பாலைநிலக் கொள்ளையர்கள்

வருவாய் ஈட்டுவதற்காகக் கணவன் வெளியூர் செல்லும்பொழுது அவ்வழியில் வேலும் கையுமாகத் திரியும் கொள்ளையர்களிடமிருந்து எவ்விதத் தீங்கும் அவர்களுக்கு நேராது இருக்க மனைவிமார்கள் இறைவனை வேண்டுவர்.
பாலைநிலக் கொள்ளையர்கள்

வருவாய் ஈட்டுவதற்காகக் கணவன் வெளியூர் செல்லும்பொழுது அவ்வழியில் வேலும் கையுமாகத் திரியும் கொள்ளையர்களிடமிருந்து எவ்விதத் தீங்கும் அவர்களுக்கு நேராது இருக்க மனைவிமார்கள் இறைவனை வேண்டுவர்.

இந்நாளைப் போல் அந்நாளிலும் வழிபறிக் கொள்ளையர்கள் இருந்தாலும், அவர்கள் குழுமியுள்ள வழியே செல்லும் செல்வந்தர்கள், வணிகர்களை வழிமறித்து வழிப்பறி செய்தனர். அந்நிலப் பகுதிக்குப் "பாலை' என்று பெயர் சூட்டினர்.

தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணியே அஞ்சினேன்' என்று, தன் கணவனுக்கு வழிப்பறி கொள்ளையர்கள் என்ன தீங்கு செய்வார்களோ? என்ற அச்சத்தைத் தலைவி வெளிப்படுத்துகிறாள். தலைவர் சென்ற வழியின் கொடுமையை நினைப்பதால்  தலைவிக்கு  இத்தகைய ஆற்றாமை உண்டாகின்றது. "பாலை' பாடிய புலவர் பெருங்கடுங்கோவின் பாடல் இது.   

"உள்ளது சிதைப்போர்  உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவெனச்
சொல்லிய வன்மை தெளியக் காட்டிச்
சென்றனர் வாழி தோழி - யென்றும்
கூற்றத்தன்ன கொலை வேல் மறவர்    
ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த
படுமுடைப்  பருந்துபார்த் திருக்கும்
நெடுமூ திடைய நீரில் ஆறே!'                       (283)

"தோழி! தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப் பெற்று, தம்பால் உளதாகிய செல்வத்தைச் செலவழிப்பவர்களை செல்வந்தர் என்று உலகத்தார் கூறமாட்டார். அவ்வாறு தாமாக ஈட்டிய பொருள் இல்லாதார் முந்தையோர் பொருளின் பயனைத் துய்த்து வாழ்தல் இரத்தலைக் காட்டினும் இழிவு உடையது என்று சொன்ன ஆண்மைத் தன்மையை யாம் தெளியும்படி எடுத்துக்கூறி,  எப்பொழுதும் கூற்றுவனைப் போன்ற கொலைத் தொழிலைச் செய்யும் வேலை உடைய மறச் சாதியார் வழியின் இடத்தே தங்கி, வழிப்போவாரைக் கொன்றதனால் உண்டான புலாலை பருந்துகள் எதிர்நோக்கித் தங்கியிருக்கின்ற நெடிய பழைய இடத்தை உடையனவாகிய நீர் இல்லாத பாலை நிலத்து வழிகளிலே தலைவர் சென்றார்; அவர் வாழ்வாராக!' என்கிறாள் தலைவி! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com