதிரைகளின் காலில் கூர்மையான கத்திகளைக் கட்டி இவன் மேலே நடக்கச் சொன்னார்கள்; தூக்கம் கலையவில்லை. ஏழெட்டு மேகங்களை அவன் காதுக்குள்ளே போய் இடிக்கச் சொல்லி ராவணன் கட்டளை இட்டானாம். மேகங்கள் போய் இடித்தனவாம், கும்பகர்ணன் குறட்டை நிற்கவே இல்லை.
""மேற்படி கும்பகர்ணனை போல சில தேசங்களுண்டு. அண்டங்களத்தனையும் இடிந்து விழுந்தாலும் காது கேட்காத செவிடர் வாழும் தேசங்கள் சில உண்டு. ஆனால் ஹிந்து தேசம் அப்படி இல்லை!....  தமிழ்நாடு மேற்படி மஹா பாதக ஜாப்தாவைச் சேர்ந்ததன்று, அன்று!''

தமிழனுக்கு இந்தச் சூடு தேவையோ இல்லையோ? தேவையென்றால் இதுவே போதும், போதும். இப்படிச் சுருக்கென்று படும் நகைச்சுவையும் அவர் வாக்கில் பிறந்திருக்கின்றது. 

நடிப்புத் தேசபக்தர்களைப் பற்றியும் பாரதியார் இவ்வாறான காரமான நகைச்சுவையைக் கொட்டி எழுதியிருக்கிறார்.

""நான் சோம்பருக்குத் தொண்டன், எனது நண்பர்களெல்லாம் புளியஞ் சோற்றுக்குத் தொண்டர்கள். சிலர் மட்டிலும் பணத்தொண்டர்; "காலணா'வின் அடியார்க்கும் அடியார். ஆனால், எங்களிலே ஒவ்வொருவரும் பேசுவதைக் கேட்டால் கைகால் நடுங்கும்படியாக இருக்கும். பணத் தொண்டரடிப் பொடியாழ்வார். எங்கள் எல்லோரைக் காட்டிலும் வாய்ப் பேச்சில் வீரர். ஒருவன் வானத்தை வில்லாக வளைக்கலாமென்பான். ஒருவன் மணலைக் கயிறாகத் திரிக்கலாமென்பான். ஒருவன், "நாம் இந்த ரேட்டில் வேலை செய்து கொண்டு வந்தால் ஆங்கிலேயரின் வர்த்தகப் பெருமை ஆறு மாதத்தில் காற்றாய்ப் போய்விடும்' என்பான். மற்றொருவன், "சியாம்ஜி கிருஷ்ணவர்மா ஸ்வராஜ்யம் கிடைக்கப் பத்து வருஷமாகுமென்று கணக்குப் போட்டிருக்கிறார். ஆறு வருஷத்தில் கிடைத்து விடுமென்று எனக்குத் தோன்றுகிறது' என்பான். தவளையுருவங் கொண்ட மூன்றாமொருவன். "ஆறு மாதமென்று சொல்லடா' என்று திருத்திக் கொடுப்பான்.''
பாரதியாருக்கும் அவர் மனைவிக்கும் நடந்ததாக "ஞானரதம்' என்ற நூலில் வரும் பேச்சு இது:
""தலைநோவு பொறுக்க முடியவில்லை. கொஞ்சம் மிளகு அரைத்துக் கொண்டு வா' என்றேன்.
"ஆமாம்; இரண்டு நாளைக் கொருமுறை இதொரு பொய்த் தலைவலி வந்துவிடும். என்னை வேலை ஏவுகிறதற்காக, பால்காரி வந்து மத்தியானம் பணம் கேட்டுவிட்டுப் போனாள். ராயர் வீட்டு அம்மா குடிக்கூலிக்கு ஞாபகப்படுத்தச் சொன்னாள்... தெருவிலே போகிற நாய்களுக்கெல்லாம் பணத்தை வாரி இறைக்கிறது. வீட்டுச் செலவைப் பற்றிக் கேட்டால் முகத்தைச் சுளிக்கிறது. இப்படிச் செய்து கொண்டே வந்தால், அப்புறம் என்ன கிடைக்கும்? மண்தான் கிடைக்கும்'' என்று ஆசீர்வாதம் பண்ணிப் பிரசங்கத்தை முடித்தாள்.
""தலை நோவு தீர்ந்து விட்டது. நீ 
தயவு செய்து கீழே போகலாம்' என்று வணக்கத்துடன் தெரியப்படுத்திக் கொண்டேன்.''
அவருடைய வணக்கத்திலே நகைச்சுவை பொங்கி எழுகின்றது.
"ஹாஸ்ய விலாசம்' என்ற தலைப்பிட்டே பாரதியார் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதிகாரிகள் செய்யும் காரியங்கள் பல சமயங்களிலே மிக வேடிக்கையாக இருக்கும் என்று அதிலே அவர் ஒரு சம்பவத்தை எடுத்துக்காட்டிச் சிரிக்கிறார். அவரே எழுதுகிறார்: ""கணக்குப் பதிவாளரின் அதிகாரத்தில் ஏற்படும் விசித்திரங்கள் கணக்கில்லாதன.  யுத்தத்தில் ஒரு மனிதன் செத்து விட்டதாகக் கணக்குப் பண்ணி விட்டார்கள். பிறகு அவனே அந்தக் கணக்குக் கூடத்துக்கு வந்து, தான் உயிரோடிருப்பதாகவும், தன்னை இறந்ததாகக் கணக்கிட்டது தவறென்றும் தெரிவித்தான். அதற்கு அதிகாரி, "போ, போ, இங்கு நில்லாதே! நீ செத்துப் போனதாக நாங்கள் பதிவு செய்தாய் விட்டது. இனி நீ வந்து அதனை மறுப்பதில் பயனில்லை. ஓடிப்போ ' என்று துரத்தினார். இது உண்மையாக நடந்த செய்தி. மஹாயுத்த காலத்தில் நடந்தது. அதிகாரிகள் இத்தகைய காரியங்கள் செய்வதில் சமர்த்தர். 
இம்மாதிரி பாரதியாருடைய உரைநடை நூல்களிலே நகைச்சுவை பல இடங்களிலே வெளிப்படுகின்றன. அவற்றைச் சந்தர்ப்பத்தோடு சேர்த்துப் படிக்கும் போது மிகவும் இன்பம் பெறுகின்றோம்.
வாழ்க்கை இன்பத்தைப் பெருக்குவதில் நகைச்சுவைக்குச் சிறந்ததோர் இடமுண்டு. நாம் அதைப் போற்ற வேண்டும். அதை உயர்ந்த இலக்கிய 
வழியிலே நமக்குக் கொடுத்தவர்களில் பாரதியாரும் ஒருவராவார். 

("தூரன் கட்டுரைகள்' என்ற நூலிலிருந்து....)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com