சுடச்சுட

  
  tm1

  இந்த வாரம் பகுதியில் 31.3.2013-இல், திருத்தணி பவானி மருத்துவமனை டாக்டர் பி.கே.கேசவராம் என்னிடம், "இன்னும் ஏன் தமிழ்நாடு (THAMIZH NADU) என்று ஆங்கிலத்தில் எழுதாமல், அதிகாரப்பூர்வ அரசு ஆவணங்கள் உள்பட "டமில்நாடு'(TAMIL NADU) என்று எழுதுகிறோம்?'' என்று வருத்தப்பட்டது குறித்து பதிவு செய்திருந்தேன். "டமில்நாடு' எப்போது அதிகாரப்பூர்வமாக "தமிழ்நாடு' என்று அழைக்கப்படப் போகிறது என்று வினவியிருந்தேன். 
  இப்போது சுமார் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கேள்விக்கு விடை கிடைக்க இருக்கிறது. தமிழக அரசு "டமில்நாடு' என்பதை "தமிழ்நாடு' (THAMIZH NADU) என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்ய இருப்பதாக அமைச்சர் க. பாண்டியராஜன் அறிவித்திருக்கிறார். விரைவிலேயே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதற்காகக் காத்திருக்கிறோம்.

  தில்லிக்குச் சென்றிருந்தபோது சஞ்சய் காந்தியின் மகனும், மக்களவை உறுப்பினருமான வருண் காந்தியை சந்திக்கச் சென்றிருந்தேன். ஜனதா ஆட்சிக் காலத்தில் சஞ்சய் காந்தியும், மேனகா காந்தியும் நடத்திய "சூர்யா' இதழில் நான் பணியாற்றும்போது, வருண் காந்தி கைக்குழந்தை. இப்போது இந்தியாவின் முக்கியமான அரசியல்வாதிகளில் ஒருவராகப் பரிணமித்திருக்கிறார்.
  வருண் காந்தியின் சேகரிப்பில் விலைமதிக்க முடியாத பல அரிய கலைப்பொருள்கள் இருக்கின்றன. நுண் கலைகளில் அவருக்கு இருக்கும் ஆர்வமும் ரசனையும் அவரது வீட்டின் சுவர்களை அலங்கரிக்கும் ஓவியங்களிலிருந்து வெளிப்பட்டன. முகச் சாயலில் அவருடைய தாத்தா பெரோஸ் காந்தியை நினைவுபடுத்தும் வருண் காந்தியும், அவரைப் போலவே பதவி அரசியலில் ஆர்வம் இல்லாமல் இருக்கிறார். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்கள் குறித்தும், அந்த மாநிலங்களின் பிரச்னை குறித்தும் தெளிவான புரிதலுடன் அவர் இருப்பது வியப்பை ஏற்படுத்தியது.
  சமீபத்தில் "கிராமப்புற இந்தியா' என்றொரு புத்தகம் எழுதி வெளியிட்டிருக்கிறார் அவர். அதில், இந்திய கிராமங்களின் பிரச்னைகளான வேளாண் இடர், வேலைவாய்ப்பின்மை, வறுமை, கல்வித்தரம் ஆகியவை குறித்து மிகப்பெரிய ஆய்வை மேற்கொண்டு அவற்றுக்கான தீர்வைப் புள்ளிவிவரங்களுடனும், தக்க ஆதாரங்களுடனும் நிறுவியிருக்கிறார் அவர். 
  தனது மக்களவைத் தொகுதியான சுல்தான்பூரில் அவர் செயல்படுத்தி வரும் திட்டம் குறித்துச் சொன்னபோது, வியந்து பாராட்டத் தோன்றியது. தினந்தோறும் வசதி உள்ளவர்களிடமிருந்து குறைந்தது இரண்டு சப்பாத்திகள் வீட்டுக்கு வீடு தன்னார்வத் தொண்டர்களால் பெறப்படுகின்றன. அந்த மக்களவைத் தொகுதியின் எல்லா வட்டங்களிலும் நிறுவப்பட்டிருக்கும் சமையல் அறைகளிலும், அந்த சப்பாத்தியுடன் சேர்த்து உண்பதற்கான காய்கறிகளும் சமைக்கப்படுகின்றன. தனது தொகுதியில் யாரும் உணவில்லாமல் இருக்கலாகாது என்பதை பொதுமக்களின் உதவியுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டுகிறார் வருண் காந்தி. அதேபோல, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அவர்களே ஒருங்கிணைந்து அவரவர் கிராமங்களில் உருவாக்குவதற்கு உதவி செய்து, மிகப்பெரிய கிராமப் புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
  "மக்களவை உறுப்பினராக இருந்து நான் சாதித்ததை விட, மக்களில் ஒருவனாக அவர்களுடன் இணைந்து செயல்பட்டு சாதித்திருக்கிறேன். அதனால், வரும் மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடுவதாக இல்லை. பதவி அரசியலுக்கு மாற்றாக ஆக்கப்பூர்வ அரசியலை உருவாக்குவது குறித்தும் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன்'' என்று வருண் காந்தி சொன்னபோது, அவரது முயற்சி இந்திய அளவில் வெற்றிபெற வேண்டும் என்று மனதார வாழ்த்தினேன்.

