இந்த வார கலாரசிகன்

இன்று மாலை ஐந்தரை மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள "கவிக்கோ' மன்றத்தில், "தினமணி'யும் எழுத்தாளர் சிவசங்கரியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா. சிறுகதைப்
இந்த வார கலாரசிகன்

இன்று மாலை ஐந்தரை மணிக்கு, சென்னை மயிலாப்பூர் சி.ஐ.டி. காலனியில் உள்ள "கவிக்கோ' மன்றத்தில், "தினமணி'யும் எழுத்தாளர் சிவசங்கரியும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியின் பரிசளிப்பு விழா. சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி நீதியரசர் அரங்க. மகாதேவன் பரிசு வழங்கி வாழ்த்துகிறார். 

கடந்த ஆண்டு சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதைகளுடன், பரிசு பெறாத, ஆனால் பாராட்டும்படியான சிறுகதைகளையும் தொகுத்து புத்தகமாக வெளியிட வேண்டும் என்று சிவசங்கரி விரும்பினார். இந்த ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் அந்தப் புத்தகமும் வெளியிடப்படுகிறது. 

சென்ற ஆண்டு போல சிறப்பான கதைகள் வந்தனவா என்றால், உற்சாகமாக பதிலளிக்க முடியவில்லை. எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமே சிறுகதைப் போட்டியின் வெற்றியாக அமையாது. இந்த ஆண்டு பரிசுத் தொகையில் சிறு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. முதல் பரிசு ரூ.25,000, இரண்டாவது பரிசு ரூ.15,000, மூன்றாவது பரிசு ரூ.10,000 வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அடுத்ததாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து சிறுகதைகளுக்கு தலா ரூ.5,000 வழங்கப்படுகிறது.

முதல் பரிசு பெறும் எஸ். பர்வீன் பானு (தந்தையுமானவள்), இரண்டாம் பரிசு பெறும் "சரசுராம்' என்கிற கே. ராம்குமார் (பார்வைகள்), மூன்றாம் பரிசு பெறும் "ஆதித்யா' என்கிற ரமணன் (கருணை) ஆகியோருக்கும், ஆறுதல் பரிசு பெறும் பத்து எழுத்தாளர்களுக்கும் பாராட்டுகள்.

தமிழில் சிறுகதை இலக்கியம் வலுப்பெற வேண்டும். நல்ல கதைகள் எழுதப்பட வேண்டும். அவை படிக்கப்பட வேண்டும். அடுத்த தலைமுறையினரைத் தமிழ் படிக்க வைக்க, கதை சொல்லும் உத்தியால் மட்டுமே முடியும் என்று தோன்றுகிறது. அதனால், படைப்பிலக்கியவாதிகளின் கடமை அதிகரிக்கிறது. இதை உணர்ந்துதான் ஒரு  லட்சம் ரூபாயை ஒதுக்கி சிறுகதைப் போட்டி நடத்தும் திட்டத்தை எழுத்தாளர் சிவசங்கரி முன்மொழிந்து நடத்த முற்பட்டிருக்கிறார். அவரது கனவு மெய்ப்பட வேண்டும். புதிய பல தரமான சிறுகதை எழுத்தாளர்கள் உருவாக வேண்டும்.

மாலையில் "கவிக்கோ' மன்றத்தில் சந்திப்போம்!

நாளை கவியரசு கண்ணதாசனின் பிறந்த நாள். வழக்குரைஞர் த. இராமலிங்கம் எழுதிய "காற்றில் தவழும் கண்ண
தாசன்' புத்தகம் நினைவுக்கு வந்தது. புதிய மக்களவையின் தொடக்க நிகழ்ச்சியை "வேடிக்கை பார்ப்பதற்காக' கடந்த புதன்கிழமை தலைநகர் தில்லி சென்றபோது, கையோடு எடுத்துச் சென்றிருந்த புத்தகம் அதுதான்.

சில வாரங்களுக்கு முன்னால் புதுவையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் வழக்குரைஞர் இராமலிங்கத்தை சந்தித்தேன். "காற்றில் தவழும் கண்ணதாசன்' புத்தகம் குறித்துக் குறிப்பிட்டேன். உடனடியாக, அவர் எழுதிய வேறு இரண்டு புத்தகங்களுடன் இந்தப் புத்தகத்தையும் அனுப்பித் தந்துவிட்டார். எத்தனை முறை படித்தாலும் சலிப்பே ஏற்படாத ஒன்று இருக்குமானால், அது கவியரசர் குறித்த செய்திகளும் பதிவுகளுமாகத்தான் இருக்கும். அதிலும் த.இராமலிங்கத்தால் எழுதப்பட்டிருக்கிறது என்றால் கேட்கவா வேண்டும்?

கடந்த இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிறந்த தமிழர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் ஏதாவதொரு வகையில் கவியரசு கண்ணதாசனின் படைப்புகளால் கவரப்பட்டவர்களாக இருந்திருப்பார்கள். திரைப்படமே பார்க்காத, சினிமாப் பாட்டே கேட்காத ஆன்மிகவாதிகள்கூட, கவியரசரின் "அர்த்தமுள்ள இந்துமதம்' படித்திருப்பார்கள். அவர்களுக்கே தெரியாத இந்துத்துவத்தின் உட்பொருளை எளிய தமிழில் எடுத்தியம்பிய கண்ணதாசனை நினைத்து வியந்து போற்றியிருப்பார்கள்.

வழக்குரைஞர் இராமலிங்கம் இந்தப் புத்தகத்தை ஒரு ரசிகனாகப் படைத்திருப்பதால், இதைப் படிக்கும்போது அவருடன் நாம் கைகோத்துப் பயணிக்கிறோம். எந்தெந்த இலக்கியங்களிலிருந்து கையாண்டு, தனது திரைப்படப் பாடலுக்கான கருத்துகளை சாமானியர்களுக்கும் புரியும் விதத்தில் கண்ணதாசன் சுவையாக வழங்கியிருக்கிறார் என்பதைப் பட்டியலிட்டுத் தொகுத்து வழங்கி இருக்கிறார் அவர்.

இந்த நூலுக்கு மதிப்புரை வழங்கியிருப்பவர் கண்ணதாசனுடன் பதினாறு ஆண்டுகளுக்கு மேல் திரைத்துறையில் எதிர்க்கடை வைத்துப் பயணித்த கவிஞர் வாலி. ""அகவையில், அறிவில், ஆற்றலில், ஆளுமையில் - அனைத்திலும் கண்ணதாசன் என்னிலும் கூடுதலானவர். இதில் இன்றளவிலும் எனக்கு இரண்டு சிந்தனையே இல்லை. அவருடைய அநேக வரிகளில் நான் ஆழங்காற்பட்டதன் காரணமாகத்தான் என் பாட்டில் அவர் தெரிகிறார்'' என்று வெளிப்படையாகக் கூறும் கவிஞர் வாலியே இந்தப் புத்தகத்தைப் பாராட்டி இருக்கும்போது, அதற்கு மேல் எழுத என்ன இருக்கிறது?


பரபரப்பான தனது அரசியல் வாழ்க்கைக்கு நடுவிலும் வழக்குரைஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணனால் எப்படி "கதை சொல்லி' இலக்கிய காலாண்டிதழை வெளிக்கொணர முடிகிறது என்று அவருடைய நண்பர்களான எங்களுக்கெல்லாம் எப்போதுமே வியப்புண்டு. தரமான கதைகள், கவிதைகள், கட்டுரைகள் என்று "கதை சொல்லி' தனக்கென ஒரு தனி பாணியை வகுத்துக்கொண்டு பயணிப்பதில் மகிழ்ச்சியும் உண்டு.

புதிய படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதில் "கதை சொல்லி' இதழுக்குப் பெரும் பங்குண்டு.  "கதை சொல்லி'  காலாண்டிதழின் 33-ஆவது இதழை கே.எஸ்.இராதாகிருஷ்ணன் தந்தவுடன், அதைப் பிரித்துப் படித்தேன். பக்கங்களைப் புரட்டினேன்.  கண்ணில் பட்டது "ப்ரியா ராஜிவ்' எழுதிய கவிதை. கிராமங்களில் படித்து வளர்ந்து, இன்றும்கூட அந்த மண்வாசனை மாறாமல் இருப்பவர்கள் அனைவரின் ஆதங்கத்தையும் பொட்டில் அடித்தாற்போலப் பிட்டுப் பிட்டு வைத்துப் போகிறது கவிதை வரிகள். படித்து ரசித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எப்படி?

பச்ச பட்டுடுத்தி
விளையும் வயல்வெளியும்
தோப்பும் தொரவுமாக
தோரணையான துரையாக...
சிங்கம் போல இருந்த ஊரு
சீக்காளி ஆனதய்யா...
கரும்பு வயலெல்லாம்
காற்றாலை வயலாச்சு 
தோப்பு தொரவெல்லாம்
தொகுத்து மனையாச்சு
விளைவிச்ச விவசாயி
கூலி வேலைக்கு வந்தாச்சு...
ஆத்தங்கரை ஆலமரம்
அடியோடு சாஞ்சிடுச்சு
ஆறோடிய தடம் மட்டும்
அழுகை நீரோடிய தடமாச்சு
நான் பார்த்த என் ஊரை
நெனப்போடு புதைச்சாச்சு!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com