பெண்ணின் பெருமை

மன்னவன் வரும்வரை ஆற்றியிருத்தலே மகளிர் கடன் என வலியுறுத்தினாள் தோழி. தோழிக்குத் தலைவி, தான் ஆற்றியிருப்பதாகக் கூறும் அழகு தமிழ்ப் பாடல். புலவர் அம்மூவனார் பாலைத் திணைப் பாடலாக நற்றிணையிலுள்ள
பெண்ணின் பெருமை

மன்னவன் வரும்வரை ஆற்றியிருத்தலே மகளிர் கடன் என வலியுறுத்தினாள் தோழி. தோழிக்குத் தலைவி, தான் ஆற்றியிருப்பதாகக் கூறும் அழகு தமிழ்ப் பாடல். புலவர் அம்மூவனார் பாலைத் திணைப் பாடலாக நற்றிணையிலுள்ள நலம் விளைக்கும் நயமிகுந்த 397-ஆவது பாடல் இது!

"தோளும் அழியும் நாளும் சென்றென
நீளிடை அத்தம் நோக்கி வாளற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என்நீத்து
அறிவும் மயங்கி, பிறிது ஆகின்றே;
நோயும் பெருகும் மாலையும் வந்தன்று
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்; அஞ்சுவல் சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்
மறக்குவேன் கொல்என் காதலன் எனவே'

""நம் தலைவர் வருவதாகக் கூறிச்சென்ற நாளும் நகர்ந்து போனது. அதை எண்ணி எண்ணி என் பொன்னிறத் தோள்களும் பொலிவிழந்தன. அவர் வருகை தரும் காட்டு வழியைப் பார்த்து என் பார்வை மங்கியது; ஒண்மலர்க் கண்கள் ஒளியிழந்தன; என்னறிவும் என் வசம் இல்லாமல் என்னை விட்டு எங்கெங்கோ போகிறது. பிரிந்தாரின் நோயைப் பெரிதாக்கி மருட்டுகின்ற மாலைப்பொழுதும் வந்து வந்து வாட்டுகிறது. நானிங்கு என்ன ஆவேனோ? எவ்வாறு ஆவேனோ?

நான் சாதலைச் சந்திப்பதற்கும் அஞ்சேன். ஆனால், ஒன்றிற்கு மட்டும் உள்ளம் மிகவும் அஞ்சுகிறது! இறக்க நேர்ந்து மறுபிறப்பு ஏற்பட்டால், என் ஆருயிர்க் காதலனை அப்பிறப்பில் மறந்து விடுவேனோ என எண்ணும்போது இதயம் 
அளவின்றி அஞ்சுகின்றது'' என்கிறாள் தலைவி. 

கரைந்து போகாமலும், கலைந்து போகாமலும் கடைசி வரையில் நிலைத்திருக்கின்ற காதலை - பண்பாட்டு நெறியினை வலியுறுத்தி புலவர் அம்மூவனார் ஐந்து வரிகளில் ஒரு பாடல் அமைந்துள்ளார். குறுந்தொகையில் 49-ஆவது பாடல் இது. 

"அணிற்பல் அன்ன கொங்குமுதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீயா கியரெம் கணவனை
யானா கியர்நின் நெஞ்சுநேர் பவனே'

இது தலைவி, தலைமகனிடம் அளவளாவியது. கூரிய வெண்மையானது அணிலின் பல்- அதனைப் போன்றது முண்டகம் என்னும் கழிமுள்ளிக் செடியின் முள். அது கானல் என்னும் கடற்சோலையைக் கமழ வைப்பது. அதனை மிகுதியாகவும் நீலமணி போன்ற நிறத்தைக் கொண்ட நீரினையும் கொண்ட கடற்கரைத் தலைவனே! இந்தப் பிறவி நீங்கி வேறு எத்தனை பிறவிகள் எடுத்தாலும் அத்தனை பிறவிகளிலும் எனக்கு நீயாகவும் உனக்கு நானாகவும் ஆக வேண்டும்.

கணவன் - மனைவி உறவுதான் காதலுறவு. அவ்வுறவு உயர்திணைக்கே உள்ள ஒப்பற்ற உறவு. காமம் என்பது அந்தக் காதலுறவில் கடுகளவுதான். 

பிரிவிடை ஆற்றாத தலைவியின் வாயிலாக அம்மூவனார் "பெண்ணின் பெருமை'யை மண்ணின் மணத்தோடு வழங்குவதைப் பார்த்தோம். கவியரசர் கண்ணதாசன் பிரிவிடைத் தவித்த தலைவி, தலைவன் வருகையில் காணும் பெருமகிழ்வைக் கூறும் "பாலும் பழமும்' என்னும் திரைப்படப் பாடலான "பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி' யில் மங்கையரின் மாண்பைக் காணலாம். இவ்வாறான பெண்கள் வாழ்கின்ற பூமியில் இழிவுகள் பகலவன் முன் பனித்துளிகளே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com