இந்த வாரம் கலாரசிகன்

'உரத்த சிந்தனை' எஸ்.வி.ராஜசேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மறைந்த வெ.பாண்டுரங்கன் சேகரித்து வைத்த "தினமணி' தொடர்பான புத்தகங்களை என்னிடம் தர அவர் மனைவி ஆசைப்படுவதாகக் கூறினார்.
இந்த வாரம் கலாரசிகன்

'உரத்த சிந்தனை' எஸ்.வி.ராஜசேகர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, மறைந்த வெ.பாண்டுரங்கன் சேகரித்து வைத்த "தினமணி' தொடர்பான புத்தகங்களை என்னிடம் தர அவர் மனைவி ஆசைப்படுவதாகக் கூறினார்.
 முதுகலை தமிழாசிரியராக 28 ஆண்டுகள் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் திருநின்றவூர் வெ.பாண்டுரங்கன்.
 வானொலி, தொலைக்காட்சிகளில் நூற்றுக்கணக்கான இலக்கிய நிகழ்ச்சிகளில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்களிப்பு வழங்கியவர் பாண்டுரங்கன். பத்திரிகைகளில் இவருடைய படைப்புகள் பரவலாக வெளியாகியுள்ளன. எல்லா தீவிர "தினமணி' வாசகர்களைப்போல இவரும் "தினமணி'யின் இணைப்புகளை எல்லாம் சேமித்து பத்திரப்படுத்தியிருந்தார்.
 அவர் சேகரித்து வைத்திருந்த "தினமணி' தொடர்பான இணைப்புகள் அனைத்தையும் தனது மறைவிற்குப் பிறகு என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருந்ததைக் கேள்விப்பட்டவுடன் நெகிழ்ச்சியில் சமைந்தேன். அவரிடமிருந்து நேரில் பெறும் வாய்ப்பு இல்லாமல் போயிற்றே என்கிற வருத்தம் மேலிடுகிறது.
 சில சம்பவங்களும் நினைவுகளும் நம்மை உலுக்கிவிடுகின்றன. வாழும்போது அவருடன் நெருக்கமாக இல்லாமல் போனாலும், இனிவரும் நாள்களில் பாண்டுரங்கனின் நினைவில்லாமல் எனது வாழ்க்கை நகராது.
 
 மார்ச் மாதம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்குச் சென்றிருந்தபோது, துணைவேந்தர் என்னிடம் தந்த புத்தகம், அவரால் மொழியாக்கம் செய்யப்பட்ட செக் குடியரசைச் சேர்ந்த யரோஸ்லவ் வாச்சக்கின் "சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு'. சங்க இலக்கிய அழகியல் மொழி ஆராய்ச்சியின் புதிய கேள்விகளை எழுப்பும் இந்த நூல், இலக்கிய ஆர்வலர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று என்று இ. அண்ணாமலை தனது முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது, எனது ஆர்வத்தைத் தூண்டியது.
 எந்தவொரு புத்தகத்தை எடுத்தாலும், படித்தேன் முடித்தேன் என்று ஒரே மூச்சில் படித்துவிடுவதுதான் எனது இயல்பு. பாதி படித்து மூடி வைத்து, நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில பக்கங்களைப் படித்து அடையாளம் வைத்துப் படிக்கும் வழக்கம் எனக்கு அறவே கிடையாது. நல்ல புத்தகம் சுழலைப் போல நம்மை உள்ளே இழுத்துக் கொண்டுவிட வேண்டும் என்பது எனது அபிப்பிராயம். அப்படியிருக்கும், இந்தப் புத்தகத்தை நான் படித்து முடிக்க மூன்று மாதங்கள் ஆனதற்குக் காரணம் உண்டு.
 நான் தமிழைப் பாடமாக எடுத்துப் படித்துக் கற்றுத் தேர்ந்தவன் அல்ல. தமிழ் மீது எனக்கு ஆர்வம் இருக்கும் அளவுக்கு ஆழங்காற்பட்ட தேர்ச்சி கிடையாது. அதனால் சங்க இலக்கியம் குறித்த ஆய்வை மேற்கொண்டிருக்கும் இந்தப் புத்தகத்தைப் படித்து, உள்வாங்கிக்கொண்டு நகர்வதற்கு எனக்குக் கால அவகாசம் தேவைப்பட்டது. இப்போதும்கூட முழுமையாகப் புரிந்து கொண்டேன் என்று கூறிவிட முடியாது. இன்னும் இரண்டு மூன்று முறை படித்தால்தான் ஓரளவு புரிந்து கொள்ள முடியும் என்கிற அளவிலான, ஆழமான ஆய்வு நூல் இது.
 சங்கப் பாடல்கள், குறிப்பாக அகப்பாடல்களின் மையம், அவற்றின் உரிப்பொருள், உரிப்பொருளின் குறியீடு, பாடல்களின் கருப்பொருள். குறியீடுகளின் உறைவிடம் இயற்கையில் உள்ள பொருள்கள். அவற்றில் மலர்களுக்குச் சிறப்பிடம் உண்டு. பொருளதிகாரத்தின் பின்புலத்தில், பாடல்களின் மொழிப் பயன்பாட்டைத் தரவுகளின் அடிப்படையில் மலர் சொற்களின் வரவு எண்ணிக்கையின் அடிப்படையில் ஆராய்கிறார்.
 "சங்க இலக்கியத்தில் இயற்கைக் குறியீடு', அயல்நாட்டுத் தமிழறிஞர் ஒருவரின் புறப்பார்வையில், சங்க இலக்கியத்தின் அடிப்படையான வாய்பாட்டு அமைப்பு பற்றிய ஆய்வை முன்னெடுக்கிறது. வாச்சக் கூறுவதுபோல, சங்க இலக்கிய அழகியல் மொழி ஆராய்ச்சியில் பல கேள்விகளுக்கு விடை காணவும் முற்படுகிறது.
 சங்கப் பாடல்களில் பயின்றுவரும் முதன்மையான ஐந்துவகைத் தாவரங்களை எடுத்துக்கொண்டு, ஒன்றுக்கொன்று தொடர்பும் அவற்றின் அடிப்படையில் ஒத்திசைவும் உள்ள ஆய்வுப் பொருள்கள் குறித்து இந்த நூல் பதிவு செய்கிறது. சங்க இலக்கிய மரபில் எந்தெந்தக் கூறுகள் சம்ஸ்கிருத, பிராகிருத செவ்வியல் காவியக் கூறுகளுடன் ஒப்புநோக்கத்தக்கன என்பதன் அடிப்படையில் ஆய்வை எப்படித் தொடரலாம் என்பதற்கான முயற்சிக்கு இந்த நூல் வழிகாட்டுகிறது. துணைவேந்தர் முனைவர் கோ.பாலசுப்பிரமணியன் அரிய தொரு முயற்சியில் இறங்கி, நமக்குப் புரியும் விதத்தில் மிகப்பெரிய தமிழாய்வைத் தந்திருக்கிறார்.
 யரோஸ்லவ் வாச்சக் செய்திருப்பதுபோன்ற ஆழங்காற்பட்ட சங்க இலக்கிய ஆய்வைச் செய்திருக்கும் தமிழ்நாட்டு ஆய்வாளர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் போலிருக்கிறதே...
 யரோஸ்லவ் வாச்சக் போன்ற அயல்நாட்டுத் தமிழறிஞர்களைத் தமிழகத்துக்கு வரவழைத்து மிகப்பெரிய இலக்கிய விழா ஒன்றை நடத்த வேண்டும் என்கிற ஆசை மேலிடுகிறது. அவர்களது பங்களிப்புகளை நாம் வேறு எப்படிப் பாராட்டி நன்றி கூறுவது?
 
 தண்ணீருக்கு நிறம் கிடையாது என்று தெரியும். ஆனாலும்கூட, சில குளங்களில் பாசி படர்ந்திருப்பதாலோ என்னவோ, தண்ணீர் பச்சை நிறத்தில் இருக்கும். வானத்தின் நீலநிற பிம்பங்களால்தான் கடல்நீர் நீலமாகக் காட்சி அளிக்கிறது என்பது தெரியும். ஆனாலும்கூட, கண்ணுக்கெட்டும் தூரத்திற்கு அப்பால் விரிந்து பரந்து கிடக்கும் நீலநிற சமுத்திரத்தைப் பார்க்கும் போதெல்லாம் நான் வியப்பில் சமைந்து விடுவதுண்டு.
 இந்துமதி ஒரு கல்லூரி மாணவி. இவரது "மனதோடு மழைச்சாரல்' என்கிற கவிதை நூல் குறித்து ஓவியர் பாரதிவாணர் சிவாவின் "புதுவை பாரதி' சிற்றிதழில் விமர்சனம் வந்திருக்கிறது. அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் கவிதை இது.
 இவ்வளவு பெரிய சமுத்திரத்தில் சொட்டு நீலத்தை எப்படி கலந்திருப்பார்கள்?
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com