சுடச்சுட

  
  tm3

  "நேற்று "தினமணி' சார்பில் சி.இ.ஓ.எ. பள்ளியில் நடந்த மாணவர் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மதுரைக்குப் புறப்படும்போதே முதுமுனைவர் இரா. இளங்குமரனாரை நேரில் சந்தித்து ஆசிபெற வேண்டும் என்று முடிவெடுத்திருந்தேன். திருச்சி அல்லூர் "திருவள்ளுவர் தவச்சாலை'யில் இருந்து, கடந்த 2014 முதல் திருப்பரங்குன்றத்தை அடுத்த திருநகரில் தன் மகனுடன் வசித்து வருகிறார் இளங்குமரனார். அவருக்கு இப்போது அகவை 91.
   அவரது இல்லத்திற்குச் சென்ற எங்களுக்கு பெருவியப்பு! மகன் தெரிவித்தார்- "தந்தை மாடியில் இருக்கிறார்' என்று. அந்த வீட்டின் மாடியில் தனக்கென்று ஒரு தமிழ் உலகத்தை உருவாக்கிக்கொண்டு, இடையறாத எழுத்துப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் இளங்குமரனாரைப் பார்க்கும்போது, அவரது மன உறுதியும், தமிழ் வேட்கையும் மலைப்பை ஏற்படுத்தின.
   ""என் முதுமையாலும், தனித்து இயங்க இயலாமையாலும் முன்பே 30 ஆண்டுகள் வாழ்ந்த இடமும், என் இல்லமும், என் மக்களும் இருப்பதுமாம் மதுரை திருநகர்க்கு மீள வந்து உடல் நலம் பேணி, என் பணி தொய்வின்றி நிகழ வாய்ப்புச் செய்தேன். அச்செயல் இரட்டைப் பங்கு எழுத்துப் பணிக்கு வாய்ப்பாயிற்று'' என்று பதிவு செய்யும் ஐயா இளங்குமரனாரின் நாளும் பொழுதும் எழுதுவதிலும், சிந்திப்பதிலும் கழிகிறது. "இராயப்பேட்டை முனிவர்' என்று அழைக்கப்பட்ட "தமிழ்த் தென்றல்' திரு.வி.க.வை நினைவுபடுத்துகிறது இளங்குமரனாரின் வாழ்க்கை.
   அச்சுக் கோத்தாற்போல முத்து முத்தான கையெழுத்து, இம்மியும் பிசகாத நினைவாற்றல், இந்த வயதிலும் கொஞ்சம்கூடத் தளராத சுறுசுறுப்பும், செயல்பாடும். இதற்கெல்லாம் காரணம், அவர் நேசித்தும், வாசித்தும், யோசித்தும், பூசித்தும் வரும் தீந்தமிழ் என்பதல்லால் வேறு எதுவாக இருந்துவிட முடியும்!
   ஏறத்தாழ 8,000 தமிழ்ச் சொற்களுக்கான பொருள் விளக்கத்தினை மேற்கோள் சான்றுகளுடன் வழங்கியிருக்கிறார் முதுமுனைவர் இளங்குமரனார். அகர முதலிகளில் இடம்பெறாத சொற்கள், மரபுச் சொற்கள், வட்டார வழக்குச் சொற்கள், பழமொழிகள் முதலியவை இக்களஞ்சியத்தில் இடம்பெறுகின்றன. இசை, மருத்துவம், கல்வெட்டு, அறிவியல் ஆகிய துறைகள் சார்ந்த இன்றியமையாத சொற்களுக்கும் பொருள் விளக்கம் தரப்பட்டுள்ளன.
   தமிழ் அகராதி வரலாற்றில் புது வரவான தமிழுக்குத் தனிப்பெருமை சேர்க்கும் இந்தக் களஞ்சியத் தொகுப்பு, மரபுத் தொடர்கள், இணை மொழிகள், ஒலிக்குறிப்புகள் அதன் விளக்கங்கள், சொற்களின் வேரும் விரிவும் என்று அனைத்தும் குவிந்துகிடக்கும் சொற்களஞ்சியம். தமிழ்ச் சான்றோர் எழுதிவைத்த அறிவுச் செல்வங்களைத் தேடி எடுத்து பதிப்பித்து வரும் நண்பர் இளவழகனின் "தமிழ்மண்' பதிப்பகம் இந்த "செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியத்தை' வெளிக்கொணர்கிறது.
   இன்று மாலை நான்கு மணிக்கு சென்னை நந்தனம் புத்தகக் கண்காட்சித் திடலில், முதுமுனைவர் இரா.இளங்குமரனார் உருவாக்கிய "செந்தமிழ்ச் சொற்பொருட் களஞ்சியம்' பத்து தொகுதிகள் முனைவர் தமிழறிஞர் ஒüவை நடராசனின் தலைமையில், சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் மாண்பமை அரங்க. மகாதேவனால் வெளியிடப்படுகிறது. அந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பு எனக்குத் தரப்பட்டிருப்பதை வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்.
   
   
   மதுரை சி.இ.ஓ.எ. பள்ளி நிகழ்ச்சியில் சிறப்புப் பேச்சாளராக கலந்துகொள்ள வந்திருந்தார் பேராசிரியர் தி.இராசகோபாலன். அப்போது அவர் என்னிடம் தந்த தொகுப்பு "நேர்படப் பேசு'. பெரும்பாலான கட்டுரைகள் "தினமணி'யின் நடுப்பக்கத்தில் வெளியானவை. ஒன்றிரண்டு கட்டுரைகள் வேறு பத்திரிகைகளில் வந்தவை.
   இதுவரை 10க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கும் தி.இராசகோபாலனின் பேச்சாளர், பட்டிமன்ற நடுவர், பேராசிரியர், பல்வேறு சமய, இலக்கியப் பணி மன்றங்களின் நிர்வாகி என்கிற பன்முகத் தன்மை கண்டு நான் வியந்துதான் போகிறேன்.
   இந்தக் கட்டுரைத் தொகுப்புக்கு அணிந்துரை வழங்கியிருக்கும் "சொல்லின் செல்வர்' சுகி.சிவத்தின் பதிவு இது - ""மொழி நடை, கருத்துச் செறிவு, சுவைபடச் சொல்லும் திறன், அறப்பற்று, சமூக அக்கறை, பாரதியின் ரெüத்திரம் அனைத்தையும் இந்த நூலில் அனுபவிக்க முடிகிறது. எத்தனை எத்தனை தரவுகள்... தகவல்கள்... தலைப்புகள்... எழுத எடுத்துக்கொண்ட களப்பரப்பு பிரம்மிப்பு தருகிறது. கடும் உழைப்பு... பெரும் படைப்பு இந்நூல்''
   இதில் வெளிவந்திருக்கும் பெரும்பாலான கட்டுரைகளை தினமணி நடுப்பக்கத்தில் அச்சாவதற்கு முன்பே படித்திருந்தாலும் கூட, புத்தகமாகப் படிக்கும்போது புதியதொரு பார்வை தென்படுகிறது. ஒரு வீரத் துறவியின் தேசபக்தி, அந்நியர் வந்து புகல் என்ன நீதி, முதல் சமத்துவப் போராளி ஸ்ரீராமானுசர், தத்தளிக்கும் தண்ணீர் தேசம், நடந்தாய் வாழி காவேரி முதலியவை பாடப் புத்தகத்தில் சேர்க்கப்பட வேண்டிய சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்.
   எந்தவொரு விஷயத்தையும் அதன் பல்வேறு பரிமாணங்களையும் சுட்டிக்காட்டி மேற்கோள்களுடன் பதிவு செய்வது பேராசிரியர் தி.இராசகோபாலனின் எழுத்து பாணி. "நேர்படப் பேசு' அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
   
   
   1965 ஜூலை மாதம் கஸ்தூரி ரங்கனால் தில்லியில் தொடங்கப்பட்ட "கணையாழி' இதழ் தமிழ் இலக்கியத்திற்குச் செய்திருக்கும் பங்களிப்பு நிகரற்றது. 1965 முதல் 1970 வரையிலான ஐந்து ஆண்டுகள் கணையாழி இதழ் எப்படி வெளியிடப்பட்டதோ, அதேபோல அப்படியே தொகுக்கப்பட்டு, வரும் செவ்வாய்க்கிழமை சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியிடப்பட இருக்கிறது. அதன் ஆசிரியர் முனைவர் ம.இராசேந்திரன் கூறுவது போல, ""அச்சுப் பிசகாமல், அச்சுப் பிழையோடு, அச்சாக அப்படியே தொகுக்கப்பட்டிருக்கிறது''
   அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, 1995-2000 காலகட்டத்தில் வெளியான கவிதைகளின் கணையாழி கவிதைகள் தொகுப்பு கண்ணில் பட்டது. அதில் "என் ஊர்-எனக்கான ஊர்' என்கிற கவிஞர் சூர்யாம்புலி 1997 மே இதழில் எழுதிய கவிதை இடம்பெற்றிருக்கிறது.
   மதுக்கடையின் பெயரை வைத்து
   பிரபலமான வீதிகளெல்லாம்
   அடையாளம் பெறும்
   "இப்ப வர சரக்கெல்லாம் சரியில்லப்பா
   எங்க காலத்துல....'
   மலரும் நினைவுகளில் மல்லாந்து
   கிடக்கும் கிழடு!
   இந்த வீதிகளைக் கடந்து போகையில்
   கூனித்தான் போகிறார் என் தாத்தா
   பனைமரத்துக் கள்ளருந்தினார் என்பதற்காக
   என் அப்பாவை பெல்ட்டால் விளாசிய
   எப்போதும் கதராடை அணியும்
   என் தாத்தா!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai