சுடச்சுட

  
  AAMANNUM_KINARU

  மழை சரியாகப் பொழியாததால் ஏரி, குளம், கிணறு போன்ற நீர் நிலைகளில் மக்களுக்கு வேண்டிய நீர் வசதி குறைவு தற்பொழுது ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கே நீர் பெறுவதில் இன்னல் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்றால், கால்நடைகளின் நிலை?
   கோடைகாலத்தில் நீர் நிலைகள் வற்றிவிட்டால் மாடுகள் நீர் அருந்துவதற்கென்று கிணறுகள், பாண்டிய நாட்டில் அமைத்திருப்பதை கல்வெட்டு எடுத்துக்கூறுகிறது.
   விருதுநகர் வட்டத்தில் "வெள்ளூர்' என்ற ஊரின் கண்மாயின் கரையில் தூண் ஒன்றில் காணப்படும் கல்வெட்டில், இக்கிணறு "ஆ'மன்னும் கிணறு எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது "மாடுகள் நீர் அருந்தும் கிணறு' என்பது பொருள்.
   "பூழியன்' என்று சிறப்புப் பெயர் பெற்ற இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் (கி.பி. 1249) சாந்தன் கொற்றன் என்பவன் இக்கிணற்றினை தோற்றுவித்தான் என அறிகிறோம். இக்கிணற்றுக்குக் கற்கால் (கல்லால் ஆன கால்கள்), படிக்கட்டு, மாடுகளுக்கு வேண்டிய தண்ணீரை இறைக்க ஏற்றம் போன்றவற்றையும் அமைத்துத்தந்ததை கல்வெட்டு குறிப்பிடுகிறது. பாடல் வடிவிலே அக்கல்வெட்டு காணப்படுகிறது. (தகவல்: வெ.வேதாசலம், "கல்வெட்டு இதழ்' எண்.43)
   கோடைகாலத்தில் குளங்களில், ஏரிகளில் தண்ணீர் இல்லாமல் போகும் பொழுது தாகத்துடன் வரும் மாடுகளுக்குக் கிணற்றிலிருந்து தண்ணீரை இறைத்து அளித்த செயல் போற்றத்தக்கது.
   "பூ மன்னு புகட்சகரமோரா யிரத்தொரு நூற்றெழு பத்தொன்றிற்
   பூழியன் சுந்தர பாண்டிய தேவர்குயாண்டு பத்தோடொன்றிற்
   காமன்னும் பொழில் புடைசூழ் கருநிலக்குடிநாட்டு வெள்ளூர் வாழும்
   கற்பஞ்சாத்தன் சேய் கொற்றன் கருநிலக்குடிநாட்டு கிழவன்
   தேமென்னும் மொழிவீரர் திகழும் செங்குடிநாடு சிறந்த மன்னர்
   சீராறு முனைகலக்கிகள் பேரால் சிறந்தூழி வாழ
   ஆமன்னும் கிணறு கற்காலபாடி பக்கல் மீகாலடைவுபடச் செய்வித்து
   ஆவனியின் மேல் நிலை நிற்க வருளினானேய்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai