நற்றிணை காட்டும் நற்பண்புகள்

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும்.
நற்றிணை காட்டும் நற்பண்புகள்

காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வாழ்ந்தவர்கள் சங்ககால மாந்தர்கள். அத்துடன் கூர்த்தமதி உடையவர்கள் என்பதை அவர்தம் பாடல்கள் தெளிவாய் எடுத்துரைக்கும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான நற்றிணை காதல், அன்பு, இல்வாழ்க்கை முதலிய அக வாழ்வு முறைகளை எடுத்தியம்புகிறது. நற்றிணை கூறும் நற்பண்புகள் சிலவற்றைக் காண்போம்.
 அன்பு:
 தலைமக்கள் இருவரும் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள்ள அன்பின் வலிமையைப் பறைசாற்றிச் செல்கிறது இப்பாடல். தலைவன் தலைவியைக் காணக் காலம் தாழ்த்துதலைத் தோழி சுட்டிக்காட்டும் வேளையில், தோழிக்குத் தலைவி "என் தலைவன் எப்படிப்பட்டவன் தெரியுமா?' என்று கூறுவதுபோல் அமைந்துள்ளது " நின்ற சொல்லர் நீடுதோறு இனியர்' (பா.1) என்கிற பாடல்.
 "என் தலைவன் சொன்ன சொல் தவறாதவன். மனத்தில் நினைக்கும்தோறும் இனிமையைத் தருபவன். எங்களுக்குள் உண்டான அன்பு எத்தகையது தெரியுமா? குளத்தில் மலர்ந்துள்ள தாமரை மலரில் எடுத்த தேனை மலை உச்சியிலே இருக்கும் சந்தன மரத்தின் கிளையில் கொண்டுபோய் அங்குள்ள தேன்கூட்டில் தேனை சேகரிக்கும் வண்டு. அப்படிச் சேகரித்த தேனின் குணம் எவ்வளவு உயர்வானதோ அதைப் போன்றது. அதுமட்டுமல்ல. உலக இயக்கத்துக்குத் தண்ணீர் எவ்வளவு இன்றியமையாததோ அதைப் போன்றது (எங்களுக்குள்) நாங்கள் கொண்டு
 ள்ள அன்பு என்பதைப் பறைசாற்றிச் செல்கிறது கபிலரின் இப்பாடல்.
 அறக் கருத்துகள்:
 அறம் என்பதற்கு அகராதிகள் பல்வேறு பொருள்களைக் குறிப்பிடினும், தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உடலாலும் மனத்தாலும் தீங்கு நேராதவண்ணம் வாழ்வை நகர்த்திச் செல்லும் வழிமுறையைக் கற்றுக் கொடுப்பவற்றை அறங்கள் எனலாம். இந்த அறங்களைத் தனிமனிதனுக்கு, குடும்பத்திற்கு, சமூகத்திற்கு, அரசனுக்கு நாட்டிற்கு என்று வகைப்படுத்தினும் சமூகம் சமநிலையில் தத்தமது அன்றாடப் பணிகளை மேற்கொள்ளத் துணையாக அறங்களைக் கொள்ளுதல் மரபு. அவ்வகையில், நற்றிணையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் பலவற்றுள் ஒருசோறு பதமாக ஒன்றைக் காண்போம்.
 தலைவியைக் காணாது வருந்துகிறான் தலைவன். தோழி சொல்லைத் தலைவி கேட்டபாடில்லை. தலைவன் மீது தீராத ஊடல் கொண்டுள்ள தலைவியைத் தேற்றுதல் உடனடியாக நடக்காது என்பதைப் புரிந்துகொண்ட தோழியின் கூற்றாக அமைந்த பாடல் இது.
 மலையிலிருந்து வீழும் அருவி எப்படி இருந்தது என்பதைக் கூறவந்த தோழி, ""தலைவியே, நீ வீணாகத் தலைவன் மீது குற்றம் சுமத்தாதே. நம் சமூகத்தின் வழக்கம் என்ன தெரியுமா? நமக்கு ஒரு விஷயத்தில் ஐயம் ஏற்படின் அந்த ஐயத்தை நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுதலாகும். எனவே, நான் சொல்வது உனக்கு உண்மையெனத் தோன்றவில்லையெனில் நான்கு பேரிடம் கேட்டு சந்தேகத்தைப் போக்கிக்கொள்'' என்கிறாள். மேலும் அவள்,
 "அம்மலை கிழவோன் நம் நயந்து என்றும்
 வருந்தினன் என்பது ஒர் வாய்ச்சொல் தேறாய்;
 நீயும் கண்டு நுமரொடும் எண்ணி
 அறிவு அறிந்து அளவல் வேண்டும். மறுத்தரற்கு
 அரிய வாழி தோழி! - பெரியோர்
 நாடி நட்பின் அல்லது,
 நட்டு நாடார் தம் ஒட்டியோர் திறத்தே' (பா.32)
 என்ற பாடல் மூலம் எடுத்துரைத்து ஒருவருடன் நட்பு கொள்ளுமுன் அவரைப் பற்றி நன்கு ஆராய்ந்து பார்த்தபின்பு நட்பு கொள்ள வேண்டும். அப்படி நட்பு கொண்டபின் ஆராயக் கூடாது என்னும் அறத்தை முன்னிறுத்துகிறாள் தோழி. இப் பாடல் வள்ளுவரின் "நாடாது நட்டலிற்' எனும் திருக்குறளை நினைவூட்டுகிறது.
 தலைவன் - தலைவி அன்பு:
 தலைவியைப் பிரிந்து பொருள் தேடச்சென்ற தலைவன் வினை முடித்துத் திரும்புகிறான். தலைவியைக் காணும் ஆவலில் தேர்ப்பாகனிடம் கூறுவதாய் அமைந்த இப்பாடல் தலைவி மீது தலைவன் கொண்ட அன்புக்குக் கட்டியம் கூறுவதாய் அமைந்திருக்கிறது.
 "உடும்பு கொலீஇ வரி நுணல் அகழ்ந்து,
 நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல் கெண்டி,.
 எல்லு முயல் எறிந்த வேட்டுவன் கவல
 பல்வேறு பண்டத் தொடை மறந்து இல்லத்து
 இருமடைக் கள்ளின் இன்களி செகுக்கும்
 வன்புலக் காட்டு நாட்டதுவே - அன்பு கலந்து
 நம்வயின் புரிந்த கொள்கையொடு, நெஞ்சத்து
 உள்ளினள் உறைவோள் ஊரே' (பா.59)
 அந்த ஊரில் வேடுவன் ஒருவன் உடும்பைக் கொன்று தின்றும், வரித் தவளையை அகழ்ந்து எடுத்தும், புற்றுக்களை வெட்டி அப்புற்றுக்களில் இருக்கும் ஈசல்களை உண்டும், பகற்பொழுதில் முயல்களை வேட்டையாடியும் உண்ணும் இயல்புடையவன். தான் தோளில் சுமந்து வந்த பல்வேறு பண்டங்கள் அடங்கிய சுமைகளை ஓரிடத்தில் இறக்கி வைத்துவிட்டு நிம்மதியாக உறங்குகிறான்.
 ஆனால், அத்தகைய தலைவியின் ஊரில் தலைவி மட்டும் என்னையே நினைத்துக்கொண்டு வருந்துவாள். மேலும், அவளை வருந்தச் செய்தல் நமக்கு நல்லதல்ல எனக் கூறி, தேரை விரைவாகச் செலுத்துமாறு பாகனை வேண்டுகிறான் தலைவன். இக்காட்சி தலைமக்கள் ஒருவருக்கொருவர் எத்தகைய புரிதலுடன் இருக்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறது.
 நிலையாமை:
 சங்க இலக்கிய அக நூல்களில் நிலையாமை குறித்த கருத்துகளையும் ஆங்காங்கே காணமுடிகிறது. அதற்கு எடுத்துக்காட்டாக 46-ஆவது பாடல் தக்க சான்றாகத் திகழ்கிறது. இவ்வாறு நற்றிணைப் பாடல்களில் காணப்படும் நற்பண்பை வளர்க்கும் கருத்துகள் அக்கால மக்கள்தம் வாழ்க்கை நிலைகளைப் பறைசாற்றுவதாகவும், ஏதேனும் ஒரு நற்கருத்தைக் கூறுவனவாகவும் அமைந்திருக்கின்றன.
 -முனைவர் க. சிவமணி
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com