சுடச்சுட

  
  NAL_VEDAM

  நான்கு வேதங்கள் என்பது வடமொழி மற்றும் ஆரியர்களுக்கு உரியது என்றும், தமிழர்களுக்கும், தமிழுக்கும் தொடர்பற்றது என்றும் கருத்து உள்ளது. நமது இலக்கியம் மற்றும் புராணங்களை உற்று நோக்கும்பொழுது அதில் காணக்கிடைக்கும் தகவல்கள் வேறுவிதமான கருத்தை முன் வைக்கின்றன.
   தமிழகத்தின் வரலாறு, பண்பாடு இவற்றை எடுத்தியம்பும் சங்க நூல்களில் பதிற்றுப்பத்தும், புறநானூறும் காட்டும் தகவல்கள் ஒரு தெளிவான பார்வையை ஏற்படுத்துகின்றன. பதிற்றுப்பத்து இலக்கியம் தமிழகத்தின் எல்லைகள் பற்றிக்கூறும்பொழுது, "வடதிசை எல்லாம் இமயம் ஆக' என்கிறது. அதாவது, வடக்கு எல்லை இமயம் என்று கூறுகிறது. இப்படிக் கூறும் அதே நூல் குமரிக்கண்டம் பற்றிப் பேசும்பொழுதும் அதன் வடக்கு எல்லை இமயம் (ஆரியர் துவன்றியபேரிசை இமயம் / தென்னம்குமரியோடு ஆயிடை) என்றே குறிப்பிடுகிறது.
   இப்படி இமயத்தைத் தன்னுள் கொண்டதாகவே சங்க இலக்கியம் தமிழகத்தைக் காட்டுகிறது. இமயம் நமக்கானதாய் இருந்தபொழுது வேதம் மட்டும் வேறுபட்டது என்று எப்படி ஒதுக்க முடியும்? தொல்காப்பியத்தின் சிறப்புப் பாயிரத்தின் முதல் செய்யுளில், "அறங்கரை நாவின் நான்மறை முற்றிய / அதங்கோட்டு ஆசாற்கு அரில்தபத் தெரிந்து' என்று நான்மறை பற்றிய செய்தி உள்ளது.
   அதாவது, நான்கு வேதங்களை முற்றிலும் அறிந்த அறம் பேசும் அதங்கோடு என்னும் ஊரில் இருக்கும் ஆசிரியரிடம் முதலில் தொல்காப்பியத்தைப் படித்துக்காட்டிய பின்னரே அதனை அரங்கேற்றம் செய்ததாகக் கூறுகிறது தொல்காப்பியம்.
   பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பாரதப் போரில் வீரர்களுக்குச் சோறிட்டான் என்று புறநானூறு (புறம்-2 ) கூறுகிறது.
   தமிழ் இலக்கியத்தின் வேர்கள், நம் நிலப்பரப்பு, வரலாற்றின் காலம் இவற்றின் ஆழ அகலங்களைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில், பத்ம புராணம், மச்சபுராணம் போன்ற புராணங்கள் நமது பழந்தமிழ் ஊர்களைக் களமாகக்கொண்டு அமைந்துள்ளன. திருப்பரங்குன்றம், மதுரை முதலிய ஊர்கள் பற்றி அவை பேசுகின்றன. இவற்றை எல்லாம் மனத்தில் கொண்டு பார்த்தால் வேதம் பற்றிய கருத்திலும் சற்று தெளிவு ஏற்படும்.
   புறநானூற்றின் பல பாடல்களில் வேதம் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. இறைவணக்கச் செய்யுளான முதல் பாடலிலேயே சிவபெருமானைப் பற்றிப் பாடுகிறார் பெருந்தேவனார். சிவனை வர்ணிக்கும் புலவர், வேதம் உணர்ந்த அந்தணர்கள் சிவனைத் தொழுது ஏத்துவார்கள் (கறைமிடறுஅணியலும்அணிந்தன்று; அக்கறை / மறைநவில்அந்தணர் நுவலவும்படுமே) என்கின்றார்.
   பெருஞ்சோற்று உதியன் சேரலாதனை வாழ்த்தும் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர், "பால் புளித்தாலும், பகல் இருளானாலும் நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் நீ வாழ்வாயாக' என்கிறார்.
   "பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
   நாஅல் வேத நெறிதிரியினும்
   திரியாச் சுற்றமொடு முழுது சேண்விளங்கி' (புறம்-2)
   இப்பாடலில் நால்வேதம் பற்றி மட்டும் புலவர் குறிப்புத் தரவில்லை. அந்தணர் வளர்க்கும் வேள்வித் தீ பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
   "நடுக்கின்றி நிலியரோ அத்தை; அடுக்கத்துச்
   சிறுதலை நவ்விப்பெருங்கண் மாப்பிணை,
   அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
   முத்தீ விளக்கிற்றுஞ்சும் பொற்கோட்டு
   இமயமும்,பொதியமும் போன்றே' (புறம்-2 )
   "இமயம், பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் நவ்வி-மான்கள் உறங்குவது போல அச்சமின்றி உன் மக்கள்-சுற்றம் நிலை கொள்வதாகுக' என்கிறார். இப்பாடல் வேதம் மற்றும் ஆரியக் கருத்துகள் பற்றிய தெளிவைத் தருகிறது. இதேபோல,
   "... ... ... நால் வேதத்து
   அருஞ் சீர்த்திப்பெருங் கண்ணுறை
   நெய்ம் மலி ஆவுதிபொங்கப், பன்மாண்
   வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி' (புறம் -15)
   "முழவினை முழக்கிக்கொண்டு உன்னைப் பாடும் பாடினியின் வஞ்சிப் பாடலை விரும்பும் வலிமை மிக்கவனே! நால்வேத சிறப்புமிக்க, குழியில் நெய் ஊற்றி, ஆவி பொங்க வேள்வி செய்து, தூண் நட்டுச் சிறப்பெய்தியவனே' எனக் கபிலர், சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதனை வாழ்த்துகின்றார். இங்கும் வேதம் மற்றும் வேள்வி பற்றிய குறிப்பைக் காண்கிறோம்.
   "பணியியர் அத்தைநின் குடையே; முனிவர்
   முக்கண் செல்வர் நகர்வலஞ் செயற்கே
   இறைஞ்சுக, பெருமநின் சென்னி; சிறந்த
   நான்மறை முனிவர் ஏந்துகை எதிரே' (புறம்-5)
   அதாவது, "நகர்வலம் வரும் முக்கண்ணரான சிவபெருமான் முன் மட்டுமே உன் குடை தாழ்வு கொள்ளட்டும், நான்மறைகளை ஓதும் முனிவர்கள் முன் மட்டுமே உன் சிரம் தாழ்த்துவாயாக!' என்று பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி மன்னனை வாழ்த்தும்பொழுது பாடுகிறார் புலவர் காரிகிழார். இவை தவிர, நால்வேதங்கள் பற்றிய குறிப்புகள் பல சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.
   மொழியை மேன்மை செய்த நம் பெரியோர் ஒரே நிலப்பரப்பில் விளங்கிய இரு வேறுபட்ட தனிச் சிறப்பு வாய்ந்த மொழிகளை அவற்றின் செறிவுமிக்க கருத்துகளை ஒன்றுக்கொன்று பெருமை சேர்க்கும் வகையில் பயன்படுத்தினார்களேயன்றி, எவ்விதக் காழ்ப்புணர்ச்சியும் அவர்களுக்கு இருக்கவில்லை. புறநானூறு நம் பண்பாடு, நாகரிகம், வாழ்வியல் முறை சொல்லும் நூல் எனில், அது சொல்லும் வேதம் பற்றிய செய்திகளும் நம்முடையவைதானே!
   -கோதை ஜோதிலட்சுமி
   
   
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai