Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  

  இந்த வாரம் கலாரசிகன்

  Published on : 01st April 2019 08:06 PM  |   அ+அ அ-   |    |  

  கடந்த 17-ஆம் தேதி வேலூரிலிருந்து தொடங்கிய எனது சுற்றுப்பயணம் நேற்றுதான் சென்னையில் நிறைவடைந்தது. தேர்தல் வர இருக்கும் நிலையில், கள நிலவரம் எப்படித்தான் இருக்கிறது என்று ஒரு பருந்துப் பார்வை பார்ப்போமே என்பதுதான் தமிழகத்தை வலம் வந்ததன் நோக்கம். 

  வேலூரில் விஐடி பல்கலைக்கழக வேந்தரை சந்தித்தேன். 1967-இல் நாடாளுமன்றத் தேர்தலில் அன்றைய வந்தவாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அவர். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியல் எதிர்கொண்ட எல்லா மாற்றங்களுக்கும் நேரடி சாட்சியாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். 

  இன்று தமிழகத்தின் தலைசிறந்த கல்வியாளராக சர்வதேச அளவில் தனது ஆளுமையை நிலைநாட்டியிருக்கும் ஜி.விசுவநாதன், தமிழகத்தின் முதல்வர்களாக இருந்த அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்கிற நான்கு ஆளுமைகளை மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஆளுமைகளாக வலம்வந்த இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், ராஜீவ் காந்தி, நரசிம்ம ராவ், வாஜ்பாய், மன்மோகன் சிங், நரேந்திர மோடி ஆகியோருடனும் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர் என்பதுதான் அவரது தனிச்சிறப்பு. இவருடைய ஆற்றலை அரசியல் பயன்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அது தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்குப் பயன்பட்டிருக்கிறது என்பது மிகப்பெரிய ஆறுதல். 

  அவரைச் சந்தித்தபோது, ஆங்கிலத்தில் டாக்டர் புஷ்பா குருப் எழுதிய அவரது வரலாற்று நூலை அன்பளிப்பாகத் தந்தார். அது இன்னும் விரிவுபடுத்தப்பட்டு தமிழாக்கம் செய்யப்பட வேண்டும். 

  ஜி.விசுவநாதன் எழுதிய "அண்ணா அருமை அண்ணா' என்கிற புத்தகத்தையும் தந்தார் அவர். ஏற்கெனவே ஒருமுறை, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தாலும், அன்று இரவு மீண்டும் ஒருமுறை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.  அண்ணா என்கிற அரசியல்வாதி ஒருபுறமிருக்க, அந்த ஆளுமையின் மனித நேயமிக்க இன்னொரு பரிமாணம் மலைக்க வைக்கிறது. ஜி.விசுவநாதனின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒவ்வொரு பதிவும் இன்றைய அரசியல்வாதிகளுக்கு வழிகாட்டுதல்கள். 


  சென்னை குரோம்பேட்டையில் உள்ள திருமதி தேவ்குன்வர் நானாலால் பட் மகளிர் வைணவக் கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் தி.செந்தமிழ்ச்செல்வி. கடந்த மாதம் அந்தக் கல்லூரியில் நடந்த முத்தமிழ் விழாவில் கலந்துகொள்ள சென்றிருந்தபோது, எங்களது உரையாடலில் சிறுகதைகள் குறித்த பேச்சு எழுந்தது. அப்போது அவர்  தான் எழுதியிருக்கும் "மணிக்கொடி சிறுகதைகளில் மகளிர்' என்கிற புத்தகம் குறித்துக் கூறி, அந்தப் புத்தகத்தையும் தந்தார். மணிக்கொடி எழுத்தாளர்கள் குறித்தும், சிறுகதைகள் குறித்தும் ஆர்வமில்லாத இலக்கிய நாட்டம் கொண்ட தமிழர்கள் யாரும் இருக்க முடியாது. நான் அதற்கு விதிவிலக்கா என்ன?

  1930-இல் தொடங்கப்பட்ட மணிக்கொடி மிகப்பெரிய லட்சியத்துடன் வெளிவந்தது. விடுதலை வேள்வியில் தளபதிகளாக இருந்த கு.சீனிவாசன், வ.ராமசாமி ஐயங்கார் (வ.ரா), டி.எஸ்.சொக்கலிங்கம் ஆகிய மூவரின் முயற்சியால் தொடங்கப்பட்ட வார இதழ்தான் மணிக்கொடி. 1930-களில் இருந்து சிறிதுகால இடைவெளி விட்டு 6 ஆண்டு காலம் வெளிவந்த மணிக்கொடி, 1950-களில் மீண்டும் தொடங்கப்பட்டு நான்கு இதழ்கள் வரை வெளிவந்தன. பி.எஸ்.ராமையா, சி.சு.செல்லப்பா, புதுமைப்பித்தன், சிட்டி, "ஆர்யா' பாஷ்யம், ந.பிச்சமூர்த்தி என்று தமிழகத்தின் தலைசிறந்த இலக்கிய ஆளுமைகளின் படைப்புகளும் உழைப்பும் மணிக்கொடிக்கு பெருமை சேர்த்தன. தமிழில் சிறுகதை என்கிற இலக்கிய வடிவத்தின் வளர்ச்சிக்கு அடிப்படையாக இருந்த பெருமை மணிக்கொடி இதழுக்கு உண்டு. 

  மணிக்கொடி இதழ் எத்தனையோ புதிய உத்திகளையும், எழுத்து நடை பாணிகளையும், சமூகக் கண்ணோட்டத்துடன் கூடிய சிந்தனைகளையும் துணிந்து தனது பக்கங்களில் பரீட்சார்த்தம் செய்ய முற்பட்டது. பிற்காலத்தில் தமிழகத்தில் ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்கு அடித்தளமிட்ட பெருமை மணிக்கொடிக்கு உண்டு. 

  வ.ரா, சீனிவாசன், டி.எஸ்.சொக்கலிங்கம் மூவரும் தாங்கள் தொடங்க இருக்கும் வார இதழுக்கான பெயரைத் தேர்ந்தெடுத்ததிலேயே ஒரு சுவாரஸ்யம் இருக்கிறது. இதுகுறித்து டி.எஸ்.சொக்கலிங்கம் பதிவு செய்கிறார்.
  "ஒரு நாள் சென்னை ஹைகோர்ட் கடற்கரையில் நாங்கள் மூவரும் (கு.சீனிவாசன், வ.ரா, டி.எஸ்.சொக்கலிங்கம்) உட்கார்ந்து புதிய பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தோம். அச்சமயம், கோட்டை மீது பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் கொடியின் கயிறு அறுந்து விழுந்தது. அது விழுந்ததில் எங்களுக்கு சந்தோஷம். பிரிட்டிஷ் கொடி விழுந்தது; இனி நமது கொடிதான் பறக்கப்போகிறது என்று பேசிக்கொண்டிருந்தோம். அச்சமயத்தில்தான் புதுப் பத்திரிகைக்கு "மணிக்கொடி' என்ற பெயர் உதயமாயிற்று' என்று பதிவு செய்திருக்கிறார் பின்னாளில் "தினமணி'யின் நிறுவன ஆசிரியராக இருந்த டி.எஸ்.சொக்கலிங்கம்.

  மணிக்கொடி இதழ்களை நுண்ணாடியில் வைத்து ஆய்வு செய்து, வெளிவந்த சிறுகதைகளில் மகளிர் தொடர்பான எல்லாப் பதிவுகளையும் தொகுத்து அளித்திருக்கிறார் முனைவர் தி.செந்தமிழ்ச் செல்வி. பழைய மணிக்கொடி இதழ்களைப் புரட்டிப் பார்த்த நிறைவை ஏற்படுத்துகிறது அவரது முயற்சி.


  புத்தக விமர்சனத்திற்கு அனுப்பித் தரப்பட்டிருந்தது துஷ்யந்த் சரவணராஜ் எழுதிய "மழைக்கு இதமாய் ஒரு மழை...' என்கிற கவிதைத் தொகுப்பு.
  புற்றீசல் போல  எங்கு பார்த்தாலும் உருவாகிவரும் கருத்தரிப்பு மையங்களைப் பார்க்கும் போதெல்லாம் இதயம் கனக்கிறது. திடீரென்று ஒட்டுமொத்த சமுதாயத்தையும் மலட்டுத் தன்மை  பற்றிக்கொண்டு விட்டதோ என்று மனம் பதைபதைக்கிறது.  குழந்தை வரம் வேண்டித் தவிக்கும்  தாய் மனதின் ஏக்கங்கள் எத்தகையவை என்பதை வார்த்தையில் வடித்துவிடுதல் இயலாத ஒன்று.குழந்தைக்காக தவம் இருக்கும் தாயின் வேண்டுதல் எப்படி இருக்கும்?  அதுதான் இந்தக் கவிதை.

  எந்தக் கடவுளாவது
  இறங்கி வாருங்கள்!
  இல்லையேல்...
  இரங்கி வாருங்கள்!
  காலியாய்க் கிடக்கிறது
  கருவறை ஒன்று!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai