திருவிருத்தப் பாசுர உரையில் மெய்ப்பாட்டியல்

நம்மாழ்வார் நான்கு வேதத்தின் சாரமாக நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார்.
திருவிருத்தப் பாசுர உரையில் மெய்ப்பாட்டியல்

நம்மாழ்வார் நான்கு வேதத்தின் சாரமாக நான்கு பிரபந்தங்களை இயற்றியருளினார். அவற்றுள் ரிக் வேத சாரமானது திருவிருத்தம் எனும் பிரபந்தம். திருநாடாகிய வீடுபேற்றுக்கு திருவிருத்தத்தின் ஓர் அடியையாவது படித்திருக்க வேண்டும் என்பது வைணவ மரபு.
 "குருகையர் கோனுரைத்த திருவிருத்தோரடி கற்றிரீர் திருநாட்டகத்தே' என்பது இதற்குப் பாயிரமாகிய தனியன் பாடிய கிடாம்பியாச்சான் திருவார்த்தை. இது நம்மாழ்வாரின் முதல் பிரபந்தம் என்பதோடு வேறு சிறப்பும் இப்பிரபந்தத்திற்கு உண்டு.
 பொதுவாக ஆழ்வார்கள் பகவானைப் பாடி, கண்டு, உருகி, பக்தியில் வேர் பிடித்த நிலையில் - பிரேம பக்தியாகிய "நாயகி' பாவத்தை அடைவார்கள். ஆனால், நம்மாழ்வார் முதல் பாசுரத்தில், ""மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே'' என்று ஆணையிட்டு, எம்பெருமான் வந்து நின்றதும், பெண்பாவம் மேலிட்டுப் பராங்குச நாயகியாகி மற்ற பாசுரங்களைப் பாடுகின்றார்.
 திருவிருத்தத்தில் முதல் பாசுரத்தையும் கடைசி பாசுரத்தையும் விட்டால், மற்றதெல்லாம் அகத்துறை பாசுரங்களே. திருவிருத்தத்தில் நம்மாழ்வார் நாயகி; எம்பெருமான் தலைவர். அகத்துறை இலக்கணம் அறியாது இப்பாசுரங்களின் பொருளைக் காண முடியாது.
 இப்பாசுரத்தை நாதமுனிகள் காலத்திலிருந்தே ஆசாரியர்கள் ரசித்து ரசித்து உரை செய்தனர். இன்னும் சொல்லப்போனால் அப்பாசுரங்களின் இழையோடும் பாவங்களோடும் வாழ்ந்தனர். தமக்கு முன்னுள்ள ஆசாரியர்கள் பாசுரங்களின் அர்த்த பாவத்தில் ஆழங்காற்பட்டு வாழ்ந்ததை பெரியவாச்சான்பிள்ளை தமது திருவிருத்த உரைகளில் பதிவு செய்திருக்கிறார்.
 அப்படிச் செய்த ஒரு பதிவின் மூலம், கவிதை வேறு; வாழ்க்கை வேறு என்று வாழாத அக்கால நிலை குறித்து அறியலாம். 100 பாசுரங்கள் உள்ள திருவிருத்தத்தில் 98ஆவது பாசுரம் இது.
 தலைவனைப் பிரிந்து தலைவி துடிக்கிறாள். இரவெல்லாம் தூக்கமில்லை. அவனை நினைந்து நினைந்து நிம்மதியின்றித் தவிக்கும் தலைவியைக் காண தோழிக்குப் பரிதாபமாக இருக்கிறது. அப்போது தலைவனின் அருமையை, தலைவிக்குச் சொல்லி ஆறுதல்படுத்துவதாக அமைந்த பாசுரம் இது.
 "துஞ்சா முனிவரும் அல்லாதவரும் தொடர நின்ற
 எஞ்சாப்பிறவி இடர் கடிவான் இமையோர் தமக்கும்
 தன் சார்விலாத தனிப்பெரும் மூர்த்திதன் மாயம் செவ்வே
 நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே'
 இப்பாசுரத்தை மேலோட்டமாகப் பார்த்தாலே இது கண்ணன் பற்றிய பாசுரம்; அவன் வெண்ணெய்யைத் திருடி உண்ட செய்தியைச் சொல்லும் பாசுரம் என்பது விளங்கிவிடும்.
 பெரிய கோடீஸ்வரன் ஒருவன்; பல நிறுவனங்களுக்கு அதிபதி; அவனிடம் சம்பளம் வாங்குபவர் பலர். அப்படிப்பட்ட முதலாளி ஒரு நாள் ஒரு டீக்கடையில் பசிக்கு ரொட்டி திருடினான் என்று கேள்விப்பட்டால் எப்படியிருக்கும்?
 ஆழ்வார் பாசுரத்தின் முதல் மூன்று வரிகளில் தவம் செய்யும் முனிவர்களும் மற்றவர்களும் பெரும் முயற்சி செய்து அவனை அடைய நிற்கிறார்கள். அவனோ, பிறவி என்னும் மாய வலையை அறுக்கும் வல்லமை உள்ளவன். இமையோர் தமக்கும் தலைவனான சர்வேஸ்வரன், கேவலம் வெண்ணெய்யைக் களவு கண்டு உண்டான் என்பது நெஞ்சாலும் நினைக்க அரிதாக இருக்கிறதே என்பது இப்பாசுரத்தின் பொருள்.
 கிருஷ்ணாவதாரத்தில் ஒரு லீலையாக பகவான் வெண்ணெய்யைக் களவு செய்து மாட்டிக் கொண்டால், கண்ணன் துடிக்கிறானோ இல்லையோ, ஆழ்வார்களும் உரையாசிரியர்களும் துடித்துப் போகிறார்கள்.
 இப்படித் துடித்துப்போன ஓர் ஆசாரியரைப் பற்றி இப்பாசுர உரையில் பதிவு செய்து, அந்த ஆசாரியரின் கிருஷ்ண பக்தியையும், தமிழ்ப் பாசுரமான திருவிருத்தப் பாசுரங்களில் அவருக்கிருந்த ஈடுபாட்டையும், மெய்ப்பாட்டியலையும் சித்திரிக்கிறார் இதன் உரையாசிரியரான பேருரைத் திலகம் பெரியவாச்சான்பிள்ளை.
 அந்த ஆசாரியர் பிள்ளை உறங்கா வில்லிதாசர். முரட்டு மல்லனாக இருந்து இராமாநுஜரால் ஆழ்வாரின் ஈரத்தமிழ் பாசுர ஈடுபாட்டைப் பெற்றவர். இவர் உரையாசிரியல்லர்; உரைப்படி வாழ்ந்தவர்.
 இவர் ஒரு நாள் ஒரு தெரு வழியே நடந்து போய்க்கொண்டிருந்தார். தெருவிலே கூட்டம். எல்லோரும் சுற்றி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள். வில்லிதாசர் "அங்கே என்ன கூட்டம்?' என்று விசாரித்தார்.
 ஒருவன் பதில் சொன்னான்: ""அரசனுக்கு தினசரி எடுத்துச் செல்லும் பாலை எவனோ களவாடிவிட்டானாம். இன்று கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்கள். இன்னும் சற்று நேரத்தில் பூசை தொடங்கப் போகிறார்கள்''
 பிள்ளை உறங்கா வில்லிதாசர் செவிகளில் "பாலைத் திருடி கள்ளன் மாட்டினான்' என்ற செய்தி மட்டும் விழுந்தது. அவர் பார்வையில், பால் திருடி யார் மாட்டினாலும் அவர் கண்ணன்தான். அவருக்கு நினைவு வந்த திருவிருத்தப் பாசுர அடி இதுதான்: ""நெஞ்சால் நினைப்பரிதால் வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே'' என்று ஓடுகிறார்.
 அங்கே எவனோ ஒரு கள்ளனைக் கட்டிவைத்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். வில்லிதாசரின் கண்ணில் கள்ளன் படவில்லை. கண்ணன்தான் அல்லது கண்ணனாகத்தான் கண்ணில் படுகிறான்; உடனே பதறுகிறார்:
 ""ஐயா! அவனை அடிக்காதீர்கள்... விட்டு விடுங்கள்... அவன் கண்ணன்...விட்டு விடுங்கள்''
 ""அது சரி ஐயா, அவன் திருடி மாட்டிக்கொண்டான். அடி வாங்கப் போகின்றான். அவன் அடியை யார் வாங்குவது?''
 சற்றும் தயங்கவில்லை வில்லிதாசர், ""அடியேன் வாங்குகிறேன். அவனை விட்டு விடுங்கள். இவன் செய்த தவறுகளுக்கெல்லாம் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். என்னை தண்டியுங்கள்''
 பெரியவாச்சான் பிள்ளையின் மணிப்பிரவாளம் இங்கு ரசிக்கத்தக்கது. "அரையனுக்குப் போகிற பாலை ஓர் இடையன் களவு கண்டான் என்று கட்டி அடியா நிற்கப் பிள்ளை உறங்காவில்லிதாசர் கண்டு பரவஸராயிருந்து இத்தால் வந்ததுக்கெல்லாம் நான் கடவன் என்று விடுவித்துக் கொண்டாராம்' (ஓரிரண்டு வார்த்தை தவிர மற்றதெல்லாம் தூய தமிழ்தான்) (அரையன்-அரசன்: இடையன்-கண்ணன்).
 இப்பாசுரத்துக்குப் பொருள் சொல்லலாம்; இலக்கணக்குறிப்பு கொடுக்கலாம்; ஆனால், பிள்ளை உறங்கா வில்லிதாசர் பரவஸராயிருந்தார் என்று பாசுர மெய்ப்பாட்டியலை எழுதி விளக்குவது பெரியவாச்சான் பிள்ளையால் மட்டுமே முடியும்.
 -எஸ்.கோகுலாச்சாரி
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com