இந்த வாரம் கலாரசிகன்

மிகுந்த பொருட் செலவில் திருமணங்களை நடத்துவது என்பது வழக்கமாகியிருக்கிறது.
இந்த வாரம் கலாரசிகன்

மிகுந்த பொருட் செலவில் திருமணங்களை நடத்துவது என்பது வழக்கமாகியிருக்கிறது. திருமணத்துக்கு செலவு செய்வதைப் போலவே அதிக பொருட் செலவில் அழைப்பிதழ்களை அச்சடித்து, தங்களது வளமையையும், பெருமையையும் வெளிக்காட்டும் போக்கு பரவலாகவே காணப்படுகிறது. கடந்த வாரத்தில் நடந்த இரண்டு முக்கியமான திருமணங்களுக்காக எனக்கு அனுப்பப்பட்டிருந்த அழைப்பிதழ்கள் சற்று வித்தியாசமானவை. திருமணம் முடிந்த பிறகு, தூக்கி எறிந்துவிட முடியாத அழைப்பிதழ்கள் அவை.
 முதலாவது, கற்பகம் புத்தகாலய உரிமையாளர் நல்லதம்பியின் மகன் ஜெயேந்திரன் - பூங்கொடி பதிப்பகம் உரிமையாளர் வேலு சுப்பையா ஐயாவின் பெயர்த்தி சங்கீதா திருமண அழைப்பிதழ். இரண்டாவது அழைப்பிதழ், பாலிமர் தொலைக்காட்சியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் கல்யாண சுந்தரத்தின் மகன் வருண் - மருத்துவர் பிரியதர்ஷினி ஆகியோரின் திருமண அழைப்பிதழ். இரண்டு அழைப்பிதழ்களும் அழைப்பிதழ்களாக மட்டுமல்லாமல், போற்றிப் பாதுகாக்கும் புத்தகங்களாகவும் இருக்கின்றன என்பதுதான் பாராட்டுக்குரியது.
 செல்வன் ஜெயேந்திரனின் திருமண அழைப்பிதழுடன் இணைந்திருக்கிறது கவிஞர் பத்மதேவன் எழுதிய "இந்தக் கணத்தில் வாழுங்கள்' என்கிற புத்தகம். "நிறைவான, நிரந்தரமான மன அமைதி நமக்குள்ளேயே இருக்கிறது. அதைப் பெறுவதற்கு சில மனப்பாங்குகளை மாற்றிக்கொண்டால் போதும்; மனப்பக்குவத்தை வளர்த்துக் கொண்டால் போதும்' என்பதை எடுத்துரைக்கிறது பத்மதேவனின் புத்தகம்.
 பாலிமர் அதிபர் கல்யாண சுந்தரத்தின் இல்லத் திருமண விழாவையொட்டி அனுப்பியிருந்த அழைப்பிதழ், சாமி. சிதம்பரனாரின் கருத்துரையும், ஜி.யு. போப்பின் ஆங்கிலக் கவியுரையும் கொண்ட திருக்குறளுடன் இணைக்கப்பட்டிருந்தது.
 நேர்த்தியாகத் தயாரிக்கப்பட்டிருந்த இரண்டு புத்தக அழைப்பிதழ்களும் பொருட் செலவுடன் தயாரிக்கப்படும் திருமண அழைப்பிதழ்களுக்கு முன்னுதாரணமாக மாற வேண்டும் என்பது எனது விருப்பம். இதன் மூலம் தமிழைப் பரப்பியதாகவும் இருக்கும்; வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதாகவும் இருக்கும்; இல்லந்தோறும் நூலகங்கள் ஏற்படுத்துவதற்கான ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் அமையும்.
 
 நெல்லையில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சுந்தரனார் விருது வழங்கும் விழாவும், "பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள்' என்கிற புத்தக வெளியீட்டு விழாவும் நடைபெற்றன. முனைவர் அ.ராமசாமி, முனைவர் ஞா.ஸ்டீபன் ஆகியோர் பதிப்பாசிரியர்களாகவும், முனைவர் நா. இராமச்சந்திரன் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையும், பதிப்புத் துறையும் இணைந்து வெளியிட்டிருக்கும் தொகுப்பு "பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள்'.
 சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பினராகவும், திருவனந்தபுரம் மகாராஜா கல்லூரியில் அறிவுநூற் புலவருமாய் இருந்தவர் ராவ் பகதூர் பேராசிரியர் பி.சுந்தரம் பிள்ளை என்று சொன்னால் பரவலாக அனைவருக்கும் தெரியாது. ஆனால், மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை என்று சொன்னால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. "நீராரும் கடலுடுத்த ...' என்கிற தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் அவரது ஆக்கம் எனும்போது, அந்தப் பெருந்தகையின் தமிழ்ப் பங்களிப்பு தலைமுறை கடந்து நிலை பெறுகிறது.
 மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அவரது பெயரால் அமைந்திருந்தும்கூட, 28 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அவருடைய படைப்புகள் அந்தப் பல்கலைக்கழகத்தால் தொகுக்கப்பட்டு, புத்தக வடிவம் பெறுகிறது. பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் படைப்புகளான மனோன்மணீயம், சிவகாமி சரிதை, நூற்றொகை விளக்கம் ஆகியவை மட்டுமல்லாமல், அவருடைய கவிதைகள், கடிதங்கள், கட்டுரைகள் ஆகியவையும் "பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள்' தொகுப்பில் இடம்பெறுகின்றன.
 42 ஆண்டு காலம் மட்டுமே வாழ்ந்து மறைந்த பேராசிரியர் சுந்தரம் பிள்ளையின் சாதனை வியப்பில் ஆழ்த்துகிறது. சென்ற நூற்றாண்டு இறுதியிலே பெரும்புகழ் பெற்று விளங்கிய தமிழ்ப் பெரியார்கள் என்று எஸ். வையாபுரிப் பிள்ளை ஆறு பேரைக் குறிப்பிடுகிறார். "சி.வை.தாமோதரம் பிள்ளை, வி.கனகசபைப் பிள்ளை, மாயூரம் வேதநாயகம் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், "ராஜமையர்' என்று பெயர் வழங்கப்பெற்ற சுப்பிரமணிய ஐயர், பெ.சுந்தரம் பிள்ளை ஆகிய அறுவரும் ஆங்கிலம் கற்று, மேனாட்டுக் கலைப் பண்புகளில் திளைத்து, தம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு ஒவ்வொரு வகையில் தொண்டு புரிந்தவர்கள்'' என்று பதிவு செய்கிறார்.
 சுந்தரம் பிள்ளை எழுதிய "மனோன்மணீயம்' நாடகம் தமிழில் தோன்றிய புதுவகை நாடகத்தின் தொடக்கம் எனலாம். வடிவு ரீதியாக மட்டுமல்லாமல் உள்ளடக்க நிலையிலும் ஐரோப்பியத் தாக்கம் கொண்ட நாடகம். மனோன்மணீயம் சுந்தரனார், விவேக சிந்தாமணி இதழில் எழுதிய கட்டுரைகளும் இணைக்கப்பட்டிருப்பது இந்தத் தொகுப்பின் சிறப்பம்சம்.
 மேனாள் துணைவேந்தர் முனைவர் கி.பாஸ்கரின் பதவிக்காலம் நிறைவு பெறுவதற்கு முன்னால், "பேராசிரியர் சுந்தரனார் ஆக்கங்கள்' தொகுப்பு அவரால் வெளியிடப்பட்டது. அதைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது நான் பெற்றப் பெரும் பேறு.
 
 கற்பகம் புத்தகாலயத் திருமண "புத்தக அழைப்பிதழ்' குறித்துக் குறிப்பிட்டிருந்தேன். அந்த அழைப்பிதழில் கவியரசு கண்ணதாசனின் திருமண வாழ்த்துக் கவிதை வெளியிடப்பட்டிருந்தது. இந்த வாரக் கவிதையாக கவியரசின் மண வாழ்த்தைப் பதிவு செய்கிறேன்.
 இல்லற மென்னும் நல்லறம் சேர்ந்து
 இன்பம் துன்பம் இரண்டிலும் இணைந்து
 ஏற்றமோ தாழ்வோ எதையும் பகிர்ந்து
 மாற்றமில்லாத மனத்தோடும் மகிழ்ந்து
 அந்தியும் பகலும் அவளும் அவனும்
 மந்திரம் போட்டு மயங்கியவர் போல
 வாழும் வாழ்வே வளமிகு வாழ்வாம்!
 அவ்வழி மணமகன் அன்புறு மணமகள்
 ஒன்றாய் இணையும் உயர்வுறு திருநாள்
 இன்றே! அவர்கள் இல்லறம் ஏற்று
 கண்ணும் இமையும் கலந்தது போல
 வாழிய எனவே வாழ்த்தும் யாமே
 வாழிய மனையறம் வாழிய வாழிய!
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com