Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வார கலாரசிகன்

  By DIN  |   Published on : 16th June 2019 02:21 AM  |   அ+அ அ-   |    |  

  tm3


  இரண்டு வாரங்களுக்கு முன்பு  "இந்த வாரம்' பத்தியில் "தென்னாப்பிரிக்காவில் இருக்கும் நமது வம்சாவழியினர்' என்று நான் குறிப்பிட்டிருந்தது விவாதப் பொருளாகியிருக்கிறது. கடிதம், மின்னஞ்சல், கட்செவி அஞ்சல், குறுஞ்செய்தி என்று  நாலாபுறமிருந்தும் கேள்விக் கணைகள். "வம்சாவளி' என்று தானே குறிப்பிடுவது வழக்கம். நீங்கள் "வம்சாவழி' என்று குறிப்பிட்டிருக்கிறீர்களே என்று விமர்சனங்கள்.

  "வம்சாவழி' என்ற சொல்லுக்கு "சந்ததி' என்று சொல்லப்படும் "பரம்பரை வழி' என்று  பொருள்.  வாழையடி வாழை என வருவது  குலவழி, மரபுவழி என்று பழகு மொழியில் கையாளப்படுகிறது. ""தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும்'' என்கிற "தெரிந்து தெளிதல்' அதிகாரத்தின் 508-ஆவது குறள்,  "வழி' என்கிற சொல்லுக்கு  விளக்கம்.  எவ்விதக் குறைவுமின்றி சீராகத் தங்குதடையின்றிச் செல்வது வழி.  அதனால், "வம்சாவழி' என்று குறிப்பிடுவதில் தவறில்லை. 

  அதே நேரத்தில், "வம்சாவளி' என்பதும் ஏற்புடையதே!  "வம்சம்' என்றால், ஒரு சந்ததியில் வந்தவர்கள் என்று பொருள். "ஆவளி' என்றால்  "வரிசை'. தீபங்களின் வரிசை "தீபாவளி' என்று வழங்குவது போல, வம்ச வரிசை "வம்சாவளி' என்று வழங்கப்படுகிறது.  

  அரை நூற்றாண்டு காலத்துக்கு முன்பு வரை "வம்சாவழி' என்பது பரவலாகக் கையாளப்பட்டு அதற்குப் பின்னால் "வம்சாவளி' என்பது வழக்கமாக மாறிவிட்டது. குறிப்பாக,  தமிழகத்திலிருந்து இலங்கைக்குத்  தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியச் சென்றவர்களின் வம்சத்தினர் "இந்திய வம்சாவளித் தமிழர்கள்' என்று அழைக்கப்பட்டதால்,  "வம்சாவழி' என்பது மெல்ல மறைந்து "வம்சாவளி' என்பது பழகு மொழியாகக் கையாளப்பட்டு வருகிறது. 

  "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்பதற்கிணங்க நமது "வம்சாவழி'யினர் என்பதை "வம்சாவளி'யினர் என்று திருத்திக் கொள்வதில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஏற்றுக்கொள்கிறேன். 


  ""இவ்வுலகில் மூன்று பொருள்கள் விலைமதிக்க முடியாதவை என்கிறார்கள் சான்றோர். அவை... தண்ணீர், உணவு,  அறிவுரை. இம்மூன்றில் என்னாலான மூன்றாவதைக் கொடுத்திருக்கிறேன் - பழைய சாக்லேட்டை  புதிய பாக்கெட்டில்!'' என்கிற முன்னுரையுடன்  தனது "பத்து கட்டளைகள்' என்கிற புத்தகத்தை சமர்ப்பித்திருக்கிறார் எழுத்தாளர் ஜி.கெளதம்.  அந்தப் பீடிகை என்னைக் கவர்ந்தது. விறுவிறுப்பாகப் பக்கங்களைப் புரட்டுவதும் படிப்பதுமாக உண்மையாகவே சாக்லேட்டை  சுவைப்பதுபோல சுவாரசியமாகப் பயணித்தேன்.

  ஓரிரு மாதங்களுக்கு முன்னால் என்னைச் சந்திக்க வந்திருந்த  ஜி.கெளதம் என்கிற எழுத்தாளர் குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன், படித்திருக்கிறேனே தவிர அவரை சந்தித்ததில்லை. 

  "பத்து கட்டளைகள்' புத்தகத்துக்கும் விவிலியத்தின் பத்து கட்டளைகளுக்கும் தொடர்பு எதுவும் கிடையாது. பல ஆண்டுகளுக்கு முன்னால் "ஜூனியர் போஸ்ட்'  வார இதழில் வெளியாகிப் பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்ற இந்தக் கட்டுரைகளின் தொகுப்பு, அவர் கூறுவது போல தன்னம்பிக்கை நூல்களில் ஒரு தனி ரகம். 

  நேர விரயமின்றி உடற்பயிற்சி, குழந்தையை புத்திசாலியாக வளர்ப்பது, சொந்தத் தொழில் தொடங்குவது, திருப்திகரமான மண வாழ்க்கை, மனதளவில் சந்தோஷம் உடலளவில் உற்சாகம், செயல்களின் தனித்தன்மை, பணக்கஷ்டம் இல்லாமல் வாழ்வது, 24 மணி நேரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது, இவை எல்லாம் ஏன்,  பட்டுப்புடவை முதலிய பல்வேறு பிரச்னைகள், அவை குறித்து வளவள என்று இல்லாமல் சின்னச் சின்ன உதாரணங்களுடன் விளக்கம். ஒவ்வொரு தலைப்பு குறித்தும் பத்து வழிமுறைகள். இதுதான் "பத்து கட்டளைகள்' புத்தகம்.

  "எடுத்தோம் படித்தோம் என்பதோடு மட்டும் நின்றுவிடாமல்,  படித்த கட்டளைகளை நினைவில் வைத்துக்கொள்ளப் பழகுங்கள். நினைவில் நிற்பவற்றை செயல்படுத்திப் பழகுங்கள்' என்கிற எழுத்தாளர் கெளதமின் பின் குறிப்பைப் பின்பற்ற முயற்சிக்கிறேன்.

   

  "கிரேஸி தீவ்ஸ்  இன் பாலவாக்கம்'  நாடக அரங்கேற்றத்தன்று நான் இருந்ததாக நினைவு. அது முதலாவது காட்சிதானா என்று நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. "கிரேஸி' மோகனின் நெருங்கிய நட்பு வட்டத்தில் நான் இருந்ததில்லை. ஆனால், அவரது ரசிகர் கூட்டத்தில் அன்று முதல் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறேன்.

  "கிரேஸி' மோகன் நான் பார்த்து பிரமித்த  "அஷ்டாவதானி'. இவருக்குத் தெரியாத விஷயம் எதுவுமே கிடையாதா என்று நம்மை வியப்பில் ஆழ்த்திவிடுவார். சரஸ்வதி நாக்கில் அமர்ந்திருக்கிறார் என்பார்கள்.  "கிரேஸி' மோகனுக்கு நகைச்சுவை நாக்கில் அமர்ந்திருந்தது. விரசம் கலக்காமல், வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கும் வித்தை அவருக்கு இயல்பாகவே கைவரப்பெற்றிருந்தது.

  "கிரேஸி' மோகனின் மறைவின்போது நான் சென்னையில் இல்லை. அதனால் அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. அதனாலென்ன? எப்போதுமே சிரித்த முகத்துடன், வாய் நிறைய வெற்றிலை சீவலும், வார்த்தை நிறைய நகைச்சுவையுமாக எனது மனத்திரையில்  "கிரேஸி'  இருப்பார் என்று ஆறுதலடைந்தேன்.

  நாடகம், சினிமா இல்லாமல்  "கிரேஸி' மோகனுக்கு இன்னொரு மறுபக்கம் உண்டு. அதுதான் அவருக்குள் இருக்கும் கவிஞர். அவருக்குப் பிடித்தமான பொழுதுபோக்கே "வெண்பா' இயற்றுவதுதான். கவிதை புனையும் ஆற்றலுள்ள "கிரேஸி' மோகன் ஏன் சினிமாவுக்குப் பாட்டெழுதவில்லை என்று தெரியவில்லை.  "கிரேஸி' மோகன் எழுதிய புதுக்கவிதை ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்த வாரத்துக் கவிதையாக அதைத் தருகிறேன்.

   

  எந்தக் குழந்தையும்
  கிருஷ்ணன்தான்
  குழந்தை மண்ணைத் தின்றால்
  வாய்க்குள் பார்
  வையம் தெரியாவிட்டால்
  ஐயமே இல்லை - நீ
  யசோதை இல்லை!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai