இந்த வார கலாரசிகன்

எட்டயபுரத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கோலாகலமாக மகாகவி பாரதியாரின் பிறந்தநாளைக் கொண்டாடியபோது, கேள்வி கேட்பாரற்று கழிப்பறை அருகே கிடந்தது,


எட்டயபுரத்தில், சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கோலாகலமாக மகாகவி பாரதியாரின் பிறந்தநாளைக் கொண்டாடியபோது, கேள்வி கேட்பாரற்று கழிப்பறை அருகே கிடந்தது, அந்த மணிமண்டபத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா கல்வெட்டு. இளசை மணியன், "தினமணி' நாளிதழின் விளாத்திகுளம் நிருபர் சங்கரேஸ் வர மூர்த்தி ஆகியோர்தான் அதை எனது கவனத்துக்குக் கொண்டு வந்தார்கள்.

உலகிலேயே  மக்களின் நன்கொடையில்  மணிமண்டபம் எழுப்பப்பட்ட ஒரே ஒரு கவிஞன் நமது மகாகவி பாரதியார் மட்டுமே. எட்டயபுரம் சமஸ்தான மகாராஜா நன்கொடையாக அளித்த நிலத்தில், பொதுமக்களிடம் நன்கொடையாக வசூலித்த பணத்தில் கட்டப்பட்டது அந்த மணிமண்டபம். இதுகுறித்து ஏற்கெனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.

1945-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி மூதறிஞர் ராஜாஜியால் மணிமண்டபத்துக்கான கட்டுமானப்பணி தொடங்கி வைக்கப்பட்டது. அதைப் பதிவு செய்யும் அந்தக் கல்வெட்டுதான் ஒரு மூலையில் கழிப்பறை அருகில் போடப்பட்டிருந்தது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் இதைத் தெரிவித்தவுடன், அவரே நேரில் சென்று அந்தக் கல்வெட்டைப் பார்வையிட்டு, மீண்டும் நிர்மாணம் செய்ய உத்தரவிட்டார். இப்போது, அந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டு, அந்தக் கல்வெட்டு மணிமண்டபத்தின் முகப்பில் மறுபடியும் நிறுவப்பட்டுவிட்டது. மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரிக்கு பாரதி அன்பர்கள் அனைவரின் சார்பிலும் நன்றி.

இத்துடன் பணி முடிந்துவிடவில்லை.  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பராமரிப்பில் மணிமண்டபத்தை ஒட்டி  ஒரு நூலகக் கட்டடம் இருக்கிறது. அதில் பாரதியார் குறித்த நூல்கள் அனைத்தையுமே இடம்பெறச் செய்ய வேண்டும். பாரதி குறித்த அனைத்து நூல்கள், ஆய்வுகள், ஆவணங்கள் உள்ளிட்டவை அந்த நூலகத்தில் இடம்பெறுவதையும், அவை முறையாகப் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

மணிமண்டப வளாகத்தில் புகைப்பட அருங்காட்சியகம் ஒன்று இருக்கிறது. அதற்கும் பல புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. மணிமண்டப அடிக்கல் நாட்டு விழா, திறப்பு விழா, பாரதியார் நூற்றாண்டு விழா தொடர்பான புகைப்படங்களைத் தேடிப் பிடித்து அந்த அருங்காட்சியகத்தை முழுமைப்படுத்தும் பொறுப்பு தமிழக அரசின் செய்தித்துறைக்கு உண்டு. அதற்கு உதவ "தினமணி' மட்டுமல்ல, தமிழகத்திலுள்ள எல்லா ஊடகங்களுமே தயாராக இருக்கும்.

இது அண்ணல் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்த ஆண்டு. இந்தியா முழுவதும் ஒவ்வொருவரும், ஒவ்வோர் அமைப்பும் அவரவர் பாணியில் மகாத்மா காந்தியின் 150-ஆவது  பிறந்த ஆண்டைக் கொண்டாட முற்பட்டிருக்கிறார்கள். அவர்களில் புதுக்கோட்டையைச் சேர்ந்த முனைவர் வைர.ந. தினகரனும் ஒருவர். அவரால் நிறுவப்பட்டிருக்கும் "அகில இந்திய மகாத்மா காந்தி சமூகநலப் பேரவை' தனது பங்குக்குப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியை நடத்துகிறது. 

கடந்த வாரம் ஸ்ரீபாரதி கலை இலக்கியக் கல்லூரியில் பாரதி இலக்கிய மன்றத் தொடக்க விழாவிலும், கம்பன் விழாவிலும் கலந்துகொள்ள புதுக்கோட்டை சென்றிருந்தபோது, முனைவர் தினகரனை சந்தித்ததில் எனக்குப் பெருமகிழ்ச்சி. அவர் இந்தத் தகவலைத் தெரிவித்ததில் அதைவிட மகிழ்ச்சி.
கல்லூரி மாணவர்களுக்கு "ஊழலற்ற, மதுவற்ற, உண்மையான ஜனநாயக இந்தியா உருவாக' என்றும்; பள்ளி மாணவர்களுக்கு "ஊழல், லஞ்சம், மதுவற்ற தமிழகம் உருவாக' என்றும்; "காலத்தின் தேவை காந்தியமே!' என்கிற தலைப்பிலும் கட்டுரைகள் கோருகிறார்கள். gandhiperavai@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு ஆகஸ்ட் 25-ஆம் தேதிக்குள் கட்டுரைகள் அனுப்பப்பட வேண்டும்.

எல்லா பள்ளிகளும், கல்லூரிகளும் தங்கள் மாணவ-மாணவியருக்கு இந்தக் கட்டுரைப் போட்டி குறித்துத் தெரிவித்து, பங்குபெற வைப்பதன் மூலம் அவர்கள் காந்தியடிகளின் 150-ஆவது பிறந்தநாள் விழாவில் பங்களிக்க முடியும். 

புதுக்கோட்டைக்கு ரயிலில் பயணிக்கும்போது, படிப்பதற்காக நான் எடுத்துச் சென்ற புத்தகங்கள் இரண்டு. ஒன்று, ஏவி.மெய்யப்பன் எழுதிய "எனது வாழ்க்கை அனுபவங்கள்', மற்றொன்று  டாக்டர் கு.கணேசன் எழுதிய "ஒல்லி பெல்லி'.

ஏவி.எம்.மின் "எனது வாழ்க்கை அனுபவங்கள்' 45-ஆண்டுகளுக்கு முன்னால் "குமுதம்' வார இதழில் தொடராக வந்தபோதே நான் படித்ததுதான் என்றாலும், இப்போது மீண்டும் படிக்கும்போதும் அதே சுவாரஸ்யம், அதே விறுவிறுப்பு. தனது கடின உழைப்பாலும், திறமையாலும், துணிவாலும் மிகப்பெரிய சாதனைகளைச் செய்து காட்டிய மெய்யப்பனாரின் அனுபவங்கள், அவருடைய திரைப்படங்களைப் போலவே தெவிட்டாத தேன்!

"நூலின் தலைப்பு ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளதால் கோபித்துக் கொள்ளாதீர்கள். அதற்காக நூலைப் படிக்காமலும் இருந்து விடாதீர்கள்' என்கிற வேண்டுகோளுடன் ஓராண்டுக்கு முன்னர் ராஜபாளையம் "கணேஷ் மருத்துவமனை' அதிபர் டாக்டர் கு.கணேசன் அனுப்பித் தந்திருந்த புத்தகம் "ஒல்லி பெல்லி'. தொப்பையைக் குறைக்க என்னதான் வழி என்று படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்களுக்காகவே எழுதப்பட்ட புத்தகம் இது.

"கல்கி' வார இதழில் வெளிவந்தபோது, நான் படிக்கவில்லை. இப்போதுதான் படிக்கிறேன். படித்ததுடன் நின்றுவிடவில்லை. அவர் கூறியிருக்கும் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். தொப்பை இருக்கிறதா? "ஒல்லி பெல்லி' கையடக்க வழிகாட்டி!

நாங்குநேரியிலிருந்து வாசகர் ஒருவர் தபால் அட்டையில் அனுப்பித் தந்திருக்கும் கவிதை இது. "கூடல் தாரிக்'  என்பவரின் "மூங்கில் வனம்' கவிதைத் தொகுப்பில் இடம்பெற்றிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். வேறு விவரம் எதுவும் தரப்படவில்லை. 

வனத்தையும் வாழ்க்கையையும்
இழந்து நிற்கும்
சபிக்கப்பட்ட யானையை
ஆசீர்வதிக்க நிர்பந்திக்கிறான்
பாகன்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com