சுடச்சுட

  
  tm1

  அன்பும் அறனும் சேர்ந்ததுதான் நல்வாழ்க்கை. இந்த அன்பு செழிக்க வேண்டுமாயின் இனிமையாகவும், நிதானமாகவும் பேச வேண்டும். திருவாவடுதுறை ஆதீனத்து குல தெய்வம் என்று போற்றப்பெறும் ஸ்ரீ மாதவச் சிவஞான முனிவர், "சோமேசர் முதுமொழி வெண்பா' என்கிற அருமையானதொரு நூலை அருளியுள்ளார். இந்நூலிலுள்ள ஒரு பாடல் நாவடக்கத்தின் சிறப்பை எடுத்துரைக்கிறது.
   "எல்லாம் உணர்ந்தும் வியாதன் இயம்பியவச்
   சொல்லாலே நாவயர்ந்தான் சோமேசா- வல்லமையால்
   யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
   சோகாப்பர் சொல்லிழுக்கப் பட்டு'
   நாவை அடக்கி ஆளாவிட்டால் பெரும் துன்பம் ஏற்படும். காசி நகர் கங்கைக் கரையில் வியாச முனிவர், "பரம்பொருள் யார்?' என்பதை முனிவர்களுக்கு உணர்த்தக் கருதினார். மனம் தெளிவு பெறாமல் , "நாராயணனே பரம்பொருள்' என்று கூறினார். உடனே அவர் கையும் நாவும் செயலற்றுப் போயின.
   அப்போது நாராயணனே தம் கருட வாகனத்தில் தோன்றி, "பரம்பொருள் சிவபிரான் என்று உணர்வாயாக' என்று வியாசருக்கு அறிவுறுத்தினார் (காசிகாண்டம், உபதேச காண்டம்) என்று கூறப்படுகிறது.
   நிதானமாகப் பேசி, கேட்டார் பிணிக்கும் தகையவாய் கேளாரும் வேட்ப மொழிதல் வேண்டும். அன்புடைய பேச்சு உள்ளம், உணர்வு, உயிர் ஆகியவற்றைக் குளிர்விக்கும். பேச்சுக்கு அன்பு இன்றியமையாதது. பகைவனிடத்து அன்பாகப் பேச வேண்டும். முதல் நாள் போரில் ராமன், ராவணனிடம் பேசிய பேச்சு இன்றும் உன்னுந்தோறும் உள்ளத்தை உருக்குகின்றதல்லவா?
   "ஆளை யாஉனக் கமைந்தன மாருதம் அறைந்த
   பூளை யாயின கண்டனை இன்றுபோய்ப் போர்க்கு
   நாளை வாவென நல்கினன் நாகிளங் கமுகின்
   வாளை தாவுறு கோசலை நாடுடை வள்ளல்'
   இராசசூயம் என்ற யாகம் முடிவடைந்த பின் துரியோதனன் தனது துணைவர்களுடன் தருமருடைய சபா மண்டபத்துக்கு வந்தான். குளமில்லாத இடத்தைக் குளம் என்று கருதி அதில் வீழ்ந்து இடர்ப்பட்டான்.
   அப்போது திரௌபதி, "இவன் தந்தைக்குத்தான் விழியில்லையே? இவனுக்கும் விழியில்லையோ?' என்று அவையில் நாவடக்கமின்றி சொன்னாள். அதன் விளைவு, திரௌபதியும் பாண்டவர்களும் துன்புற்றது. "நாவன்றோ நட்பறுக்கும்' என்கிறது நான்மணிக்கடிகை. "நாவினால் சுட்டவடு ஆறாது' என்கிறார் திருவள்ளுவர்.
   ஆகவே, சொல்லை அளவோடு பேசி அன்புடனும், நட்புடனும் வாழ முற்பட வேண்டும். அப்போதுதான் வாழ்வு வளம் பெறும். நல்லன எல்லாம் தரக்கூடியது நாவடக்கம் ஒன்றே!
   
   -சே. ஜெயசெல்வன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai