சுடச்சுட

  
  THOZHI-THALAIVAN

  மனித வாழ்வில் எல்லாப் பண்பாட்டுக் கூறுகளும் எல்லாக் காலங்களிலும் உண்டு. அவை அவ்வக்கால நிலையில் குறிப்பாகவும் வெளிப்படையாகவும் ஆன்றோர்தம் எழுத்துகளால் உணரப்படும். அந்த வகையில் திருமணத்திற்கான பொருத்தம் பற்றித் தொல்காப்பியர் கூறும் பத்துப் பொருத்தத்தில் தற்காலத்தில் சிலரால் எதிர்பார்க்கப்படும் மருத்துவ ஆய்வு கண்டறிதலைப் பற்றிய குறிப்பு தொல்காப்பியத்தில் உணருமாறுள்ளதைக் காண்போம்.
   ஆண்-பெண் இருவருக்கும் நற்குடிப்பிறப்பு, குடிக்கேற்ற நல்லொழுக்கம், ஆளுமைப் பண்பு, குறிப்பிட்ட ஒத்த வயது, தோற்ற ஒப்புமை, காம நுகர்வுக்கானஅன்பு, அடக்க உணர்வு, அருட்குணம், ஒத்த அறிவுநிலை, செல்வ நிலை ஆகிய பத்தும் ஒத்திருத்தல் வேண்டும் என்கிறார் (மெய்ப்பாட்டியல் 25) தொல்காப்பியர்.
   இந்தப் பத்தின் அடிப்படைச் செயலை ஓரளவு இன்றைய ஜோதிடக்கலை வல்லுநர்கள் பொருள் மாறுபாடில்லாமல் "பத்துப் பொருத்தம்' என்றே கூறுகின்றனர்.
   "பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
   உருவு நிறுத்த காமவாயில்
   நிறையே அருளே உணர்வோடு திருஎன
   முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே!'
   இவற்றுள் "நிறுத்த காமவாயில்' என்ற ஒன்றுதான் திருமணத்திற்கு முன் இரு பாலரிடமும் காணப்பட வேண்டிய மருத்துவ ஆய்வு பற்றியதோ என உணர வேண்டியுள்ளது. "நிறுத்த காமவாயில்' என்பதற்குத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர், ""நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கான வாயிலாய் ஒருவர் மாட்டு ஒருவருக்கு நிகழும் அன்பு'' என்றார்.
   இங்ஙனம் பொருள் குறிக்க, தொல்காப்பியரின் தொடரே சான்றாக உள்ளது. அவர் "நிறுத்த காமம்' என்பதாக மட்டும் கூறாமல், "காமவாயில்' என நீட்டித்துக் கூறியதில்தான் இது சிந்தனைக்குரியதாகிறது. "வாயில்' என்பது காமத்தைக் கண்டறிதற்கான காரணம் என்று பொருள்படும். ஒத்த அன்புக்கான காரணம் பலவற்றுள் அதாவது தோற்றம், கல்வி போன்ற நிலை, வேலையால் பெறும் ஊதியம் போன்றவை உணரப்படுதலுள் ஒழுக்கம் தவறாதிருந்த உடற்கூறும், தீரா நோய்க் குறிப்புமாகிய நிலைகளை அறிதலும் அவற்றுள் அடங்கும்.
   தீரா நோய் பற்றிப் பின்னர் தெரியவரின் அன்பு வாழ்க்கை வன்பாகிவிடும். அதனினும் ஒழுக்கம் தவறியதான நிலையை உடற்கூறு காட்டிக் கொடுத்துவிடும் என்பதால்தான் மேற்படியான காம நிறுத்த வாயில் என்பதற்கு உரை கண்ட பேராசிரியர் என்னும் உரையாசிரியர், ""பெண்மை வடிவம் ஆண்மை வடிவம் பிறழ்ச்சியின்றியமைந்தவழி அவற்றுமேல் நிகழும் இன்பத்திற்கு வாயிலாகிய அன்பு'' என்றார். மேலும் அவர் தொடர்ந்து கூறுகையில், "இயற்கை அன்பு, முதலில் உடற்கூற்றின் வடிவு பற்றியல்லது தோன்றா'' என்றும் கூறியுள்ளதால், திருமணத்திற்கு முன்னான ஒழுக்கக் குறையிருப்பின் அதனை உடல் காட்டிக் கொடுத்துவிடும் என்பதால், உடற்கான மருத்துவ ஆய்வுக்குறிப்பு உணர வேண்டியதாகிறது.
   ஏனெனில், இக்கருத்து இன்றைய பாலியல் வன்கொடுமை வகையிலும், விளையாட்டாக ஏமாற்ற ஏமாறும் நிலையிலும், ஒழுக்கச் சிதைவுகள் மூடி மறைக்கும் விதமாய் மெல்ல மெல்ல வளர்வதால் இச்சோதனைக்கான ஆய்வு எதிர்பார்ப்புக்குரியதாகிறது. இந்தக் கருத்தாடலின் முழுமையைத் தொல்காப்பியத்திற்குத் தற்காலத்தில் உரைகண்ட தமிழண்ணல் நிறுத்த காமவாயில் என்பதற்குத் "தொல்லாசான் சிந்தித்துச் சொன்ன அரிய கருத்து' என்றதோடு "உடலில் அமைந்த நுகர்வுக்கான கூறுகள்' என்றும் உரை எழுதியுள்ளார்.
   தொல்காப்பியரையே தொல்லாசான் என்ற தமிழண்ணல், "சிந்தித்துச் சொன்ன கருத்து என்னாமல் அரிய கருத்து என்றதால்' எதிர்காலச் சிந்தனையுடன் திருமணத்திற்கு முன்னராக அறிய வேண்டிய மருத்துவத்தை உட்படுத்தித்தான் தொல்காப்பியர் கூறினாரோ எனச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஏனெனில், இன்றையச் சூழலில் பொறுப்பற்று புறம்புறம் திரியும் நிலை பெருகி வளர்வதால், நிறுத்த காமவாயிலின் தூய்மை கண்டறிய வேண்டிய நிலை, துளிர்ப்புக்குள்ளாகிவிட்டது எனலாம்.
   தொல்காப்பியர் கூறிய பொருத்தங்கள் யாவும் கண்டறியப்பட வேண்டியதாயினும், இந்தக் காமம் நிறுத்த வாயில் என்பதே நேர் சீராய் மனமொத்த, ஐயப்பாடற்ற வாழ்விற்கான அடிப்படை என்பதால், உரையாளர்கள் அனைவரும் ஒருவர் மாட்டு ஒருவருக்கு நிகழும் அன்பு என்பதை வேறு வேறு வகையில் உறுதிப்படுத்தினர்.
   ஆக, காம நிறுத்த வாயிலாக நேர் சீரான அன்பு, ஒத்ததாக அமையவில்லை எனில், மனவிலக்கு வழி மணவிலக்கிற்கு இடம் கொடுத்ததாகிவிடும். அதனால், இல்லறம் நல்லறமாகாததனினும் அல்லறம் ஆகிவிடும் என்பதில் ஐயமில்லை!
   - தமிழாகரர் தெ. முருகசாமி
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai