சுடச்சுட

  
  tiruvalluvar

  மா.கி. இரமணன் எழுதிய "கம்பர் காட்டும் மணவிலக்கும் மறுவிலக்கும்' கட்டுரைக்கு(20.1.19) எதிராக, "திருக்குறளில் மணவிலக்கு மறைமுகமாக உள்ளது' (27.1.19) என்று க.பூபதி எழுதியுள்ளார். மா.கி. இரமணன் கூறியுள்ளது முற்றிலும் உண்மை.
   சங்க காலத்திலும், திருக்குறளிலும் காதலன் பிரிந்தால் அல்லது ஊடல் கொண்டால், கருத்து வேறுபட்டால் மணவிலக்கு அளித்ததாக எங்கும் இல்லை. காதலன்- காதலி மனம் வேறுபடுத்தலை ஊடல், புலவி என்பர். இந்த ஊடல் காமத்தை மிகுதிப்படுத்தும். ஊடல் தீர்ந்த பிறகு கூடல் தமிழ்ப் பண்பு. இதை திருவள்ளுவர் கூறியுள்ளார்.
   மாதவியோடு ஊடல் கொண்டு கோவலன் பிரிந்து சென்ற பிறகு, மாதவி மறுமணம் செய்து கொள்ளவில்லையே! துறவுதானே மேற்கொள்கிறாள். இதுதான் தமிழர் பண்பாடு. எந்த இடத்திலாவது கணவன் பகை கொண்டான், சண்டையிட்டான், ஊடல் கொண்டான் என்பதற்காக மனைவி மறுமணம் செய்து கொண்டாள் என்று க.பூபதியால் சங்க இலக்கியத்திலிருந்து சான்றுகாட்ட முடியுமா?
   க.பூபதி எடுத்துக்கொண்ட இரண்டு குறட்பாக்களும் (887, 888)இன்பத்துப்பாலில் உள்ளன. இவ்விரண்டு குறட்பாக்களும் அந்தக் காலத்தில் வாழ்ந்த கூட்டுக் குடும்பத்துக்குச் சொல்லப்பட்டதே அன்றி, அக்குடும்பத்தில் வாழும் கணவன் மனைவிக்குக் கூறப்பட்டதல்ல.
   கட்டுரையாளர், கணவன்-மனைவிக்கு இடையே உள்ள உறவுக்கு 1122-ஆவது குறட்பாவை எடுத்துக் காட்டுகிறார். இங்கு நட்பு என்பதற்கு "காதல்' என்றே பொருள்கொள்ள வேண்டும். ஆக, கணவனுக்கும் மனைவிக்கும் இடையே ஏற்படும் மனவேறுபாடு - ஊடல் "பூசலே' தவிர, மறுமணத்துக்கு வழிவகுக்கும் காரணமல்ல. அக்காலத்தில் கணவனைப் பிரிந்து மறுமணம் செய்து கொண்டவர்களின் பட்டியலைக் கட்டுரையாளரால் பட்டியலிட முடியுமா? முடியாது.
   -புலவர் து. அரங்கன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai