புலவர்கள் போற்றிய பிட்டங்கொற்றன்!

நேற்று ஒரு பொருளைப் பெற்றால் இன்று மறந்துவிடுவர்; இன்று பெற்றால் நாளை மறந்துவிடுவர். ஒருவரிடம் பெறும் பொருளை தான் வாழும் காலம் மட்டுமல்லாமல்,
புலவர்கள் போற்றிய பிட்டங்கொற்றன்!

நேற்று ஒரு பொருளைப் பெற்றால் இன்று மறந்துவிடுவர்; இன்று பெற்றால் நாளை மறந்துவிடுவர். ஒருவரிடம் பெறும் பொருளை தான் வாழும் காலம் மட்டுமல்லாமல், இந்த உலகம் உள்ளவரையில் நிலைபெற்று இருக்குமாறு இலக்கியங்களில் பதிவுசெய்து வைத்த புலவர்களின் நன்றி மறவாத் தன்மையை நினைந்துப் போற்ற வேண்டும். அந்த வகையில், எந்நாளும் "செய்நன்றியை' மறக்காதவர்கள் சங்ககாலப் புலவர்கள்.
 "இனி வாழ்வோர் வாழ்வெல்லாம் இவன் வாழ்க எனவும், சிறுமுள்ளும் குத்தாமல் நீடூழி வாழ்க' எனவும் புறநானூற்றுப் புலவர்கள் போற்றிய மிகச்சிறந்த அரசன் பிட்டங்கொற்றன்.
 குதிரைபோல் வடிவுடைய கொங்கு நாட்டிலுள்ள மலை, "குதிரைமலை' ஆகும். மேற்குத் தொடர்ச்சி மலையைக் கடந்து செல்ல இந்த மலைப் பகுதியில் கணவாய் (கவாஅன்) ஒன்றும் இருந்தது. இதனைக் "குதிரைக்காவான்' என்றும் அழைப்பர். தற்போது இப்பகுதி கேரள மாநிலத்தில் ஏழங்குளம் பஞ்சாயத்து வார்டுகளில் ஒன்றாகக் "குதிரைமுகம்' என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.
 புலவர்களால் போற்றப்படும் பிட்டங்கொற்றன் குதிரைமலைக்குத் தலைவன். இவன் சேரமான்கோதை என்கிற சேர அரசனிடம் படைத் தலைவனாகவும், குதிரைமலைக்கு சிற்றரசனாகவும் இருந்து ஆட்சிசெய்து வந்தான்.
 பிட்டங்கொற்றன் போருக்குச் சளைக்காதவன். இளம் வேந்தர்கள் அம்புவிடப் பழகும்போது, எய்யும் அம்புகளைத் தாங்கும் முருக்க மரம் (முள்மருங்கை) போல இவன் பகைவரின் அம்புகளைத் தாங்கக் கூடியவன் என்பதைக் காரிக்கண்ணனார், "இகலினர் எறிந்த அகல் இலைமுருக்கின்/ பெருமரக் கம்பம் போல' (புறம்:169) என்று போற்றுகின்றார்.
 எப்போது சென்றாலும் ஈயும் குணம் கொண்டவன். பின்னே, முன்னே தந்தேன் என்று கூறாமல், நாள்தோறும் சென்றாலும் பொய்க்காமல் கேட்டதைக் கேட்டபடியே ஒன்றுவிடாமல் கொடுக்கக் கூடியவன் என்பதைப் பின்வரும் பாடல் தெரிவிக்கிறது.
 "... .... இன்று செலினும் தருமே; சிறுவரை
 நின்று செலினும் தருமே; பின்னும்
 முன்னே தந்தனன் என்னாது' (புறம்:171)
 பசு, காளைகள் அடங்கிய தொழுவத்தை வேண்டினாலும் நெற்களத்தில் குவித்துவைத்த நெல்லின் குவியலை வேண்டினாலும் நல்ல விலையுயர்ந்த அணிகலன்களை யானையோடு சேர்த்து வேண்டினாலும் அங்ஙனமே தரும் பெருந்தன்மையாளன் என்று காரிக்கண்ணனார் பிட்டனின் குணத்தைப் போற்றுகிறார்.
 பிட்டங்கொற்றனும் சேரஅரசன் கோதையும்:
 பிட்டங்கொற்றனும் சேர அரசனாகிய கோதையும் பகையரசரை வென்று அடைந்த திறை பொருள்களை வாரி வாரி வழங்குவதில் பெருவள்ளல்கள். அதனால், புலவர்கள் இவ்விருவரைப் போற்றுவதோடு மட்டுமல்லாமல், அவர்கள் பொருளைப் பெறுவதற்குக் காரணமாக உள்ள பகையரசர்களையும் போற்றும் புலவர்களின் குணத்தை வியந்து பாராட்டலாம்.
 உணவுக்கும் பிறவற்றிற்கும் புலவர்கள் கவலைப்படத் தேவையில்லை. ஏனெனில், ஒருவர் (பிட்டன்) தருவது குறையுமாயின், மற்றவர் (சேர அரசன் கோதை) தருவது நிறைக்கும். அதனால், "ஏற்றுக உலையே ஆக்குக சோறே' (புறம்:172); "கள்ளும் குறைபடல் ஓம்புக' என்கிற வரிகளில் புலவர் தாமோதரனார், பிட்டங்கொற்றன் மட்டுமல்லாமல், சேர அரசனாகிய கோதையும் தாராள குணம் கொண்டவன் என்பதை எடுத்துரைத்துள்ளார்.
 மென்மை - வன்மை:
 பிட்டங்கொற்றன் பரிசில் வேண்டி வந்தோர்க்கு யானையின் தந்தத்தில் விளைந்த ஒளி திகழும் முத்தை விறலியர்க்கும்; நாரை பிழிந்தெடுத்த கள் தெளிவைப் பண் பொருந்திய யாழுடைய பாணர் சுற்றத்திற்கும் நுகரக் கொடுப்பதிலும் மென்மையானவன்.
 ஆனால், பகைவருக்கோ இரும்பைப் பயன்படுத்துகின்ற வலிய கையை உடைய கொல்லன் உலைக்களத்தில் விளங்கும் உலைக்கல் போல் வலிய ஆண்மையை உடையவன். இப்படிப்பட்ட குணம் உடையவன், உலகில் வாழ்வோர் இனிது உயிர் வாழ்வதற்கு இவன் காரணமாக உள்ளதால், "வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே' என்றும், "அவனுக்குச் சிறு தீங்கும் வரக்கூடாது' எனஆர்வம் கொண்டு "சிறுமுள்ளும் குத்தாமல் வாழிய' எனப் புலவர்கள் பிட்டங்கொற்றனைப் போற்றியுள்ளனர்.
 - மா. நாகலட்சுமி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com