சுடச்சுட

  
  kumarasamy_raja

  இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காகப் போராடி, நவபாரத சிற்பிகளில் தனித்துவமாகத் திகழ்ந்து தனக்கென வாழா தன்னலமற்ற தியாக சீலராகப் புகழ்பெற்ற பி.எஸ்.குமாரசாமி ராஜா தமிழ் வளர்ச்சிக்கென ஆர்வத்துடன் செய்த தொண்டுகள் அளப்பரியவை.
   காந்தியடிகளின் வழியில், அகிம்சையும் சத்தியமும் இரு கண்களெனப் போற்றி, அடிகளையே பின்பற்றி விடுதலைப் போரில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்றவரும்; அவர் விரும்பாமலேயே வந்த பதவிகளால் நாட்டு வளர்ச்சியில் பெரிதும் ஈடுபட்டதோடு தமிழ் மொழிக்கும் பெரும் தொண்டாற்றியவர் தியாக சீலரான ராஜா.
   இராஜபாளையத்தில் 8.7.1898-இல் பூசப்பாடி சஞ்சீவி ராஜா-லட்சுமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்த இவர் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர்.
   1916-இல் இராஜபாளையத்தில் தனது ஒன்றுவிட்ட தமையனார் பி.ஏ.சி.ராமசாமி தலைமையில் "மீனாட்சி சகாய விவேக வித்தானந்த சபை' என்ற இலக்கிய அமைப்பை உருவாக்கி, இலக்கிய, கலை, ஆன்மிக நிகழ்ச்சிகளை நடத்தி, அந்த அமைப்பில் செயலராக இருந்து இளைஞர்களைக் கூட்டி பணிசெய்தார்.
   அன்னி பெசண்ட் அம்மையாரின் "ஹோம் ரூல்' இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதுவே அரசியல் ஈடுபாட்டுக்கு வழிவகுத்தது.
   பின்னர், கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிகளை எரித்தல் முதலிய போராட்டங்களில் இளைஞர்களை ஒன்றுதிரட்டி பெரிய போராட்டங்களாக நடத்தினார். உண்ணாவிரதம், உப்பு சத்தியாகிரகம் போன்ற பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு பலமுறை சிறை சென்றார். காந்தியடிகளை ராஜபாளையத்திற்கு இருமுறை அழைத்து வந்து தன் இல்லத்திலேயே தங்கவைத்தார். நாடு விடுதலை அடைந்தது. பிறகு சென்னை மாகாணத்திற்கு பி.எஸ்.குமாரசாமி ராஜா முதலமைச்சர் பொறுப்பேற்றார்.
   ஹரிஜனங்கள் நலனுக்காக முதலாவதாக தனி அமைச்சரை நியமித்தார். அவர்களுக்குக்கென்று விவசாயத்திற்கு நிலங்கள் வழங்கி, வீடுகள் கட்டித்தருதல் முதலிய பணிகளைச் செய்தார்.
   1950-ஆம் ஆண்டில் புதிய கல்வித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. குழந்தைகளுக்குக் கட்டாயக் கல்வி, முதியோர் கல்வி என்று முறையாக செயல்படுத்தப்பட்டது. சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை "பேராசிரியர்' தகுதிப் பதவி பெறுவதற்குரிய அனுமதி வழங்கினார்.
   தமிழறிஞர் பெ.தூரனிடம் பொறுப்பு தந்து "தமிழ் கலைக் களஞ்சியம்' தொகுதிகள் வெளிவர உதவினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விழாவுக்குச் சென்றிருந்தபோது, தமிழிசை வளர்ச்சிக்காக அரசு நிலத்தை இலவசமாக வழங்கி உதவினார்.
   மகாகவி பாரதியாருக்கு எட்டயபுரத்தில் மணிமண்டபம் கட்டும் பணிக்காக எழுத்தாளர் கல்கி நன்கொடை பெற இராஜபாளையம் வந்து பி.எஸ்.குமாரசாமி ராஜாவை சந்தித்தது ஒரு சுவாரசியமான நிகழ்ச்சி.
   ரசிகமணியின் ஆலோசனையின் பெயரில் பின்னாளில் குமாரசாமி ராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் கோபுரத்தையே அரசின் சின்னமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
   பண்டைய அரசர்கள் இலக்கியத்திற்கு முதன்மை அளித்து, கவிஞர்களை அரசவையில் நியமித்து, அமைச்சர்களுக்கு உரிய மரியாதை செய்ததைப் போல, குமாரசாமி ராஜாவும் தமிழ் இலக்கியத்திற்குப் பெருமை சேர்க்கும் விதமாக நாமக்கல் கவிஞரை அரசவைக் கவிஞராக்கி சிறப்பு செய்தார்.
   தனது இல்லத்தை "காந்தி கலை மன்றம்' என்ற பெயரில் பெரிய நூலகமாகவும், கலையரங்கம் ஒன்று அமைத்து கலை, இலக்கிய, இசை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டமிட்டார்.
   அந்தச் சமயத்தில் நேரு தொலைபேசியில் அவரை அழைத்து, ஒரிசா மாநில ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு சொன்னார்.
   ""எனது சொந்த வீட்டை கலைக் கூடமாக்கி ஊருக்கு எழுதிவைக்க திட்டமிட்டுள்ளேன். அந்த வேலைகள் இருப்பதால் எனக்கு ஆளுநர் பணிக்கு நேரமிருக்காது'' என்றதும், நேரு, ""ஆளுநர் பதவியை வேண்டாமென்று கூறும் மனிதர் நீங்கள் மட்டும்தான்'' என்றார்.
   ராஜாஜி, ஜி.சி.சுப்பிரமணியம், காமராஜர் போன்ற தலைவர்கள் வற்புறுத்தியும் கேட்டவில்லை. இராஜபாளையம் வந்ததும் தமையனார் பி.ஏ.சி.ராமசாமி ராஜா, ""காந்தி கலை மன்றப் பணிகளை நான் பார்த்துக் கொள்கிறேன். நேரு கேட்டுக் கொண்டபடி ஆளுநர் பணியை நீங்கள் ஒப்புக் கொள்ளுங்கள்'' என்றதும், "சரி' என்று கூறி, நேருவிடம் சம்மதம் தெரிவித்தார்.
   ஒரிஸா மாநில ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்டார். தனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தும் முதல் சட்டமன்றக் கூட்டத்தில் தமிழிலேயே உரை நிகழ்த்தினார்.
   பின்னர் காந்தி கலை மன்றப் பணிகள் முடிந்ததும், குடியரசுத் தலைவர் ராஜேந்திரப் பிரசாத் அதைத் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். காந்தி கலை மன்றத்தில் சில திட்டங்களை ராஜா அறிவித்தார். மிகப்பெரிய நூலகம், படிப்பகம் அமைத்தல், இலக்கிய, இசை, நாட்டிய, நாடக நிகழ்ச்சிகள் வெளிமன்றத்தினர் நடத்தினால் இடத்தை வாடகையின்றி இலவசமாக அனுமதித்தல், முதன்மையான பிறமொழி நூல்களை மொழிபெயர்த்தல், சிறந்த தமிழ் அறிஞர்களை, கவிஞர்களை கெளரவித்தல் முதலிய திட்டங்களுடன் கலைமன்றம் துவக்கப்பட்டது.
   கடின பணிகளால் ஆளுநர் பதவியை விட்டார். உடல்நிலை குன்றியதன் காரணமாக 16.3.1957-இல் குமாரசாமி ராஜா அமரரானார்.
   அவரது நூற்றாண்டு விழாவில் புதுப்பிக்கப்பட்ட காந்தி கலை மன்றத்தை முன்னாள் முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நூல்களுடன் நாளொன்றுக்கு ஐநூறு பேர் படிக்கும் கோயிலாக அந்த மன்றம் திகழ்கிறது.
   -கொ.மா.கோதண்டம்
   
   நாளை: (8.7.2019) 
  பி.எஸ்.கே.யின் பிறந்த நாள்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai