சுடச்சுட

  
  tm4

  உள்ளன்பால் கட்டுண்ட காதலர்கள் ஒருவருக்கொருவர் தம்மை உயிராகச் சொல்லி மகிழ்வதுண்டு. நேயத்தாலே நெஞ்சம் நெகிழ்ந்து, "நீ உயிர், உடல் நானே' என்றும், "என்னுயிர் நீ தானே' என்றும் பேசும் காதலர்களைக் காலந்தோறும் தமிழ் இலக்கியங்கள் சுவைபடச் சித்தரிக்கின்றன. இத்தகைய காதலரை, "ஓருயிருடைய இருதலைப் பறவை'யாகக் கலித்தொகை (89:4) காட்டுகின்றது.
   "ஊடல் உணர்தல்' என்னும் திருக்குறள் (1109) உரை விளக்கத்தில் உழுவலன்புடையோரை, "இருதலைப்புள்ளின் ஓருயிராய காதலர்' என்றே பகர்கின்றார் பரிமேலழகர். இதனடியாக, துன்பம் மேலிடும் பிரிவு காலத்தில் தலைவனோ, தலைவியோ தாம் உயிரோடிருப்பதை உறுதிசெய்யும் முறையில் வெளிப்படுத்தும் கருத்துகள் கற்போர் மனத்தைக் கவர்வனவாகும்.
   நெய்தற்கலியில் ஒரு காட்சி: களவொழுக்கத்தில் தலைவியொடு பல நாள் பழகிவந்த தலைவன், ஒரு நாள் அம்மகிழ்ச்சி நீங்கும்படி அவளைப் பிரிந்து சென்றான். பிரிவாற்றாமையால் அவளின் மெல்லிய தோள்கள் மெலிந்தன. அந்நிலையில், "அவனையே நினைந்து நினைந்து அவனுறைந்த இடந்தேடிச் சென்று நெடுங்காலமாக அவனிடம் பொருந்தி நின்றது என் நெஞ்சம்' என்று வருந்திக் கூறினாள் தலைவி.
   அதுகேட்ட மகளிர் சிலர், "அவனுக்கு ஏதேனும் தீங்கு நேர்ந்ததோ?' என்று வினவி நின்றனர்; அவ்வருத்தத்தினால், "இவள் கையறவு எய்தினாள்' என்றும் கவலை கொண்டனர். அப்போது தலைவி அவர்களை நோக்கி தலைவன் உயிரோடுள்ளான் என்னும் தன் நம்பிக்கையைப் பின்வருமாறு உறுதிப்படுத்தினாள்:
   "பெண்களே! என் தலைவனுக்கு ஏதம் ஒன்றும் ஏற்படவில்லை. என் இன்னுயிர் அனையான் அவன்.
   தீங்கின்றி அவன் உயிரோடிருக்கிறான் - என்பதை அவன் உயிரோடு ஒன்றுபட்ட எனது உயிரே இங்குக் காட்டிக் கொண்டிருக்கிறதே! தலைவன் இறந்திருப்பின் என்னுயிரும் எப்போதோ நீங்கியிருக்கும். அப்படி நீங்காமல் இருப்பதன் மூலம் அவன் இறந்து
   படாமல் உயிரோடு இருத்தலை அது காட்டவில்லையா?' என்றாள். இதனை,
   இன்னுயிர் அன்னாற்கு
   எனைத்தொன்றும் தீதின்மை
   என்னுயிர் காட்டாதோ மற்று
   (கலி.143:20-21)
   என்பதால் புலப்படுத்தினாள். இதே தொனியில் நம்மாழ்வாராகிய தலைவி (பராங்குச நாயகி)யும் பேசுவதைத் திருவாய்மொழியில் கேட்கலாம். திருவண்வண்டூர்ப் பெருமானிடம் காதல் கொண்ட தலைவி, அவனைப் பிரிந்த நிலையில் வண்டுகளை அவனிடத்துத் தூதாக அனுப்புகிறாள். அப்போது இறைவனிடம் சொல்லும்படி வண்டுகளிடம் அவள் சொன்ன செய்தி இதுதான்: "நானும் உயிரோடிருக்கிறேன் என்று சொல்லுங்கள்' என்கிறாள். ""என்னையும் உளள் என்மின்களே'' (6-1-10) என்பதுதான் அவளின் தூதுச் செய்தி.
   "தலைவன்-தலைவி ஆகிய இருவருள் எவர் ஒருவர் உயிர்நீங்கினும் மற்றவர் உயிரும் தானாகவே நீங்கும்' என்பர். அங்ஙனமன்றி அவர் ஒருவர் உயிரோடு இருப்பதால், அவளும் இருக்கின்றாள் (உளள்) என்பதை அவர் அறியவேண்டாமோ? எனவே, நானும் உயிரோடுள்ளேன் - என்பதை அவருக்குத் தெரிவியுங்கள்' என்றாளாம். நம்பிள்ளையின் ஈட்டுரை காட்டும் விளக்கம் இது.
   இதே கருத்து திருத்தக்கதேவரின் சீவக
   சிந்தாமணியிலும் இடம் பெற்றுள்ளது.
   காத லாள்உட லுள்ளுயிர் கைவிடின்
   ஏத மென்னுயிர் எய்தி இறக்கும்; மற்று
   ஆத லால்அழி வொன்றிலள்...(1631)
   என்னும் முடிவுக்கு வருகிறான் காதலன். "காதலியின் உயிர்நீங்கின் என்னுயிரும் துன்புற்று நீங்கும்'. இது நீங்காமையின் அவள் இறக்கவில்லை. உயிரோடு இருக்கிறாள். இதுவும் அறிதற்கோர் உபாயம்' என உணர்கிறான்.
   காலத்தால் இவர்களுக்குப் பின்வந்த கவிச்சக்கரவர்த்தி கம்பருடைய பாட்டிலும் இக்கருத்து எதிரொலிக்கின்றது.
   இலங்கையில் சீதையைப் பலவிடங்களிலும் தேடிய அனுமன் கடைசியில் அசோகவனத்தில் அவளைக் கண்டான். தன்னை இராம தூதனாக அறிமுகம் செய்து கொண்ட பின்னர், சிறையிருந்தவளின் ஏற்றமும் இராமபிரானின் வாட்டமும் புலப்படுமாறு அவளிடம் பேசுகின்றான்:
   ஆண்டகை நெஞ்சில் நின்றும்
   அகன்றிலை; அழிவுண் டாமோ?
   ஈண்டுநீ இருந்தாய், ஆண்டு அங்கு,
   எவ்வுயிர் விடும்இ ராமன்?
   (சுந்தர. உருக்காட்டு. 77)
   "ஆண்மை குணமிக்க இராமன் நெஞ்சைவிட்டு நீ சிறிதும் நீங்கினாயல்லை, அன்றியும் உன்னைத்தவிர அவனுக்கு வேறு உயிர் ஏது? மெய்யுயிராகிய நீ இங்கே-இலங்கையில் இருக்கையில் அங்கே - வனத்திலுள்ள இராமன் எவ்வாறு, எந்த உயிரை விடுவான்? இங்ஙனமிருக்க, அவனுயிருக்கு அழிவுண்டாகுமோ?' என்கிறான். "நீ உயிரோடிருப்பதாலேயே அவனும் உயிரோடிருக்கிறான்' எனும் கருத்து இதில் தொனிப்பதை உணரலாம்.
   தமிழிலக்கியங்களில் காணத்தகும் இத்தகைய சுவைக்கூற்றுகளும், உரை விளக்கங்களும் பயிலப்பயில இன்பம் பயப்பனவாகும்.
   -முனைவர் ம.பெ.சீனிவாசன்
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai