இந்த வார கலாரசிகன்

எட்டாம் வகுப்பு ஆசிரியரை 57 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஆசி பெறும் வாய்ப்பு கிடைத்த மாணவனின்  மகிழ்ச்சியும், உற்சாகமும் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

எட்டாம் வகுப்பு ஆசிரியரை 57 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து ஆசி பெறும் வாய்ப்பு கிடைத்த மாணவனின்  மகிழ்ச்சியும், உற்சாகமும் எப்படி இருக்கும் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள். விக்கிரமசிங்கபுரம் தூய மேரி உயர்நிலைப்பள்ளியில் எனது எட்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த சடகோபன் ஐயாவை கடந்த மூன்று ஆண்டுகள் தேடலுக்குப் பிறகு, நேற்று சந்திக்கும் பெரும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.
திருவரங்கத்தில் அரங்கனின் தரிசனம் முடித்துக்கொண்டு வழக்கம்போல பிரேமா நந்தகுமாரை சந்தித்தேன். எனது எட்டாம் வகுப்பு ஆசிரியர் தன் மூத்த மகனுடன் திருவரங்கத்தில்  வசித்து வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டது முதல், ஒவ்வொரு முறை திருச்சிக்குச் செல்லும்போதும் அவர் இருக்கும் இடம் குறித்த தேடலை மேற்கொள்வது வழக்கமாகிவிட்டது. எங்களது திருவரங்க நிருபர் ராஜசேகரன் சலிக்காமல் சல்லடை போட்டு சடகோபன் ஐயாவை  தேடிக் கொண்டிருந்தார். கடைசியில் இப்போது "சடகோபாச்சாரியார்' என்று அழைக்கப்படும்  அன்றைய "சடகோபன் சார்' வசிக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டார். 
ஆசிரியரை தேடிச் சென்று பார்ப்பதில் மாணவனுக்குக் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட,  தன்னைத் தேடி வரும் மாணவனைப் பார்க்கும்போது  அவருக்கு ஏற்படும் மகிழ்ச்சி பல மடங்கு அதிகம் என்பதை 90  வயது சடகோபன் ஐயாவை சந்திக்கும்போது உணர்ந்து நெகிழ்ந்தேன். என்னையும் எனது தந்தையையும் கூட  ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கும் அவரது நினைவாற்றல் என்னை வியப்பில் ஆழ்த்தியது.
எனக்குத் தமிழும் கணிதமும் பாடமெடுத்த ஆசிரியர்.  அவர் கற்றுத்தந்த தமிழும் மறக்கவில்லை; எனது  வருங்காலம் குறித்த அவரது கணக்கும் தவறவில்லை.  நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கி ஆசி பெற்றபோது அந்த 90 வயது ஆசான் சொன்ன வார்த்தைகள் இவை - ""நான் சதமடிக்கும்போது ஆசீர்வாதம் வாங்க, தவறாமல் நீ வரவேண்டும்!''


நவீன தமிழ் இலக்கியம் பற்றி ந.பிச்சமூர்த்தியை அகற்றி நிறுத்திவிட்டு 
எழுதிவிட முடியாது. புதுக்கவிதையின் நதிமூலம் ந.பிச்சமூர்த்தி என்றுதான் கூற வேண்டும். தமிழில் வெளிவந்த  முதல் புதுக்கவிதைத் தொகுப்பு அவருடையது.  புதுக்கவிதை என்கிற கவிதை பாணியை தமிழில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர்கள் ந.பிச்சமூர்த்தியும், கு.ப.ராஜகோபாலனும்.
புதுக்கவிதையின் நதிமூலம் என்று ந.பிச்சமூர்த்தியை குறுக்கிவிட முடியாது. அகவை 70-ஐ 
கடந்து அவர் மறையும் காலம் வரை புதுக்கவிதையை அடுத்தடுத்த கட்டத்துக்கு ஏற்றதாகப் பக்குவப்படுத்தும் படைப்புகளை அவர் படைத்துக்கொண்டிருந்தார். புதுக்கவிதையுடன் நின்று விடாமல் சிறு கதைகளிலும் தடம் பதித்தவர் அவர். சிறுகதைகளிலும் பல புதிய உத்திகளைக் கையாண்ட பெருமைக்குரியவர். புதுக்கவிதை, சிறுகதை என்று 
நின்றுவிடாமல் கட்டுரை இலக்கியத்திலும் புதிய ஒளி பாய்ச்சிய பெருமை 
அவருக்குண்டு. 
மணிக்கொடி, கலா மோகினி, கிராம ஊழியன், சிவாஜி உள்ளிட்ட இதழ்களில் ந.பிச்சமூர்த்தி பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார். "தினமணி'யில் 
வ.ராமசாமி ஐயங்கார் (வ.ரா) நடைச் சித்திரங்கள் என்று ஒரு வித்தியாசமான தமிழ் உரைநடை உத்தியை அறிமுகப்படுத்தினார் என்றால், ந.பிச்சமூர்த்தி அதை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் சென்று புது மெருகேற்றினார். 
"பிக்ஷý'  என்ற புனைப்
பெயரில் ந.பிச்சமூர்த்தி "மன நிழல்' என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதி வந்தார். கட்டுரையின் அடிப்படை இலக்கணத்தில் அவை அமைந்திருந்தாலும், ஒரு புதுமைப் பாங்கை 
அவற்றில் காண முடிகிறது. மன
 ஓட்டங்களையும், இயற்கை வர்ணனைகளையும், தத்துவ நோக்கையும், கதை அம்சத்தையும்  ஒன்று கலந்து புதியதொரு பாணிக்கு "மன நிழல்' வழிகோலுகிறது. ந.பிச்சமூர்த்தி தான் வாழ்ந்தபோதே அந்தக் கட்டுரைகளின் தொகுப்பை  வெளியிட வேண்டும் என்று விரும்பினார். ஆனால் நிறைவேறவில்லை. 
அவர் டிசம்பர் 1976-இல் மறைந்த சில மாதங்களில்,  "மன நிழல்' கட்டுரைத் தொகுப்பின் முதல் பதிப்பு 1977-ஆம் ஆண்டு வெளிவந்தது. 2017-இல் 40-ஆம் ஆண்டு நினைவுப் பதிப்பாக  "மன நிழல்' மீண்டும்  வெளியிடப்பட்டிருக்கிறது. 32 கட்டுரைகளை உள்ளடக்கிய "மன நிழல்'  தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ள ஒருவர் படித்திருக்க வேண்டிய குறிப்பிடத்தக்க புத்தகங்களில் ஒன்று.


மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தமிழகத்திலுள்ள "தினமணி'யின் எல்லாப் பதிப்புகளுக்கும் சென்று கள நிலவரத்தைத் தெரிந்துகொள்ள பயணித்துக் கொண்டிருக்கிறேன். தேர்தல் செய்திகள் வெளியிடுவது குறித்து வழிகாட்டுதல் வழங்கவும், நிருபர்களிடமிருந்து கள நில
வரம் குறித்து தெரிந்துகொள்ளவும் திருச்சியில் நேற்று ஆசிரியர் குழுவின் கூட்டம் நடந்தது. அப்போது திருச்சி பதிப்பில் முதுநிலை உதவி ஆசிரியராக இருக்கும் இளவல் ஆறுமுகம் "வாரம்தோறும் வாலி' கவிதைத் தொகுப்பை அன்பளிப்பாகத் தந்தார். நடைபெறும் தேர்தலுக்கும் 
அதிலிருந்த கவிதைக்கும் தொடர்பு இருப்பதால் அதையே இந்த வாரத்தின் கவிதையாக்குகிறேன். 
கட்சிகளுக்குத் தேவை 
கூட்டு; 
கூட்டுக்குத் தேவை
சீட்டு;
சீட்டுக்குத் தேவை
ஓட்டு;
ஓட்டுக்குத் தேவை
நோட்டு!
தொன்னைக்கு நெய்யா
நெய்க்குத் தொன்னையா
எதற்கு எது ஆதாரம்?
ஏலாது சொல்ல ஆராலும்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com