  கடந்த நூற்றாண்டின் தலைசிறந்த தமிழ் ஆளுமைகளில் நாரண.துரைக்கண்ணன் குறிப்பிடத்தக்கவர். எழுத்தாளராகவும், இதழியலாளராகவும் அவர் செய்திருக்கும் பங்களிப்பு குறித்து இன்றைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டும். பரலி சு.நெல்லையப்பர் நடத்திவந்த "லோகோபகாரி' இதழில் உதவி ஆசிரியராக தனது இதழியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் நாரண.துரைக்கண்ணன். 
  ராஜாஜி, வ.உ.சி. மட்டுமல்லாமல் பம்மல் சம்பந்த முதலியார், "கலைவாணர்' என்.எஸ்.கிருஷ்ணன், மறைமலையடிகள், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் என்று கடந்த நூற்றாண்டின் பல்வேறு ஆளுமைகளுடனும் பழகும் வாய்ப்பைப் பெற்றவர். பெüர்ணமி நாள்களில் பக்கிங்ஹாம் கால்வாய் வழியாக பாவேந்தருடன் தோணியில் மகாபலிபுரத்துக்குப் பயணம் சென்ற அனுபவத்தைப் பெற்றவர்.
  நாரண.துரைக்கண்ணனுடன் நெருங்கிப் பழகி, அவருடைய கட்டுரைகளைத் தான் நடத்திவந்த "முகம்' இதழில் தொடர்ந்து வெளியிட்டவர் மாமணி. "பத்திரிகை உலக முன்னோடி நாரண. துரைக்கண்ணன் வாழ்வும் பணியும்' என்கிற தலைப்பில் "முகம்' இதழில் வெளிவந்த கட்டுரைகளை அவர் தொகுத்து வெளியிட்டிருக்கிறார். நாரண.துரைக்கண்ணன் ஆசிரியராக இருந்து நடத்திய "பிரசண்ட விகடன்' இதழில் காமராஜர் கட்டுரைகள் எழுதியிருக்கிறார் என்கிற செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தும். 
  நாரண.துரைக்கண்ணன் கட்டுரைகளையும், அவர் குறித்த பதிவுகளையும் தொகுத்து வெளியிட்டிருக்கும் "முகம்' மாமணி புதுக்கவிதைகள், சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் என்று 20-க்கும் அதிகமான நூல்களைப் படைத்தவர். 

  சென்ற முறை கோவைக்குச் சென்றிருந்தபோது வழக்கம்போல "விஜயா பதிப்பகம்' சென்று புத்தகங்களை நோட்டமிட்டுக் கொண்டிருந்தேன். கவிஞர் யுகபாரதி ஆரம்ப காலத்தில் எழுதிய புத்தகங்கள் வரிசையாக இருந்தன. அனைத்தையும் அப்படியே அள்ளி எடுத்துக் கொண்டேன். அதில், 2007-இல் வெளிவந்த "கண்ணாடி முன்' என்கிற கட்டுரைத் தொகுப்பில் தனது சமகாலக் கவிஞர்கள் பலருடைய கவிதைகளைப் படித்து, வியந்து, சிலாகித்துப் பதிவு செய்திருக்கிறார். அதில், யுகபாரதி ஒரு கலாரசிகராக ரசித்திருக்கும் வித்யா ஷங்கரின் கவிதை என்னை ரசிக்கவும், சிரிக்கவும் வைத்தது.

  கருப்பட்டி மிட்டாய்க்கு
  பிள்ளை அழ
  பலத்த கைத்தட்டலுக்கிடையே
  கரகாட்டக்காரிக்கு
  ராசாத்தேவர்
  அன்பளிப்பு
  நூத்தியொன்னு..

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai