Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  kamaraj

  நாளை காமராஜரின் 117-ஆவது பிறந்த நாள். பெரியவர் மறைந்து 44 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இன்றளவும் தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அவரது பெயர் நினைவுகூரப்படுகிறது. அதனால்தான் அவர் பெருந்தலைவர்!
   சென்ற வாரம் சனிக்கிழமை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் தங்கியிருந்தபோது, பெருந்தலைவர் காமராஜ் பேரவைத் தலைவர் அ.இலக்குமணனும், செயலாளர் ஜீவா விஸ்வநாதனும் சந்திக்க வந்திருந்தார்கள்.
   பெரியவர் காமராஜர் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அவரை ஜாதியக் கூண்டுக்குள் அடைத்துவிட்டது பற்றியும் எங்கள் பேச்சு தொடர்ந்தது.
   வ.உ.சி.யை வேளாளராகவும், ராஜாஜியை பிராமணராகவும், கக்கனை ஹரிஜனத் தலைவராகவும் பார்க்கும் சிற்றறிவை நினைத்து வருத்தப்படுவதல்லாமல் வேறென்ன செய்ய?
   சிதம்பரம் பெருந்தலைவர் காமராஜ் பேரவை, நாடார் சமுதாயத்தால் நடத்தப்படுவதல்ல. இதுபோல, தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் காமராஜரை ஜாதியக் கூண்டில் அடைத்துவிடாமல் அவரது பங்களிப்பை நினைவுகூர்ந்து நன்றி தெரிவிக்கின்றன. ஆனால், அவை குறித்த செய்திகள் வெளியில் தெரியவில்லை என்பது வேதனை அளிக்கிறது.
   பண்டித நேருவின் பிறந்த நாளைக் குழந்தைகள் தினமாகவும், டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாகவும் கொண்டாடுவது போல, காமராஜரின் பிறந்த நாளை "அனைவருக்கும் கல்வி' தினமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
   அன்று எல்லா பள்ளி, கல்லூரிகளிலும் காமராஜர் குறித்த கருத்தரங்கம், போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அதுதான் அவருக்கு நாம் செலுத்தும் மிகப்பெரிய நன்றிக்கடனாக இருக்கும்!
   
   காமராஜ் திரைப்படம் தயாரித்த ரமணா கம்யூனிகேஷனின் சார்பில் "காமராஜர் 1000' என்கிற புகைப்பட ஆல்பம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். காமராஜர் பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் அந்தப் புகைப்படங்களின் தொகுப்பை அ.பாலகிருஷ்ணன் என்பவர் தயாரித்துப் பதிப்பித்திருக்கிறார்.
   புகைப்படத் தொகுப்புகளுக்கு நடுவில், காமராஜர் குறித்த வரலாற்றுத் தொகுப்பும் இடம்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. ஏற்கெனவே வெளியிடப்பட்ட புகைப்படத் தொகுப்பின் நீட்சிதான் இது என்றாலும்கூட, அதிக தயாரிப்புச் செலவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
   தமிழக அரசின் செய்தித் துறையிலிருந்து நிறையப் புகைப்படங்களை வாங்கி இணைத்திருக்கிறார்கள். எண்ணிக்கையில் ஆயிரத்தை எட்டுவதற்காக, முக்கியத்துவம் இல்லாத படங்கள் இணைக்கப்பட்டிருப்பது அலுப்பை ஏற்படுத்துகிறது. தவிர்த்திருக்கலாம்.
   கால வரிசைப்படி புகைப்படங்களை வரிசைப்படுத்தாதது இன்னொரு குறை. புகைப்பட ஆல்பம் தயாரிக்க வேண்டும் என்பதில் காட்டிய ஆர்வத்தைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை. அதே நேரத்தில், இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதற்கு இதழியல் அனுபவம் தேவை என்பதை அவர்கள் ஏனோ உணரவில்லை.
   காமராஜர் இருக்கும் புகைப்படங்களை இணைக்கும்போது, அவருடன் இருக்கும் முக்கியமான தலைவர்கள் குறித்தும் குறிப்பிட்டாக வேண்டும். ஆல்பத்தைத் தயாரித்தவர்களுக்கு நேரு, இந்திரா, மொரார்ஜி போன்ற ஒரு சில முக்கியமான தேசியத் தலைவர்களையும், பக்தவத்சலம், சி.சுப்பிரமணியம் போன்ற ஒரு சில தமிழகத் தலைவர்களையும்தான் தெரியும் போலிருக்கிறது. பல முக்கியமான தலைவர்கள் இன்னின்னார் என்று குறிப்பிடாமல் விடுபட்டிருப்பது மிகப்பெரிய குறை.
   வி.கே.கிருஷ்ண மேனன், எஸ்.கே.பாட்டீல் உள்ளிட்ட பல தலைவர்கள் காமராஜருடன் இருக்கும் படங்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. கொஞ்சம் சிரமமும், கால அவகாசமும் எடுத்துக்கொண்டு எல்லா படங்களையும், அதில் இடம்பெற்றிருப்பவர்களில் முக்கியமானவர்கள் பெயருடன் குறிப்பிட்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
   தமிழகத் தலைவர்களையே எடுத்துக்கொண்டால், காமராஜருடன் நெருக்கமாக இருந்த எஸ்.ஜி.விநாயக மூர்த்தி, மணிவர்மா உள்ளிட்ட பலரின் பெயர்கள் குறிப்பிடப்படாமல் இருப்பதால், இதை ஓர் ஆவணப் பதிவாகவோ, முழுமையான தொகுப்பாகவோ ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது.
   சிரமப்பட்டு நிறையப் படங்களைச் சேர்த்துத் தொகுத்திருக்கிறார்கள். இதன் அடுத்த நீட்சியாக, காமராஜரின் அடுத்த பிறந்த நாளுக்கு ஆவணப்பதிவாக ஒரு ஆல்பத்தை வெளிக்கொணர வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
   
   பழ. அன்புநேசனை ஆசிரியராகக் கொண்டு வெளிவருகிறது "சிகரம்' என்கிற சிற்றிதழ். ஜூன் மாதம் வெளிவந்த "சிகரம்' காலாண்டிதழில் நாமக்கல் அருகேயுள்ள பழையபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் க. ஆனந்த் எழுதியிருக்கும் கவிதை இது.

  நாமக்கல், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளராகப் பணியாற்றும் இவர், "சிலம்பொலி' செல்லப்பனாரின் உறவினர்.
   வார்த்தைகளுக்கு அப்பால் இந்தக் கவிதையைப் பார்க்க வேண்டும், அதில் புதைந்திருக்கும் அர்த்தங்களைப் புரிந்து கொள்ள.
   
   உள்ளும் வெளியும்
   ஒன்றுதான்
   சன்னலுக்கு -
   மூடி இருந்தாலும்
   திறந்திருந்தாலும்!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai