கபிலரின் காதலும் கடமையும்

​சங்க இலக்கியப் படைப்புகளுள் மிக அழகான படைப்பு, கபிலர் இயற்றிய "குறிஞ்சிப் பாட்டு'. குறிஞ்சிப் பாட்டை ஓர் "உளவியல் சிறுகதை' என்றும் சொல்லலாம்.
கபிலரின் காதலும் கடமையும்


சங்க இலக்கியப் படைப்புகளுள் மிக அழகான படைப்பு, கபிலர் இயற்றிய "குறிஞ்சிப் பாட்டு'. குறிஞ்சிப் பாட்டை ஓர் "உளவியல் சிறுகதை' என்றும் சொல்லலாம்.  தாயிடம் தலைவியின் காதலை தோழி எடுத்துக்கூறி, திருமணத்திற்கு தாய் சம்மதிக்கும்படி கூறுவதைப் போல இக்கதை அமைந்துள்ளது.

தலைவியும் தோழியும் தினைப்புனம் காக்கச் செல்லுமிடத்தில் பெருமழை பொழிகிறது. அப்போது அழகான அருவியில் விளையாடி அந்தப் பகுதியில் பூத்துக் குலுங்கும் பலவகை மலர்களைப் பறித்துத் தொடுத்து தம்மை அலங்கரித்து, மகிழ்ந்து விளையாடும், வேளையில், வேட்டைக்கு வந்த தலைவன் அவர்களைக் காண்கின்றான். 

பெண்களைக் கண்ட தலைவன் அவர்களிடம் மிகுந்த மரியாதையுடன் நடந்து கொள்கின்றான். புதிய மனிதனைக் கண்டு பெண்கள் அச்சம் கொண்டு ஒதுங்குகின்றனர்.

"மெல்லிய இனிய மேவரக் கிளந்து, எம் 
ஐம்பால் ஆய் கவின் ஏத்தி, "ஒண் தொடி, 
அசை மென் சாயல், அவ் வாங்கு உந்தி
மட மதர் மழைக் கண், இளையீர்! இறந்த 
கெடுதியும் உடையேன்'  என்றனன் அதனெதிர் 
சொல்லேம் ஆதலின், அல்லாந்து கலங்கிக் 
கெடுதியும் விடீஇர் ஆயின், எம்மொடு 
சொல்லலும் பழியோ, மெல் இயலீர்?'

என இப்படி, மென்மை இனிமை, விருப்பம் கலந்த மொழியில் பேசுகிறான் தலைவன். ""உங்களுக்குக் கெடுதி செய்துவிட்டேன் போலும். அழகான பெண்களே, இளமான்கள் போல கண்களையுடையோரே என அழைத்து, உங்களுக்கு நான் செய்த தீங்கு யாது? பேச மாட்டீர்களா? பேசினால் உங்களுக்குத் தீங்கு நேர்ந்துவிடுமா?'' என்று மனம் வருந்திக் கேட்கின்றான். அவர்களின் மறுமொழிக்காகக் காத்து நிற்கின்றான்.

அப்போது வெகுண்டு ஓடி வரும் யானையிடமிருந்து தலைவியைக் காப்பாற்றுகின்றான். பயத்தில் நடுங்கும்  தலைவியைக் காண்கின்றான்,  காதல் கொள்கின்றான். அவளைக் களவு மணம் எனும் காந்தருவ மணம் புரிகின்றான். காட்சிகள் நம் கண்முன் விரிகின்றன கபிலரின் சொற்களில். மலைப் பிரதேசத்தின் அழகும் குளுமையும் தேர்ந்த ஓவியனின் ஓவியம் போல நம் மனத்தில் வடிவங்களாய் விரிகின்றன வார்த்தைகளில். காதல் காட்சிகள் நம்மையும் கதைக்குள் இழுத்துச் செல்கின்றன. 

தலைவன், தலைவியை மணம் செய்யும் வேளையில் அவளுக்கு  இறைவன் மீது ஆணையிட்டு ஒரு வாக்களிப்பான். அவளோடே கூடி அவன் இல்லறம் ஏற்பதாகவும், அந்த இல்லறத்தின் நோக்கமும் காரணமும், எப்போதும் செல்வச் செழிப்போடும் பெரிதாய்த் திறந்த வாயிலோடும் கூடிய இல்லத்தில் வந்தவரை எல்லாம் வரவேற்று, நெய் வடியும் உணவை அவர்களுக்கு அளித்து, மீதமுள்ள உணவை நீ எனக்கு இட, நாம் இணைந்து உண்ணும் பெரு வாழ்வை விரும்பி ஏற்கின்றேன்'' என கடவுளை வணங்கி சத்தியம் செய்கின்றான். 

இங்கே கபிலர் காட்டும் தமிழர் வாழ்வியல் நெறி உலகிற்கே வழிகாட்டவல்லது. சொன்ன சொல் தவறாமை, களவு மணம் கற்பு மணத்தில் முடியும் தன்மை, பெண்களிடம் கண்ணியம் காக்கும் மனிதர்களாய் குறிஞ்சி மக்கள் வாழ்ந்தமை, எல்லாவற்றிற்கும் மேலாக இல்லறத்தின் நோக்கம் விருந்தோம்புதல்.  இதுவே தமிழ்ப் பெருங்குடியின் பண்பு எனத் தமிழரின் பெருமையை உலகறிய விளம்புகிறது கபிலரின் குறிஞ்சிப்பாட்டு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com