Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் கலாரசிகன்

  By DIN  |   Published on : 07th July 2019 03:38 AM  |   அ+அ அ-   |    |  

  tm1

  பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் "புறநானூறு - புதிய வரிசை வகை' நூல் வெளியீட்டு விழா சென்ற வாரம் சென்னையில் நடந்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அவருடைய மாணவனாக இருந்தவன் என்கிற முறையில், பிரதிகள் பெற்றுக் கொள்பவர்கள் பட்டியலில் என்னையும் இணைத்ததற்கு அவருக்கும், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்திய பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜாவுக்கும், பாரதி பாஸ்கருக்கும் நன்றி.
   வாணி மஹால் அரங்கில் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்தபோது, தமிழகத்தில் "யார் - எவர்' பட்டியலையே தயாரித்து விடலாம் போலிருந்தது. நடிகர்கள் ரஜினிகாந்த், சிவகுமாரில் தொடங்கி, மதுரை கம்பன் கழகத் தலைவர் சங்கர சீதாராமன், ஈரோட்டிலிருந்து ஸ்டாலின் குணசேகரன், முன்னணி பட்டிமன்றப் பேச்சாளர்கள், அனுக்கிரகா ஆதிபகவன் உள்ளிட்ட இளைய தலைமுறைப் பேச்சாளர்கள் என்று பிரமிப்பை ஏற்படுத்தியது பார்வையாளர்கள் கூட்டம்.
   ஹிமாசல பிரதேச உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவியேற்றிருக்கும் நீதியரசர் வெ. இராமசுப்பிரமணியன், தமிழறிஞர்கள் அவ்வை நடராஜன், தெ.ஞானசுந்தரம் ஆகியோர் மட்டுமல்லாமல், மேடையில் தமிழ்ப் பண்பாட்டுத் துறை அமைச்சர் க. பாண்டியராஜனுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவாவும், சு.வெங்கடேசனும் மேடையை அலங்கரித்தனர். கட்சி மனமாச்சரியங்களைக் கடந்து நமது அரசியல் தலைவர்கள் இப்படி மேடையைப் பகிர்ந்து கொள்வது தமிழகத்தைப் பொருத்தவரை காணக்கிடைக்காத காட்சியாகத்தான் இதுவரை இருந்து வந்திருக்கிறது.
   "எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் முதல்வரானால் இந்தப் புத்தகம் அனைத்து நூலகங்களிலும் இடம்பெறும்' என்று திருச்சி சிவா கூற, "அதற்கெல்லாம் காத்திருக்கத் தேவையில்லை; எங்களது அரசே இந்தப் புத்தகத்தை எல்லா நூலகங்களிலும் இடம்பெறச் செய்யும்' என்று அமைச்சர் க.பாண்டியராஜன் கூற, ஆரோக்கியமான அரசியலுக்கு சாலமன் பாப்பையாவின் "புறநானூறு - புதிய வரிசை வகை' புதுப்பாதை வகுத்திருக்கிறது. நல்ல தொடக்கம்!
   
   கடந்த வாரம் வானதி பதிப்பகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே கவிஞர் முத்துலிங்கம், ஏர்வாடி ராதாகிருஷ்ணன், வானதி ராமநாதன் ஆகியோரிடம் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். புத்தகங்கள் பற்றி, கவிஞர்கள் குறித்து என்று பேசத் தொடங்கி, சினிமா, அரசியல், நாட்டு நடப்பு என்றெல்லாம் பேசித் தீர்த்தோம். நேரம் போனதே தெரியவில்லை. மதியம் ஒரு மணிக்குப் போன நான் அங்கிருந்து கிளம்பும்போது மூன்று மணி தாண்டிவிட்டது.
   அப்போதுதான் தெரிந்தது, நாங்கள் யாருமே மதிய உணவு சாப்பிடவில்லை என்பது. பேச்சு சுவாரஸ்யத்தில் பசி தெரியவில்லை. 412-ஆவது குறள் உண்மையிலும் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த தருணங்களில் அதுவும் ஒன்று.
   நாங்கள்தான் அதிகம் பேசினோம். கவிஞர் முத்துலிங்கம் மிகக் குறைவாகவே பேசினார். அவரது வெற்றியின் ரகசியம் புரிந்தது - அடக்கம்! வாழ்க்கையின் முக்கியமான தருணங்களில் ஒன்றாக அந்த சந்திப்பை எனது தினசரி நாட்குறிப்பில் குறித்துக் கொண்டேன்.
   
   சிலருடன் பேசும்போது தகவல்கள் கிடைக்கும். சிலருடன் பேசினால் பொழுது போகும். ஆனால், என். முருகன், ஐ.ஏ.எஸ். போன்றவர்களுடன் பேசினால் வரலாறு குறித்த புரிதல் ஏற்படும். நிகழ்காலம், வருங்காலம் குறித்த விவாதம் மூலம் புதிய சிந்தனைகள் பிறக்கும். இந்திய குடிமைப் பணி அதிகாரியாக இருந்தவர் என்பது மட்டுமல்லாமல், காமராஜர் தொடங்கி இன்றைய அரசியல் தலைவர்கள் வரை பலருடனும் நேரடியாகப் பழகிய அனுபவசாலி அவர்.
   என். முருகனின் கட்டுரைகள் "தினமணி' நடுப்பக்கத்திற்கு வந்தால், எனது மேசையில் வைத்துவிடுவார்கள். முதலில் படிப்பவன் நானாகத்தான் இருக்கும். அவரது கட்டுரைகள் தொகுக்கப்பட்டு புத்தக வடிவம் பெற வேண்டும் என்று முதலில் வற்புறுத்தியவனும் நான்தான். இப்போது ஒன்றன் பின் ஒன்றாக அவரது கட்டுரைகள் புத்தக வடிவம் பெற்று வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
   இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவரை சந்திக்கச் சென்றிருந்தபோது, "வரலாறு சொல்லும் பாடம்' என்கிற அவரது கட்டுரைகளின் தொகுப்பை என்னிடம் தந்தார். "தினமணி' நடுப்பக்கக் கட்டுரைகளுடன், வேறு சில இதழ்களில் எழுதிய கட்டுரைகளையும் சேர்த்து "வரலாறு சொல்லும் பாடம்' புத்தகத்தை என். முருகன் தொகுத்திருக்கிறார்.
   விவசாயம், சுகாதாரம், கல்வி, அரசியல், சமூகவியல் ஆகியவை குறித்த கட்டுரைகள்தான் பெரும்பாலானவை. அவரது அரசியல் பார்வை மிகவும் வித்தியாசமானது. ஆழமானது. எடுத்துக்காட்டுக்கு "இது இப்படித்தான்!' என்கிற கட்டுரை. நமது அரசியல் கட்சிகள் குறித்தும், அரசியல் தலைவர்கள் குறித்தும் அந்தக் கட்டுரையில் சில நிதர்சனங்களைப் பகிர்ந்து கொள்கிறார் முருகன். அவை இன்றைய அரசியலைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
   "மார்க்சிய சித்தாந்தத்தின்படி ஒரு நாட்டின் சரித்திரம் நிர்ணயிக்கப்படுவதில் தனி மனிதர்களை விடவும் சமூக, பொருளாதார சக்திகளே முக்கியக் காரணமாக இருக்கும்.
   இந்த அடிப்படை சித்தாந்தத்தைத் தகர்த்து எறிந்து தனிமனிதர்களே நாட்டின் சரித்திரப் பாதையை நிர்ணயிக்கிறார்கள் என்பதை நிரூபித்துள்ளது நமது தாய்நாடு, இந்தியா!' என்கிறார் முருகன். எவ்வளவு உண்மை!
   
   முத்து எனும் இயற்பெயர் கொண்ட கவிஞர் "ஜோ', அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் என்கிறது "முதற்கல்' என்கிற அவரது கவிதைத் தொகுப்பிலுள்ள பின் அட்டை குறிப்பு.
   சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் வாழ்ந்துவரும் கவிஞர் ஜோவின் முதல் படைப்பான இந்தக் கவிதைத் தொகுப்பு விமர்சனத்துக்கு வந்திருந்தது. அதிலிருந்து "காற்று' என்கிற கவிதை.
   ராட்சத மரங்களை
   வேரோடு பிடுங்கியெறியும்
   இந்தக் கருணையற்ற
   பேய்க்காற்று
   குழந்தையின் கைகளில் மட்டும்
   சரணடைகிறது
   நீலநிற பலூனாக!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai