சுடச்சுட

  
  KURAVANJI-_JOTHI

  திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய "குற்றாலக் குறவஞ்சி' ஓசை நயமும் சந்தமும் நிறைந்த பாடல்களால் ஆனது. திரிகூட நாதர் என்னும் குற்றாலநாதரையும், திருக்குற்றால மலையையும் போற்றவந்த பாடல்களில், கற்பனையும் குற்றால அருவி போல பொங்கிப் பெருகி நிற்கிறது.
   சிவபெருமான் திருவீதி உலா வரும்போது ஏழு வகைப் பருவ மகளிரும் மயங்குகின்றனர். வசந்தவல்லி என்பவள், இறைவன் மீது காதல் கொள்கின்றாள். தோழியை தூது போகச் சொல்கின்றாள்; குறி கேட்க முற்படுகின்றாள்.
   குறிசொல்ல வந்த மலைவாழ் குறத்தியான வஞ்சி என்பவளிடம் "தன் மனத்தைக் கவர்ந்தவர் யார், அவரது ஊர், பெயர் சொல்ல முடியுமா?' என்று வசந்தவல்லி கேட்கின்றாள்.
   அதற்குக் குறவஞ்சி பதில் சொல்ல, அதைக் கேட்டு கோபங் கொள்ளும் வசந்தவல்லியின் வார்த்தைகளும், குறவஞ்சி தரும் விளக்கமும் மலைக்குறப் பெண்ணின் அறிவை, புலமையை சாதுர்யத்தை வெளிப்படுத்துகிறது. பெண்களின் உரையாடல் நயமான சொல் விளையாடலாய் மலர்கிறது.
   "உன்னைப்போல் எனக்கவன் அறிமுகமோ-அம்மே
   ஊரும் பேரும் சொல்வதும் குறிமுகமோ?
   பின்னையுந்தான் உனக்காகச் சொல்லுவேன் அம்மே-அவன்
   பெண்சேர வல்லவன்காண் பெண்கட் கரசே
   வண்மையோ வாய்மதமோ வித்தை மதமோ-என்முன்
   மதியாமற் பெண்சேர வல்லவன் என்றாய்
   கண்மயக்கால் மயக்காதே உண்மை சொல்லடி-பெருங்
   கானமலைக் குறவஞ்சி கள்ளி மயிலி'
   "பெண்ணரசே பெண்ணென்றால் திரியும் ஒக்கும்-ஒரு
   பெண்ணுடனே சேரவென்றாற் கூடவும் ஒக்கும்
   திண்ணமாக வல்லவனும் நாதனும் ஒக்கும்-பேரைத்
   திரிகூட நாதனென்று செப்பலாம் அம்மே!'
   ""பெண்ணரசியே, உன்னைப்போல எனக்கு அவன் அறிமுகமானவனா? தாயே அவனுடைய ஊரையும் பேரையும் குறியினால் சொல்ல முடியுமா? "ஆனாலும் உனக்காகச் சொல்லுகிறேன். அவன் பெண்களோடு சேர்வதிலே மிகவும் வல்லவன்' என்று
   குறவஞ்சி சொல்கிறாள்.
   இதனால் ஆத்திரமடைந்த வசந்தவல்லி, "மயிலைப் போல ஒயிலான மலைக்குறப் பெண்ணே கள்ளி, என்னடி சொன்னாய்? உனது உடல் வலிவு தந்த குறும்பா? வாய்க்கொழுப்பா? அல்லது குறிசொல்லும் வித்தை அறிந்தவள் எனும் செருக்கா? என் முன்னே நின்று கொஞ்சமும் மதிப்பில்லாமல் என் காதலனைப் பெண்களோடு கூடுவதில் வல்லவன் என இகழ்கின்றாயே. உன் கண்களால் மயக்காதே, உண்மையைச் சொல்'' என்று அதிகாரமும் கோபமும் காட்டுகிறாள்.
   அதற்குக் குறவஞ்சி, ""பெண்ணரசியே! பெண்ணென்றால் "திரி' என்ற பொருளும் உண்டு. "சேர' என்பதை "கூட' என்றும் பொருள் கொள்ளலாம். நிச்சயமாக வல்லவன் என்னும் சொல் நாதனையும் குறிக்கும். அதனால், அவன்பெயர் திரி-கூட-நாதன் என்றுதான் நான் சொன்னேன்' என விளக்கம் தருகின்றாள்.
   திருக்குற்றாலக் குறவஞ்சி முக்கண்ணரான இறைவன் மீது மானுடப் பெண் கொண்ட காதலின் பெருமை சொல்லும் பனுவல் என்றாலும், அது முத்தமிழின் பெருமையையும் பாடிக் கொண்டிருக்கிறது.
   -ஜோதிலட்சுமி
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai