Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm5


  சுவிட்சர்லாந்திலிருந்து குடும்பத்துடன் தமிழகம் வந்திருக்கிறார் கவிஞர் வாணமதி. சென்னை விமான நிலையத்தில் இறங்கி, அடுத்த விமானத்தில் திருச்சிக்குச் செல்ல வேண்டும். இடைப்பட்ட நேரத்தில் கவிஞர் வாணமதி குடும்பத்தினருடன் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து ஓர் உணவு விடுதிக்குச் சென்றிருக்கிறார்.

  இவர்கள் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டிருந்த பக்கத்து மேஜையில் உணவருந்திக் கொண்டிருந்தவர்களில் ஒருவர், ""நீங்கள் ஈழத் தமிழர்களா? இலங்கையிலிருந்து வருகிறீர்களா?'' என்று கேட்டிருக்கிறார்.

  ""நாங்கள் சுவிட்சர்லாந்தில் இருந்து வருகிறோம். அங்கேதான் இருக்கிறோம்'' என்று கவிஞர் வாணமதியின் பெரிய பெண் கூறியதும், அவர்கள் அனைவருமே ஆச்சரியத்தில் உறைந்திருக்கிறார்கள். ""ஐரோப்பாவிலிருக்கும் நீங்கள் தமிழில் பேசுகிறீர்களே, ஆச்சரியமாக இருக்கிறதே...'' என்று அவர்கள் கேட்டதும், வாணமதியின் குழந்தைகள் இருவருக்குமே ஆத்திரம் பொத்துக்கொண்டு வந்திருக்கிறது.

  ""நாமெல்லாம் தமிழர்கள்தானே, தமிழில்  பேசுவதில் வியப்பென்ன இருக்கிறது? தாயகத்தில் வாழும் நீங்கள் ஆங்கிலத்தில் பேசுவதுதான் எங்களுக்கு வியப்பாக இருக்கிறது'' என்று அவருடைய மூத்த மகள் முகத்தில் அடித்தாற்போலக் கூறியிருக்கிறார்.

  விமான நிலையத்தில் குடியேற்ற சோதனை (இமிகிரேஷன்) நடத்தும் விதம் குறித்தும் அவர்களுக்கு சொல்லொணா கோபம்.  "வெளிநாடுகளிலிருந்து மிகுந்த ஆர்வத்துடனும், கனவுகளுடனும் தாயகம் திரும்புவோரையும்,  இந்தியா குறித்த பிரமிப்புடன் சுற்றிப்பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளையும் சிரித்த முகத்துடனும் அன்புடனும் வரவேற்க வேண்டும் என்பதுகூடவா நமது அதிகாரிகளுக்குத் தெரியாது' என்று குறைபட்டுக் கொண்டார் கவிஞர் வாணமதி.

  ""நாங்கள் கொச்சி, மும்பை, தில்லி விமான நிலையங்களில் எல்லாம் வந்திறங்கி இருக்கிறோம். அங்கே எல்லாம்கூட மிகுந்த நட்புறவுடனும் அன்புடனும் அதிகாரிகள் பயணிகளை நடத்துகிறார்கள். நமது தமிழகத்தில்தான் முகத்தைக் கடுகடுவென்று வைத்துக்கொண்டு, பயணிகளை விலங்குகளைப் போல அதிகாரிகள் நடத்துகிறார்கள்'' என்கிற அவரது கூற்றில் உண்மை இல்லாமல் இல்லை.  வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்குத்தான் தெரியும், அங்கெல்லாம் விமான நிலையங்களில் எந்த அளவுக்கு அன்புடன் வரவேற்பார்கள் என்று.

  கவிஞர் வாணமதியின் ஆதங்கத்தை வார்த்தைக்கு வார்த்தை நான் வழிமொழிகிறேன். இந்தியா, குறிப்பாகத் தமிழகம் மாறப்போவது எப்போது?

  தோழர் சிங்காரவேலர் பற்றி  பா.வீரமணி எழுதிய புத்தக வெளியீட்டு விழா கடந்த 13-ஆம் தேதி புதுவையில் நடந்தது. எனக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்ததால், விழா முடிந்த பிறகுதான் அந்த அழைப்பிதழையே பார்த்தேன். பெறவேண்டிய அளவு புகழும் போதிய மரியாதையும், கிடைக்கப்பெறாத தமிழகத்தின் தலைசிறந்த ஆளுமைகளில் தோழர் சிங்காரவேலரும் ஒருவர். 

  தென்னிந்தியாவிலேயே ஒரு தனி நபர் வீட்டில் பெரிய நூலகம் இருந்தது தோழர் சிங்காரவேலர் வீட்டில்தான் என்பார்கள்.  அவர் மறைந்தபோது, "யோக்கியர்களில் ஒருவர் மறைந்து விட்டார்' என்று மூதறிஞர் ராஜாஜி பதிவு செய்திருக்கிறார் என்றால், சிங்காரவேலரின் உயரம் எந்தளவு என்பதை உணரலாம்.

  சிங்காரவேலர் பன்மொழி அறிஞர்; பல்துறை வித்தகர். கேட்போரின் ரத்தம் கொதிப்படையும் விதத்தில் உணர்ச்சி கொந்தளிக்க உரையாற்றும் பேச்சாளர். எளிய தமிழில் அனைவருக்கும் புரியும் விதத்தில் அறிவியல், சமூகவியல் தொடர்பான கட்டுரைகள் எழுதுவதில் தனித்துவம் படைத்தவர். இன்றைக்கு எண்பது ஆண்டுகளுக்கு முன்பே அறிவியல், உளவியல், சமூகவியல், வானியல், பொருளியல் உள்ளிட்ட துறைகளில் கட்டுரைகள் எழுதித் தமிழ்ச் சமுதாயத்தை மேம்படுத்தியவர்.

  அவர் எழுதிய முதல் கட்டுரை, அயோத்திதாச பண்டிதர் வெளியிட்ட "தமிழன்' நாளிதழில் வெளிவந்துள்ளது. "தொழிலாளன்' என்கிற மாத இதழை 1923 முதல் வெளியிட்டு வரலானார் சிங்காரவேலர். இ.எல்.அய்யர் என்கிற தொழிற்சங்கத் தலைவர் நடத்திவந்த "சுதர்மா' என்கிற ஆங்கில  இதழில் தொழிலாளர் உரிமை, முன்னேற்றம், அவர்களது போராட்டம் ஆகியன குறித்தெல்லாம் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறார்.

  ஈரோட்டிலிருந்து பெரியார் நடத்திய "குடியரசு' வார இதழிலும், சுதேசமித்திரன், சண்டமாருதம் இதழ்களிலும் அவருடைய கட்டுரைகள் தொடர்ந்து பிரசுரமாகி வந்தன. பன்மொழி வித்தகராக தோழர் சிங்காரவேலர் இருந்திருக்கிறார். தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷியன், ஜெர்மன், ஹிந்தி, உருது மட்டுமல்லாமல், பாலி மொழியையும் கற்று வைத்திருந்தார் எனத் தெரிகிறது.

  சாகித்ய அகாதெமி வெளியிட்டிருக்கும் "இந்திய இலக்கியச் சிற்பிகள்' வரிசையில், சிங்காரவேலர் குறித்த வரலாற்றுப் பதிவை பா.வீரமணி வெளிக்கொணர்ந்திருக்கிறார். இந்தப் புத்தகம் வெளியிடப்பட்ட ஒரே மாதத்தில் அதன் முதல் பதிப்பு விற்பனையாகிவிட்டிருக்கிறது. இப்போது மூன்றாவது பதிப்புக்குக் காத்திருக்கிறது.  இதிலிருந்து சிங்காரவேலரின் மரியாதையும், நூலின் மதிப்பும், நூலாசிரியரின் படைப்புத் திறனும் வெளிப்படுகின்றன.

  தொழிற்சங்கப்பணி பொலிவிழந்துவிட்டிருப்பது சமுதாய மாற்றம். ஆனால், தொழிற்சங்க  முன்னோடிகளின் தன்னலமற்ற தியாகமும், பங்களிப்பும் நினைவுகூரப்படாமல் இருந்தால், அது சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் இழுக்கு!

  ஜூலை மாத "கணையாழி' இதழில் வெளிவந்திருக்கும் கவிஞர் மு.ச.சதீஷ்குமாரின் "காடுகளில் அலையும் வெயில்' சிந்திக்க வைக்கிறது. என்னை "சபாஷ்' போட வைக்கிறது. உங்களுடன் பகிர்ந்துகொள்ள வைக்கிறது.

  அகழாய்வில் சிக்கிய
  நதிக்கரை நாகரிகமாய்
  நீரைத் தொலைத்த
  வடுக்களோடு பாறைகள்...
  வார்த்த வெம்மையில்
  வாடி வதங்கி
  தான் பாய்ச்சி வளர்த்த
  மரங்களைத் தேடி காலணியின்றி
  காடுகளில் அலையும் வெயில்...

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai