சுடச்சுட

  
  tm1

  காய்கறித் தோட்டம் அமைப்பது என்பது சிறு வயது முதலே எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு. சென்னைக்கு வந்தபிறகு மாடித் தோட்டம் அமைப்பதில் எனக்கு வழிகாட்டியாக அமைந்தவர் இயற்கை விஞ்ஞானி ஆர்.எஸ். நாராயணன். ஒருமுறை திண்டுக்கல் போனபோது அவரை நேரில் சந்திக்கச் சென்றிருந்தேன். அவர் தனது வீட்டு மொட்டை மாடியில் அமைத்திருந்த தோட்டத்தைப் பார்த்து, பல புதிய உத்திகளைக் கற்றுக்கொண்டேன். அவரளவுக்கு என்னால் வெற்றிகரமாக மாடித் தோட்டம் அமைக்க முடியாவிட்டாலும், ஓரளவுக்குச் சில காய்கறிகளை மாடித் தோட்டத்தில் பயிரிட்டுப் பலனடைந்திருக்கிறேன் என்பதில் எனக்குச் சற்று ஆறுதல்.
   மாடித் தோட்டம் குறித்து ஆர்.எஸ்.நாராயணன் எழுதியிருக்கும் புத்தகம் "மாடித் தோட்டம் - 77 + வயதினிலே'. கடந்த 40 ஆண்டுகளில் 40-க்கும் மேற்பட்ட நூல்களையும், "தினமணி' நாளிதழில் 1000-க்கும் அதிகமான கட்டுரைகளையும் எழுதியிருக்கும் வேளாண் விஞ்ஞானி ஆர்.எஸ்.நாராயணனின் இந்தப் புத்தகம் மாடித் தோட்டம் அமைத்திருப்பவர்களுக்கும், அமைக்க விரும்புபவர்களுக்கும் ஒரு மிகச் சிறந்த கையேடு.
   யார் வேண்டுமானாலும் உற்சாக மிகுதியால் மாடித் தோட்டம் அமைத்துவிடலாம். ஆனால், அந்தத் தோட்டத்தை முறையாகப் பராமரிப்பதும், அதில் பல்வேறு காய், கனிச் செடிகளைப் பயிரிட்டு அவை பூத்துக் குலுங்கி, காய்த்துப் பலனளிப்பதை அனுபவிப்பதும் அவ்வளவு எளிதல்ல. முதலில் விதைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, பயிரிடுவது, பைகளில் எப்படி மண் நிரப்புவது, எப்படிப் பசுமைக் கூரை அமைப்பது என்று பல அரிச்சுவடிப் பாடங்களைக் கற்றுக்கொண்டால் மட்டுமே வெற்றிகரமாக மாடித் தோட்டம் அமைக்க முடியும்.
   கடந்த 10 ஆண்டுகளாக மாடித் தோட்டத்துடன் உறவாடிக் கொண்டிருக்கும் எனக்கேகூட இன்னும் இதுகுறித்த முழுமையான புரிதலோ, வெற்றிகரமான நடைமுறை அனுபவமோ இல்லை எனும்போது, புதிதாக மாடித் தோட்டம் அமைக்க விரும்புபவர்களின் நிலைமை குறித்து நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
   மாடித் தோட்டம் அமைப்பவர்களுக்கு ஆர்.எஸ்.நாராயணனைவிடச் சிறந்த வழிகாட்டி வேறு யாரும் இருக்க முடியாது. அவரது "மாடியிலும் தோட்டமிடலாம்' என்கிற 60 பக்கக் கையேட்டின் தாக்கத்தால்தான் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான நகர விவசாயிகள் தங்கள் வீட்டு மொட்டை மாடியில் தோட்டம் போடத் தொடங்கினார்கள். "மாடியிலும் தோட்டமிடலாம்' ஆரம்பக் கல்வி என்றால், "மாடித் தோட்டம்- 77+ வயதினிலே' மொட்டை மாடியில் தோட்டம் அமைப்பவர்களுக்கான உயர்நிலைக் கல்வி. நகர்ப்புற விவசாயிகளுக்கு இதைவிடச் சிறந்த கையேடு இருக்க முடியாது.
   
   
   ஆசிரியர் கல்கியின் நகைச்சுவை உணர்வு குறித்தும், சுவாரசியமான எழுத்து நடை குறித்தும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அவர் வாழ்ந்தது 55 ஆண்டுகள்தான் என்றாலும், நூற்றாண்டு காலம் வாழ்ந்தவர்கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அவர் எழுதிக் குவித்திருக்கிறார். பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம் போன்ற சிரஞ்சீவித்தனம் பெற்ற புதினங்கள் எந்த அளவுக்கு சுவாரசியமோ அதற்குச் சற்றும் குறைவில்லாதவை அவருடைய கட்டுரைகளும், விமர்சனங்களும். ராகி, யமன், குகன், வழிப்போக்கன், கர்நாடகம் என்று ஆசிரியர் கல்கி தனக்குச் சூட்டிக்கொண்ட புனைப்பெயர்கள் ஏராளம்.
   ஆசிரியர் கல்கி ஆனந்த விகடன் இதழில் பணியாற்றியபோது, "ஆசிரியர்' என்று அவரது பெயர் இடம்பெறாவிட்டாலும், "மெய்யாசிரியர்' என்று வாசகர்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். அப்போது அவர் ஆனந்த விகடனில் எழுதிய பல கட்டுரைகள் நூல் வடிவம் பெறாமல் இருந்தன. அவற்றையெல்லாம் தேடிப் பிடித்து, "கல்கி' ராஜேந்திரனின் வழிகாட்டுதலுடன், "யுகப்புரட்சி' என்கிற பெயரில் தொகுத்து வழங்கியிருக்கிறார் சுப்ர.பாலன். கல்கியின் 20 கட்டுரைகள் அடங்கிய "யுகப்புரட்சி' என்கிற புத்தகம் அவரது இன்னொரு பரிமாணத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது. கோபுலு, மாலி ஆகியோரின் ஓவியங்களுடன் தொகுக்கப்பட்டிருக்கும் "யுகப்புரட்சி' கட்டுரைத் தொகுப்பு, ஒரு வித்தியாசமான முயற்சி.
   "யுகப்புரட்சி' தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் "பூலோக பிரம்மாக்கள்', "சட்டசபையில் கண்டதும் கேட்டதும்' என்கிற கட்டுரைகளில் இருக்கும் கிண்டலும், கேலியும், நையாண்டியும் ஆசிரியர் கல்கியின் தனி முத்திரைகள்.
   ஒரு நாள் சட்டப்பேரவைக்குச் செல்கிறார் கல்கி. அப்போது நிதியமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரியார் குறித்த ஆசிரியர் கல்கியின் பதிவு இற்றை நாள் அரசியல்வாதிகள் சிலருக்கும்கூடப் பொருந்தும் போல் இருக்கிறது. பொருத்திப் பார்த்தேன், சிரிப்பு வந்துவிட்டது.
   "ஜனநாயக அரசியல் வாழ்க்கையில் ஸ்ரீமான் டி.டி. வெற்றி அடைவது துர்லபம். அவ்வளவு திறமையையும் உபயோகமில்லாமல் பண்ணும் ஒரு குணம் அவரிடம் இருக்கிறது. ஜனநாயக ஆட்சி நடக்கும் நாட்டில், அரசியல்வாதி ஒருவர் கெட்டிக்காரராய் இருக்கலாம். அவர் கெட்டிக்காரராக இருப்பதை மகாஜனங்கள் மன்னித்து விடுவார்கள். ஆனால், "நான் கெட்டிக்காரன்' என்று அவர் சொல்லிக்கொள்ளக் கூடாது. அதை மகாஜனங்கள் மன்னிக்க மாட்டார்கள். ஸ்ரீமான் டி.டி. அடிக்கடி, "நான் தெரிந்தவன்'; "கெட்டிக்காரன்' எனக் குறிப்பாகவும், ஸ்பஷ்டமாகவும் சொல்லிக் கொள்கிறார். அதோடு மட்டுமா? மற்றவர்களுக்கு ஒன்றும் தெரியாது என்றும் சொல்கிறார்'' - இதுதான் அந்தக் குறிப்பு.
   சுதந்திரத்துக்கு முந்தைய தமிழக அரசியல் குறித்த புரிதலை ஏற்படுத்தும் "யுகப்புரட்சி' கட்டுரைத் தொகுப்பு வித்தியாசமான பாராட்டுதலுக்குரிய முயற்சி.
   
   
   இந்தக் கடிதம் இத்தனை நாளும் ஏன், எப்படி என் பார்வையில் படாமல் எனது மேஜையில் குவிந்து கிடக்கும் பல்வேறு ஆவணங்களுக்கு இடையில் ஒளிந்து கொண்டிருந்தது என்பது எனக்குப் புலப்படாத ஆச்சரியம்! இரண்டாண்டுகளுக்கு முன்பு கோவையில் நடிகர் சிவகுமாரின் "சித்திரச்சோலை' நிகழ்ச்சியைத் தொடர்ந்து, அதற்குப் பாராட்டுத் தெரிவித்துக் கடிதம் எழுதியிருக்கிறார் கோவையைச் சேர்ந்த "தினமணி' வாசகர் "தாதன்குளம்' எஸ். டேனியல் ஜூலியட். அவர் கடிதம் எழுதிய நாள்17.1.2017. அந்தக் கடிதத்தை நான் படித்த நாள் 14.3.2019.
   கடிதத்துடன், ஒரு சிறிய கவிதையையும் இணைத்திருந்தார். அந்தக் கவிதை இந்த வாரத்தில் இணைய வேண்டும் என்பது இறைச்சித்தம் போலும். கவிதை இதுதான்-
   உரமிடாமல் வளர்ந்தது
   உரமிட வாங்கிய
   பயிர்க் கடன்!
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai