சுடச்சுட

  
  tm2

  வீரத்தின் விளைநிலமாகத் தமிழர்களின் கலாசாரத்தைப் பேணிக் காத்து இயற்கை அன்னையின் அருளுடன் அனைத்து கலைகளுக்கும் உயிர் தந்து அரசாட்சி செய்தவர்கள் தஞ்சை மண்ணின் மைந்தர்களான சோழர்கள். அவர்களின் வம்சாவளியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சுடர்மிகு சூரியனாக வந்துதித்துத் தனது அரசாட்சியில் வாழும் மக்களுக்கு வளம் பல நல்கியவன் முதலாம் இராஜாதிராஜ சோழன் ஆவான்.
   இவன் 1048- ஆம் ஆண்டு மேலைச் சாளுக்கியரோடு மூன்று முறை போர் தொடுத்து அதன் நிறைவில் வெற்றியும் பெற்றான். அதன் பின்னர், அவர்களின் தலைநகரான கல்யாணபுரத்தைக் கைப்பற்றி, அங்கிருந்த கலைப் பொக்கிஷமான இரு துவார பாலகர் சிலை படிமங்களை எடுத்து வந்தான்.இவ்வெற்றிச் சின்னங்களான இருதுவார பாலகக் கற்றளிகளை, கும்பகோணத்துக்கு அருகிலுள்ள தாராசுரம் ஐராதீஸ்வரர் திருக்கோயில் மூலவர் கர்ப்பக்கிரகத்தின் வாயிலில் வைத்து அழகுபடுத்தி மகிழ்ந்தான்.
   மாமன்னன் இராஜாதிராஜனின் புகழ் பாடும் இத்துவார பாலகர் படிமம் ஒன்றின் பீடத்தில் "ஸ்வஸ்திஸ்ரீ உடையார் ஸ்ரீ விஜய ராஜேந்திர தேவர் கல்யாணபுரம் எறிந்து கொடுவந்த துவாரபாலகர்' என்று செதுக்கப்பட்டுள்ளது. இந்தப் படிமம் மேலைச் சாளுக்கிய நாட்டு சிற்பியின் கலைத்திறனையும், அவன் தேர்ந்தெடுத்த கல்லின் தன்மையையும் இணைந்து மிளிருகின்றது.
   அஸ்திர சூலத்துடன் கூடிய யாளி முகத்துடன் அமைந்துள்ள கிரீடம் அணிந்து, மிரட்டும் விரிந்த விழிகளுடன், நான்கு கரங்களுடன் சுமார் ஏழு அடி உயரமுள்ள இக்கற்சிலை துவாரபாலகர் வடிவங்கள் செப்புச் சிலைகளில் உள்ளதுபோல் வழவழப்புடனும், நுணுக்கமான கலையுணர்வை வெளிப்படுத்தும் வேலைப்பாடுகளுடன் அற்புதமாக அமைந்துள்ளது.
   - குடந்தை ப.சரவணன்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai