Enable Javscript for better performance
குடும்பம் - மரபும் மாற்றமும்!- Dinamani

சுடச்சுட

  

  குடும்பம் - மரபும் மாற்றமும்!

  By -முனைவர் அரங்க. பாரி  |   Published on : 24th February 2019 02:46 AM  |   அ+அ அ-   |    |  

  sk1

  வையகமே ஒரு குடும்பமாக வேண்டுமென்பது சான்றோர் கருத்தாகும். ""யாதும் ஊரே, யாவரும் கேளிர்'' என உலகைத் தன் உள்ளத்துள் வளைத்துக் கொண்டது தமிழியம். மனிதன் கண்ட அமைப்புகள் யாவற்றிலும் சிறந்தது குடும்பம் என்னும் நிறுவனமேயாகும். இந்த நிறுவனத்தில் குறைகள் இருப்பினும் இதனை விட்டுவிட முடியாது.  இதுவே மனிதப் பண்பாட்டுப் பரிணாமத்தில் பழுத்த கனி; இதுவே மனிதநேய மாண்பின் சின்னம். இந்தக் குடும்ப அமைப்பு பல்லாயிரம் ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கிறது. விழுமியங்களின் இருப்பிடமாவது குடும்பம். இது நேற்று எப்படி இருந்தது, இன்று எப்படி உள்ளது, நாளை எப்படி இருக்கும் எனக் காண்போம்.

  குடும்ப அமைப்பும் உறவுமுறையும்:

  பண்டைக் காலத்தில்  கூட்டுக் குடும்ப அமைப்பே பெரிதும் இருந்துள்ளது. தலைவன் - தலைவி தனித்து வாழும் குடும்ப  அமைப்பும் அறியப் பெறுகின்றது. புறநானூற்றில் பெருஞ்சித்திரனாரின் குடும்பம் கூட்டுக் குடும்ப அமைப்பைச் சித்தரிக்கின்றது. "என் தாய் கோல் கொண்டு மெல்ல நடப்பவள்; சிலந்தி வலை போலச் சுருக்கம் மலிந்த முகத்தினள். என் மனைவி வறுமையில் மெலிந்தவள்; என் குழந்தை தாயின் மார்பில் பால் பெறாது வருந்துவது', (புறம். 159) எனக் கூறும்போது, தாயுடன் வாழும் கூட்டுக் குடும்ப அமைப்பு அறியப்படும்.

  "மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன் ஐ
  யானை எறிந்து களத்தொழிந்தனனே' (புறம். 279)
  என்பதில் தந்தையும் குடும்ப உறுப்பினன் என்றறியப்படும். பாட்டன் உறவு முறை கூறும் பகுதியும் அறியப்படுகின்றது.
  "நுந்தை தந்தைக் கிவன்தந்தை தந்தை
  எடுத்தெறி ஞாட்பின் இமையான்' (புறம். 290)

  எனப் போர் வீரர் குடியில் பாட்டன், தந்தை, மகன் என மூன்று தலைமுறைகள் நடக்கக் காணலாம். குடும்ப அமைப்பில், பல பிள்ளைகள் உடைமையினைப் புறநானூறு காட்டும் (159). அதே போல, குடும்பத்தில் ஒரே மகனுடைய நிலையையும் புறநானூறு காட்டும் (279). "ஒரு குடிப்பிறந்த பல்லோருள்ளும்' என்னும் புறப்பாட்டுப் பகுதி (183) அண்ணன்- தம்பி உறவு முறைகளைச் சொல்லும். உறவிலேயே திருமணம் அமைவதை, "சுடர்த்தொடீஇ கேளாய்' எனத் தொடங்கும் கலித்தொகை காட்டும் (கலி. 50). முன்பு தொடர்பற்ற இருகுடிகள் புதுவதாக மணவினைத் தொடர்பு கொள்வதை "யாயும் ஞாயும்' 
  எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் விளக்கும்.

  கணவன் - மனைவி உறவு:
  பழந்தமிழ் இலக்கியத்தில் கணவன்- மனைவி உறவு வேறு எம்மொழி இலக்கியங்களிலும் கூறப்படாத அளவு பிரிவில்லா ஒருமைப்பாட்டுடன் விளங்குவதாகக் கூறப்படுகிறது.
  "இம்மை மாறி மறுமை யாயினும்
  நீயாகியர் என்கணவனை
  யானாகியர் நின்நெஞ்சு நேர்பவளே (குறுந். 49)

  என்று தலைவி "எல்லாப் பிறப்புகளிலும் நாமே கணவனும் மனைவியும் ஆவோம்' என உரைக்கக் காண்கிறோம்'. "நாம் இரண்டு பேராகப் பிறந்தோம்; பூ இடைப்பட்டாலும் பல ஆண்டுகள் கழிந்தாற் போலத் துயருறுகின்ற அன்றில் பறவைகளென வாழ்ந்தோம். நம் உயிர் எப்போதும் பிரிவின்றி இருந்து போகும் காலத்தில் ஒன்றாகப் போவோம் (குறுந். 57) எனத் தலைவி கூறுகிறாள். பண்டைக்காலத் தலைமக்களின் இல்லறம், பிறவி தோறும் தொடர்வதாகவே கருதப்பட்டது.  கணவன் - மனைவி இருவரும் இணைந்து பேணும் இல்லறத்தைக் "கற்பு வாழ்வு' எனக் குறித்தனர் நூலோர். இந்த இல்லறத்தில் இருவருக்கும் கடமைகள் (குறுந். 135) இருந்தன.
  பல்லாண்டுகளின் இல்லறம் இளமை தீர்ந்து முதுமை எய்தியக் கண்ணும் அன்பகலாத துணைமையொடு தொடரும். இடையில் கொழுநன் இறந்துபடின் தலைவி ஆற்றாத் துயரும் தனிமையும் எய்துவள். அவளுடைய கைம்மை கொடுந்துயர் தருவது
   (புறம். 246).
  மனைவி இறப்பின் கணவனது துயரும் எல்லையின்றிப் போகும். "என் துணைவி இன்னே மறைந்தனள்; நான் இன்னும் வாழ்கின்றேனே' எனக் கோட்டம்பலத்துத் துஞ்சியமாக்கோதை புலம்பக் காண்கிறோம்
  (புறம். 245).

  மரபு மாற்றங்கள்:

  மேற்குறித்த குடும்ப இலக்கணங்கள் காலப் போக்கில் மாறியுள்ளன. இன்று பாலுணர்வு வரையறைகள் நெகிழ்ந்துள்ளன.  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பவற்றை இன்றைய பெண் பண்டைக் கால அளவில் கொள்ள இயலாது. பெண் பணிக்குச் செல்ல வேண்டும்; காவற்பணி பூண வேண்டும்; துப்பாக்கி ஏந்த வேண்டும்; வானூர்தி இயக்க வேண்டும்; சட்டங்கள் இயற்ற வேண்டும்; சமுதாயத்தை ஆளும் அரசியல் தலைமை பூண வேண்டும். இந்நிலையில், பெண்மை என்பதன் இலக்கணம் பெரிதும் மாறியிருக்கிறது.

  பெண்ணின் உரிமை இன்று அவளைப் பல புதிய உலகங்களைக் காணத் தூண்டியுள்ளது. விதியே என்று வாழ்ந்த வாழ்க்கைக் கட்டுப்பாடுகளை உதறிச் சமஉரிமை மறுக்கப்படினும், உடம்பு உடைமைகளுக்கு ஊறு ஏற்படினும் மணவிலக்குப் பெறும் நிலையில் இன்றைய பெண் மகள் உரிமைக் கொடி ஏந்துகிறாள். கைம்மை வேலியை அகற்றி மறுமணத் தோட்டத்திற்குள் புகுகின்றாள். வாழ்க்கை முழுவதும் ஒருவன்- ஒருத்தி என்ற அறம் இன்று மாற்றம் எய்தியிருப்பினும், பெரும்பான்மைச் சமூகம் அந்த நெறியில்தான் சென்று கொண்டிருக்கிறது. மணமுறிவு, மணவிலக்கு என்பன இடம்பெறாத தமிழ்ச் சமூகத்தில் மேலை நாகரிகத் தாக்கத்தால், இவை இடம் பெற்றிருக்கின்றன. ஊர் மன்றங்களும் நீதி மன்றங்களும் உச்சநீதிமன்றமும் ஏராளமான மணவிலக்கு முறையீடுகளை ஆய்ந்து கொண்டிருக்கின்றன. குடும்பத் தகராறு கொலுமண்டபம் ஏறியிருக்கிறது. பல்பிறவிகளிலும் மாறாத இணை என்பது மாறிப் பணிவாய்ப்புகளில் தற்காலிக நிலை என்பது போலவே மணவாழ்க்கையிலும் நிலையாமை குடிகொண்டுவிட்டது.

  திருமணச் சடங்குகள் பழைய முறையில் கட்டாயமானதாகவும், சமூகம் தழுவியதாகவும் இன்று இல்லை. நிலத்தைப் பத்திரப்பதிவு செய்வது போலத் திருமணத்தைப் பதிவுசெய்து கொள்ளும் வழக்கம் உண்டாகியிருக்கிறது. 

  உறவுக்கிளைகள் மலிந்த குடும்பம் என்ற நிலைமாறி கணவன் -மனைவி, பிள்ளைகள் என்ற முக்கோண வாழ்க்கை முறை தோன்றியதில் சிவப்பு முக்கோணம் குடும்ப நடைமுறையாகி உள்ளது.  இதனால் அண்ணன் தம்பிகளைக் காணோம்; மாமன் மாமி, சிற்றப்பா, பெரியம்மா, சின்னம்மாக்கள் அரிதாகி வருகின்றனர்.

  சுருங்கக் கூறின், தமிழ்க் குடும்பம், மேலை வண்ணமும் வடிவமும் பெற்றுவிட்டது. உறவுக் கிளைகள் தோன்றாத தனிச் செடியாக உருவாகியுள்ள இன்றைய குடும்பத்தில் தமிழர்க்கே உரிய ஒப்புரவு விருந்தோம்பல், மனிதநேயம், மதநல்லிணக்கம் போன்ற பண்புப்பூக்களைக் காணோம். தமிழ்க் குடும்பம் ஒன்றைப் பார்த்துத்தான் தீரவேண்டுமென்றால்,  மட்டக்களப்புக்கோ டொரண்டோவுக்கோ போகலாம். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai