Enable Javscript for better performance
ஆழ்வார் பாசுரங்களில் அருந்தமிழ்க் குறள்!- Dinamani

சுடச்சுட

  
  tm1

  "முன்னோர் சொல் பொன்னே போல் போற்றுதல்' நம் மரபு. ஒவ்வொரு படைப்பாளியும், தத்தம் காலத்திற்கு முன்பு வழக்கில் இருந்த இலக்கிய மரபுகளை எடுத்தாண்டு தத்தம் படைப்புகளுக்கு மெருகூட்டுதலும் உண்டு. திருவள்ளுவரின் குறட்பாக்கள் பிற்காலப் புலவர் பெருமக்களால் ஏராளமாகக் கையாளப்பட்டுள்ளன. அவ்வகையில், ஆழ்வார்களின் பாசுரங்களிலும் சில குறட்பாக்கள் சொற்பிறழாமல் பல இடங்களில் பளிச்சிடுகின்றன.
   திருமழிசை ஆழ்வார், பெரியாழ்வார், நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகியோருடைய பாசுரங்களில் திருவள்ளுவரின் புகழ்மிகு குறட்பாக்கள் இடம்பெறுகின்றன.ஸ்வானம், கருமேகம், வயல், விதை என்று பக்தி உழவனாகப் பரந்தாமனைப் படம்பிடித்துக் காட்டும் திருமழிசை ஆழ்வார் தம்முடைய நான்முகன் திருவந்தாதியில் (2404),
   "வித்தும் இடல் வேண்டும் கொல்லோ விடையடர்த்த
   பக்தியுழவன் பழம் புனத்து மொய்த்தெழுந்த
   கார்மேகமென்ன கருமால் திருமேனி
   நீர்வானம் காட்டும் நிகழ்ந்து'
   என்று பாசுரமிடுகின்றார். பக்திப் பயிருக்குப் பாடுபடும் எம்பெருமானின் தொன்மையான உலகம் என்னும் வயலில் நாம் புண்ணியங்களாகிற விதையை விதைக்கவும் வேண்டுமோ? "அவசியமில்லை' என்பது இப்பாசுரத்தின் பொருள்.
   திருமழிசை ஆழ்வாருடைய இப்பாசுரத்தின் இரண்டு அடிகள் வள்ளுவப் பெருந்தகையின் வாய்ச்சொற்களான, "வித்தும் இடல்வேண்டும் கொல்லோ' (85) என்கிற குறளை அப்படியே பிரதிபலிப்பதைக் காணலாம்.
   பெரியாழ்வார் தம்மை யசோதைப் பிராட்டியாக உருவகித்துப் பாடுகிறார். கண்ணபிரானைப் பால் அருந்த வருமாறு யசோதை கெஞ்சுகிறாள்; கொஞ்சுகிறாள். வர மறுக்கும் கண்ணனை "வா' என்று அன்புடன் அழைக்கையில்,
   "உன்னைக் கண்டார் என்ன நோன்பு நோற்றாள் கொலோ
   இவனைப் பெற்ற வயிறுடையாள் என்னும் வார்த்தை
   எய்துவித்த இருடீகேசா! முலையுணாயே!'
   என்று கூப்பிடுகிறார். இங்கு "வார்த்தை' என்று அவர் குறிப்பிடுவது திருக்குறளைத்தான்.
   "மகன் தந்தைக்காற்றும் உதவி இவன்தந்தை
   என்நோற்றான் கொல்லெனும் சொல்' (குறள் 70)
   என்ற குறளை முழுமையாகக் கையாண்டிருக்கிறார் பெரியாழ்வார். "பராங்குச நாயகி'யான நம்மாழ்வார் (நாயகி பாவம்) எம்பெருமானுடைய பிரிவு பொறுக்கமாட்டாமல் ஆசை மிகுந்து ஊரார் பழிக்கு அஞ்சாமல் மடலூரத் துணிந்ததைக் கூறும் பாசுரத்தில் (திருவாய்மொழி 5.3.4),
   "ஊரவர் கவ்வை யெருவிட்டு அன்னை சொல்
   நீர்படுத்து ஈரநெல் வித்தி முளைத்த
   நெஞ்சப் பெருஞ்செயுள் பேரமர்
   காதல் கடல் புரைய விளைவித்த காரமர்
   மேனி நம் கண்ணன் தோழீ! கடியனே?'
   என்கிறார். "தோழீ! என் நெஞ்சம் என்னும் பெரிய வயலில் ஆசை என்னும் நெல்லை விதைத்தேன். ஊரார் பழியே எருவாயிற்று. தாயின் ஆதரவே நீராகப் பாய்ந்தது. இந்தக் காதல் என்னும் நெற்பயிரைக் கடல் போலே, பரந்து விளையும்படி செய்த மேகம் நம் கண்ணபெருமான் ஆவான். மேக நிறம் கொண்ட அக்கண்ணன் கொடியவனோ? இல்லையே!' எனும் பொருள் வழியில் அமைந்ததுதான் என்பதை,
   "ஊரவர் கெளவை எருவாக' என்கிற 1147-ஆவது குறள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
   திருவள்ளுவர் காட்டும் வழியில் செல்லும் பராங்குச நாயகி, தான் வணங்கும் கண்ணன் எம்பெருமானின் கடல் போன்ற கருணைமிக்க குணத்தைத் தன் எண்ண ஈடேற்றத்திற்கு வடிகாலாக்கும் திறம் படித்து இன்புறத்தக்கது.
   "வான்நோக்கி வாழும் உலகெல்லாம்' (542) என்ற குறட்பாவில் இடம்பெறும் இரண்டு குறிப்புகள், பெருமாள் திருமொழியில் அப்படியே இடம்பெறுகின்றன.
   "எத்தனையும் வான்மறந்த காலத்தும்
   பைங்கூழ்கள் மைத்தெழுந்த
   மாமுகிலே பார்த்திருக்கும்' (பெரு.தி.மொழி, 5:7)
   என்ற பாசுரம் புல் ஆதியாக, உலகத்து உயிரினங்கள் அனைத்தும் வானை (மழையை) நோக்கியே வாழ்வதைச் சுட்டிக் காட்டுகின்றன. குடிமக்கள் மன்னவனின் செங்கோலையே பாதுகாப்பு கருதி வாழ்வதை,
   "தான்நோக்கா தெத்துயரம் செய்திடினும் தார்வேந்தன்
   கோல்நோக்கி வாழும்குடிபோன்றி ருந்தேனே'
   (பெ.தி.மொ.5:3)
   என்ற பாசுர அடிகள் மூலம் குறளின் குரலைக் கேட்க முடிகிறது. மகாப்பிரளய காலத்தில் (ஊழிக்காலம்) உலகைக் காத்த திருமாலை, செய்ந்நன்றியோடு வணங்குமாறு உலகோரை அறிவுறுத்த விரும்புகிறார், "கலியன்' என்கிற திருமங்கை மன்னன்.
   "மைந்நின்ற கருங்கடல்வா யுலகின்றி
   வானவரும் யாமுமெல்லாம், நெய்ந்நின்ற
   சக்கரத்தன் திருவயிற்றில் நெடுங்காலம்
   கிடந்ததோரீர், எந்நன்றி செய்தாரா
   ஏதிலோர் தெய்வத்தை யேத்துகின்றீர்?
   செய்ந்நன்றி குன்றேன்மின் தொண்டர்காள்
   அண்டனையே ஏத்தீர் களே!' (பெ.தி.மொ.11-6-1)
   செய்ந்நன்றியை வலியுறுத்தும் இப்பாசுரத்திற்கு முன்னோடியாகத் திருவள்ளுவரின் "எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்' (110) என்ற குறள் அமைந்துள்ளது.
   இவ்வாறு திருவள்ளுவரின் வாய்மொழியினை உள்வாங்கிக் கொண்ட ஆழ்வார்கள் தம்முடைய அருந்தமிழ்ப் பாசுரங்களில் 31 குறட்பாக்களை ஊடும் பாவுமாக இழையோடவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!
  -முனைவர் சீனிவாச கண்ணன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai