வெறியாட்டு

மருத்துவ அறிவியல் முன்னேற்றம் இல்லாத சங்க காலத்தில் வீட்டிலுள்ள மகளிர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடலும், மனமும் மாறுப்பட்டதாய் இருப்பின் இன்ன நோய் என
வெறியாட்டு

மருத்துவ அறிவியல் முன்னேற்றம் இல்லாத சங்க காலத்தில் வீட்டிலுள்ள மகளிர் மற்றும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உடலும், மனமும் மாறுப்பட்டதாய் இருப்பின் இன்ன நோய் என அறியாதவர்களாய் "வெறியாட்டு' நிகழ்ச்சி நடைபெறும் இடம்தேடி அழைத்துச் செல்வார்கள்.
 "வெறியாட்டு' என்பது முருகப்பெருமானைத் தொழுது வணங்கும் வேலன் என்ற இறைத்தொண்டு புரிபவர் மனம், மெய்யால் மாறுபட்டவர்களை அமர வைத்துச் சில சடங்குகளைச் செய்து, இது தெய்வக் குற்றமெனக் கூறி அதற்கான பரிகாரங்களைச் சொல்லி, அதைச் செய்தும் அனுப்பி வைப்பார்.
 தலைவியின் காதலை உணராமல், அவளுடைய அன்னை தலைவியின் நோய் போகவேண்டி, வெறியாடல் நிகழ்த்துகிறாள். நோய் வேலனால் விளைந்தது என வெறியாடலை வழிநடத்துவோரும் கூற, அன்னையும் அதை நம்புகிறாள். உண்மையில் துன்பத்திற்குரிய இந்தச் சூழலிலும், தலைவியின் இல்லத்தாரை எண்ணி தோழி சிரிக்கிறாள். தலைவனும் இதனை வந்து பார்க்க வேண்டும், சிரிக்க வேண்டும் என்கிறாள்.
 தோழி தலைவியிடம் சிறைப்புறம் உள்ள தலைவனுக்குக் கேட்க இதைப் பேசுகிறாள். துன்ப நிகழ்வை அப்படியே கூறாமல், எதிர்நிலையாகக் கூறுவதால், தலைவன் முனைப்பாக வரைவு முடுக்கப்படுதலும், தலைவியின் துன்பம் தீர வழியாதலாலும் நிகழ்வது குறிப்பிடத்தக்கது.
 "மென்தோள் நெகிழ்ந்து செல்லல், வேலன்
 வென்றி நெடு வேள் என்னும் அன்னையும்
 அது என உணருமாயின் ஆயிடைக்
 கூழை இரும்பிடிக்கை கரந்தென்ன
 கேழ்இறுந் துறுகல் கெழுமலை நாடன்
 வல்லே வருக தோழி! - நம்
 இல்லோர் பெருநகை காணிய சிறிதே!' (குறு. 111: 1-7)
 "முருகக் கடவுளால் இந்நோய் இவளுக்கு வந்தது என வேலன் ஆடுவான், பாடுவான். அன்னையும் அதனை நம்புவாள். அப்பொழுது இதனை, யானை போல் குண்டு குண்டு கற்பாறைகள் உள்ள மலைநாடன் அவர்கள் அறியாமையைக் கண்டு நகைப்பான். அந்த நகைப்பைக் காண அங்கு செல்லலாம் வா!' எனத் தலைவியை தோழி அழைத்துப் போவதை தீன்மதிநாகனார் எனும் புலவர் கூறியுள்ளதைப் பார்க்கும்போது, இறை நம்பிக்கை வழிவழியாக வந்துள்ளதை அறிய முடிகிறது.
 -உ. இராசமாணிக்கம்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com