சுடச்சுட

  
  THAALI

  "பிரிவாற்றாத தலைவியின் நிலைகண்டு நற்றாய் இரங்கல்' என்னும் துறையில் அமைந்த அஷ்டப்பிரபந்தப் பாடல் (திருவரங்கக் கலம்பகம், பா.27) ஒன்றைக் காண்போம்.
   "சீதைக்காக, முன்பு மாய மானை அம்பால் எய்தவர் இன்னும் என் மடமை பொருந்திய மகளை வந்து சேரவில்லை. பாரதப் போரில் சக்கரத்தால் மாலைப்பொழுதை உருவாக்கியவர், என் மகளுக்குத் தேன் நிரம்பிய, பசுமையான துளசி மாலையைக் கொடுத்தருளவில்லை. முன்பு இந்திரனால் பெய்விக்கப்பட்ட பெருமழையைக் கோவர்த்தன மலையைக் கொண்டு தடுத்து அனைவரையும் காத்தவர், என் மகளின் கண்களிலிருந்து பெருகும் பெருமழையாகிய கண்ணீரைத் தடுத்து நிறுத்தவில்லை. பாற்கடலைக் கடைந்து, தேவர்களுக்கு அமுதம் அளித்தவர், என் மகளுக்குத் தன் திருவாயில் ஊறும் அமுதத்தைக் கொடுக்கவில்லை. திரௌபதிக்கு மேன்மேலும் வளரும் ஆடையைக் கொடுத்தவர், தான் கொண்டிருக்கும் ஆடையை என் மகளுக்குத் தந்து அவள் துயரத்தை நீக்கவில்லை; சிவபெருமான் பிச்சை எடுத்ததைப் போக்கி அருளியவர், என் மகளுக்கு நீண்டு வளரும் இரவுப்பொழுது துன்பமாய் வளர்வதைத் தடுக்கவில்லை. கஜேந்திரன் அழைத்த அளவில் எழுந்தருளி அதற்கு அன்பு காட்டியவர், என் மகளின் தனங்களாகிய யானைகளின் முன்னே தோன்றி, அவற்றிற்கு அன்பு செய்யவில்லை. இதனால் திருவரங்கரின் அறம் நடத்தும் முறை அநீதியாகவே உள்ளது' என்கிறாள் நற்றாய்!
   "மானை எய்தவர் இன்னம் என் மட
   மானை எய்திலர்; நேமியால்
   மாலை தந்தவர் பைந்துழாய் மது
   மாலை தந்திலர்; இந்திரன்
   சோனை மாரி விலக்கி விட்டவர்
   சொரி கண் மாரி விலக்கிலார்;
   சுரர் தமக்கு அமுதம் கொடுத்தவர்
   சோதிவாய் அமுதம் கொடார்;
   தானை ஐவர் கொடிக்கு அளித்தவர்
   தானை கொண்டு அது அளிக்கிலார்;
   சங்கரற்கு இரவைத் தடுத்தவர்
   தையலுக்கு இரவைத் தடார்;
   ஆனை முன்வரும் அன்புளார் முலை
   ஆனை முன்வரும் அன்பிலார்;
   அணி அரங்கள் நடத்தும் நீதி
   அநீதியாக இருந்ததே!'
   அருஞ் சொற்பொருள்: மாலை - மாலைப்பொழுது; மாலை - துளசி மாலை; இரவை - யாசித்தலை; இரவை - இரவுப்பொழுது; அநீதியாக இருந்ததே - பழிப்பது போல் புகழ்வது (நிந்தாஸ்துதி).
   இச்செய்யுளில், எய்தவர் - எய்திலார் முதலாகக் கூறப்பட்டவை எதிர்மறையும், உடன்பாடுமாய் சில சொற்றொடர்கள் சொல்லாலும், சில சொற்றொடர்கள் பொருளாலும் மறுதலைப்படத் தொடுக்கப்பட்டதால் முரண்தொடையாய் அமைந்தது. "சொல்லிணும் பொருளிளும் முரணுதல் முரணே'' என்கிறது தண்டியலங்காரம்.
   
   -முனைவர் இரா. வ. கமலக்கண்ணன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai