அறுவரின் அரசாட்சியைக் கண்டுகளித்த செம்பியன் மாதேவி!  

"இராஜகேசரி' பட்டம் சுமந்து இறை தொண்டனாக  வலம் வந்தவர் கண்டராதித்த சோழன். கண்டராதித்த தேவர் என்றும், மும்முடிச்சோழ தேவர் என்றும் அழைக்கப்பட்ட  இவர், சோழமண்டல சக்கரவர்த்தியாக அரசாண்ட
அறுவரின் அரசாட்சியைக் கண்டுகளித்த செம்பியன் மாதேவி!  

"இராஜகேசரி' பட்டம் சுமந்து இறை தொண்டனாக  வலம் வந்தவர் கண்டராதித்த சோழன். கண்டராதித்த தேவர் என்றும், மும்முடிச்சோழ தேவர் என்றும் அழைக்கப்பட்ட  இவர், சோழமண்டல சக்கரவர்த்தியாக அரசாண்ட காலம் கி.பி. 953 முதல் 957 வரை. 

இவர் செந்தமிழ்ப் புலமையும், சிவஞானத் தெளிவும் உடையவர். தில்லைக்கூத்தன்பால் எல்லையில்லா பக்தியை உள்ளத்தில் நிறைத்தவர். மேலும், சைவத் திருமுறைகளுள் ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பாவில் உள்ள "கோயிற்பதிகம்' இவர் பாடியதுதான்.

கண்டராதித்தனின் இரண்டாவது மனைவி செம்பியன் மாதேவியார். கண்டராதித்தன் பட்டத்திற்கு  வருமுன்னரே முதல் மனைவி வீரநாராயணி இறந்துவிட்டதால், செம்பியன் மாதேவி பட்டத்தரசியானார். கண்டராதித்த சோழன் நான்கு ஆண்டு காலம் நல்லாட்சி புரிந்தான். திடீரென்று ஏற்பட்ட  உடல்நலக் குறைவினால் இறை திருவடி கலந்தான். அதன் பின்னர் செம்பியன் மாதேவியார் தனது வாழ்நாள் முழுவதும் தெய்வத் திருப்பணிகள் பல செய்து சோழர்கள்  வரலாற்றில் தனக்கென்று ஓர் இடம்பிடித்தார். 

இவர்கள் வாழ்ந்த  காலத்தில் சோழ சாம்ராஜ்ஜியத்தில் சக்கரவர்த்திகளாக வீற்றிருந்து அரசாண்ட  1. முதலாம் பராந்தக சோழன் (செம்பியன் மாதேவியார் மாமனார் ) 2. கண்டராதித்த சோழன் (இவரின் கணவர்), 3. அரிஞ்சய சோழன் (இவரின்  கொழுந்தன்), 4. இரண்டாம் பராந்தகன் (எ) சுந்தர சோழன் (அரிஞ்சயனின்  மகன்), 5. மதுராந்தகன்( எ) உத்தம சோழன் (செம்பியன் மாதேவியார்  மகன்),  6. அருள்மொழிவர்மன் எனும் முதலாம் இராசராச சோழன் (இவரின் கொழுந்தன் பெயரன்)  ஆகிய ஆறு சக்கரவர்த்திகளின் அரசாட்சியைக்  கண்டுகளித்த பெரும் மூதாட்டியார் செம்பியன் மாதேவியார்.

இவர், 60 ஆண்டுகள் சிவப்பணியில் தன்னை அர்ப்பணித்து,  சுமார்  80 ஆண்டுகள் இப்புவியில்  வாழ்ந்திருந்து, இறையடி கலந்தவர். இவரின் காலம் கி.பி 920 முதல்  -1001-வரை என்பது ஆய்வாளர்களின் கருத்து.

இவர்  செய்த முதல் அறம்  941-ஆம் ஆண்டு தன் மாமனார் முதலாம்  பராந்தக சோழர் ஆட்சியில் திருச்சிராப்பள்ளி புறப் பகுதியிலுள்ள உய்யக் கொண்டான் மலையில் திருகற்குடி மாதேவர்க்கு  ஒரு நந்தா விளக்கு எரிக்க தொண்ணூறு ஆடுகள் அளித்தது. 

மேலும், பண்டைய சோழர்கள் கால  செங்கல்  கோயில்கள் பலவற்றை கற்றளியாக எடுப்பித்தும், நித்திய வழிபாடுகளுக்குத் தேவையான நிவந்தங்கள் ஏற்படுத்தியும், இறை திருவுருவங்களுக்கு விலையுயர்ந்த நவரத்தினங்கள் பதித்த பொன் மற்றும் வெள்ளி அணிகலன்கள் பல அளித்தும், பூஜைக்குரிய  மலர்களுக்காக  பல ஆலயங்களில்  நந்தவனங்கள் ஏற்படுத்தியும், அறங்கள் பல சிறப்பாக செய்திருக்கின்றார் என்பது கல்வெட்டுகள் வாயிலாக அறியப்படும் செய்தியாகும்.

செம்பியன் மாதேவியார்  கற்றளியாக எடுப்பித்த கோயில்கள் பல. அவற்றுள் "திருநல்லம்' எனும் "கோனேரிராஜபுரத்தில்'  செங்கற்களால் கட்டப்பட்டிருந்த கோயிலை கற்றளியாக எடுப்பித்தார். இக்கோயிலில் கண்டராதித்தன் சிவலிங்கத்திற்கு பூஜை செய்வது போல் ஒரு சிற்பத்தை சமர்ப்பித்துள்ளார். இந்தத் திருக்கோயிலுக்கு தன் கணவன் பெயரான "ஸ்ரீகண்டராதித்தர்' என்ற பெயரையே சூட்டி மனநிறைவு கொண்டார். 

இச்சிற்பத்தின் அடியில் காணப்பெறும் கல்வெட்டைப் படித்துப் பார்த்தால் செம்பியன் மாதேவிக்கு உள்ள சிவபக்தி கலந்த பதிபக்தி அன்பின் வெளிப்பாடு எத்தனை உயர்வானது என்று  புலனாகும்.

* ஸ்வஸ்தி ஸ்ரீ கண்டராதித்த தேவர் தேவியார்- மாதே வடிகளாரான  ஸ்ரீ செம்பியன் மாதேவியார்- தம்முடைய திருமகனார் ஸ்ரீ மதுராந்தக தேவரான- உத்தம சோழர் திரு ராஜ்ஜியஞ் செய்தருளா  நிற்க- தம்முடையார் ஸ்ரீகண்டராதித்த தேவர் திருநாமத்தால்- திருநல்லமுடையாருக்குத்  திருக்கற்றளி எ(ழுந்)(டுத்) தருளிவித்து. - இத்திருக்கற்றளிலே (ய்) திருநல்லமுடையாரைத்   திருவடி(த் ) - தொழுகின்றாராக  எழுந்தருளுவித்த  ஸ்ரீகண்டராதித்த   தேவர்  இவர் * - என இங்குள்ள கல்வெட்டில் உள்ளது.

முதல் ராஜேந்திர சோழ மாமன்னனான கங்கைகொண்ட சோழர் நாகை மாவட்டம்  செம்பியன் மாதேவி எனும் ஊரிலுள்ள கயிலாசமுடையார் கோயிலில் கி.பி. 1019-ஆம் ஆண்டில் இவ்வரசியாரின் திருவுருவ செப்புத்  திருமேனியை எழுந்தருளவித்து  வழிபட்டு  மகிழ்ந்தார். இச்சிலை வடிவத்தை  இன்றும் இவ்வாலயத்தில் காணலாம்.
- குடந்தை  ப. சரவணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com