செந்நாயின் தந்திரமும்,  ஆண்மானின் செந்திறமும்!

ஆறறிவுடைய மனிதன் பகுத்தறிந்து வாழ்பவன்.  ஐந்தறிவுடைய விலங்குகளோ பகுத்தறிவு இல்லாவிட்டாலும், தத்தமது வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்ள இயற்கையாகவே சில வழிமுறைகளை அறிந்து வைத்துள்ளன. 
செந்நாயின் தந்திரமும்,  ஆண்மானின் செந்திறமும்!

ஆறறிவுடைய மனிதன் பகுத்தறிந்து வாழ்பவன்.  ஐந்தறிவுடைய விலங்குகளோ பகுத்தறிவு இல்லாவிட்டாலும், தத்தமது வாழ்க்கையை இனிதாக்கிக் கொள்ள இயற்கையாகவே சில வழிமுறைகளை அறிந்து வைத்துள்ளன. 
அகநானூறு இலக்கியத்தில் ஒரு காட்சி. ஒரு பெண்மான், தன் துணையாகிய ஆண்மானைக் காணவில்லை என்று தேடி அலைகிறது. சற்று நேரத்தில், அது தன் துணையைக் கண்டுபிடித்து விடுகிறது.  ஆனால், அதற்கு ஓர் அதிர்ச்சி காத்திருக்கிறது.
செந்நாய் ஒன்று தன் துணையாகிய பெண் நாயின் பசியைத் தீர்ப்பதற்காக இரைதேடித் திரிகிறது. எந்த ஆண்மானைத் தேடிப் பெண்மான் வந்ததோ, அந்த ஆண்மானையே கடித்துக் குதறித் தன் துணைக்கு உணவாக்க நினைக்கிறது அச்செந்நாய். அக்காட்சியை விளக்கும் பாடல் இதுதான்:

"ஒழியச் சென்மார் செல்ப' என்றுநாம்
அழிபடர் உழக்கும் அவல நெஞ்சத்து
எவ்வம் இகழ்ந்துசேண் அகல வையெயிற்று
ஊனசைப் பிணவின் உறுபசி களைஇயர் 
காடுதேர் மடப்பிணை அலறக் கலையின்
ஓடுகுறங்கு அறுத்த செந்நா ஏற்றை
வெயில்புலந் திளைக்கும் வெம்மைய பயில்வரி
இரும்புலி வேங்கைக் கருந்தோல் அன்ன
கல்லெடுத் தெறிந்த பல்கிழி உடுக்கை
உலறுகுடை வம்பலர் உயர்மரம் ஏறி
ஏறுவேட் டெழுந்த இனந்தீர் எருவை
ஆடுசெவி நோக்கும் அத்தம் பணைத்தோள்
குவளை உண்கண் இவளும் நம்மொடு
வரூஉம் என்றனரே காதலர்;
வாராய் தோழி முயங்குகம் பலவே' (அகநா-285)

ஒரு விலங்கு மற்றோர் விலங்கை உணவுக்காக வேட்டையாடும் நிகழ்வு குறித்த வருணனையால் இப்பாடலின் பின்புலம் சுவை மிக்கதாகிறது.

இதில், செந்நாயானது, தன் எதிர்ப்பட்ட ஆண்மானின் காலைக் கவ்விப் பிடித்து, அதன் அடித்தொடையின் சதையைச் சிதைத்து விடுகிறது. மானுக்கு நெருக்கடி வரும்பொழுது துள்ளியோட அடிப்படையாக இருப்பது அவற்றின் கால்களின் தொடைப் பகுதிச் சதையே.  ஆதலால், அச்சதையைக் கடித்துச் சிதைத்துவிட்டால், அத்தகைய மான்கள் விரைந்து தப்பியோட முடியாமல் துவண்டு கீழே வீழ்ந்துவிடும். அதன் பின்னர் எளிதாகக் கொன்றுவிடலாம். இத்தந்திரம் தெரிந்து வைத்திருந்த அச்செந்நாய், அந்த மானை வீழ்த்திக் கொன்று, அதைத் தனக்கும், தனது பெண்துணைக்கும் உணவாக்கிக் கொள்கிறது. 

இன்னொரு பாடலில் (அகநா-287), ஆண்மானுக்கு இயற்கையாகப் படைக்கப்பட்டுள்ள செம்மையான அறிவுக்கூறு ஒன்று பொதித்து வைக்கப்பட்டுள்ளது. குடவாயிற் கீரத்தனார் என்கிற புலவரால் பாடப்பெற்ற இப்பாடல், தலைவியைப் பிரிந்து வேற்றூர் சென்று கொண்டிருக்கும் தலைவன், தான் செல்லும் வழியில் தன் நெஞ்சுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

தலைவன் சென்று கொண்டிருக்கும் அவ்வழி நெடியதாயிருக்கிறது. சுரைக் கொடிகள் படர்ந்துள்ள பல குடியிருப்புகளை உடைய ஒரு சிற்றூரில், தெய்வம் உறையும் இடமாகக் கருதப்படும் ஓரிடத்திற்கு அருகேயுள்ள பலிபீடம்; அதன் மேல் உணவு வைக்கப்படாமல் அது வறிதே காட்சியளிக்கிறது.

வெப்பக்காற்று வீசுவதால், ஆலமரத்தின் விழுதுகள் அசைய, மரத்திலிருக்கும் புறாக்கள் அஞ்சிப் பறந்தோடுகின்றன. அங்கே நின்றுகொண்டிருக்கும் பெண்மான் ஒன்றின் முதுகிடத்தே, தன் நாவால் நக்கிக் கொடுத்து,  தன் அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது ஓர் ஆண்மான். அங்கிருந்த "யா'மரத்தின் நிழலில் தங்கியிருக்கும் அத்தலைவன் இக்காட்சிகளைக் காண்கின்றான்.  அப்பொழுது தனிமைத் துன்பத்தை எண்ணி வருந்துகிறான். பாலைத்திணைப் பாடலான இது, "பிரிவு'த் துன்பத்தின் கொடுமையையும், "அன்பு' என்பதற்கான விளக்கத்தையும் ஒருங்கே தருகிறது.

பொதுவாகவே, விலங்கினங்கள் குட்டிகளை ஈன்ற பின்பு, அந்த ஈன்றணிமை நேரத்தில் தனது குட்டிகளை நாவால் நக்கிக் கொடுப்பது வழக்கம். குட்டிகளின் மீது படிந்துள்ள குடநீரை அகற்றித் தூய்மை செய்வதற்கே அவை அவ்வாறு செய்யும்.  அது பாசத்தின் வெளிப்பாடு என்ற நோக்கில் நாம் பார்க்கிறோம். ஆனால், இன்னொரு நுட்பமும் அங்கு பொதிந்துள்ளது.

இப்பாடலில் காட்சிப்படுத்தப்படும் ஆண்மான், தன் துணையாகிய பெண்மானின் முதுகில் நக்கிக் கொடுப்பதற்குக் காரணம், பாசம் மட்டுமல்ல. வெப்பம் மிகுந்த அப்பாலை வழியில் நின்று கொண்டிருப்பதால், அப்பெண்மானின் உடல் வெப்பமுற்று, அது துன்புறுகிறது. அதை உணர்கிற ஆண்மான், தனது நாவால் பெண்மானை நக்கிக் கொடுத்து, அதன் உடல் வெப்பத்தைத் தணிக்க முயல்கிறது. அக்காட்சியைத்தான் 287-ஆவது பாடல் படம் பிடிக்கிறது.

ஆக, மான்களின் விரைவான ஓட்டத்திற்கு அடிப்படையாக உள்ள அவற்றின் தொடைச் சதைகளைக் கடித்துச் சிதைக்கும் வேட்டை நாய்களின் தந்திரமும்; ஒரு மானின் உடலின் வெப்பத்தை நாவால் நக்கித் தணிக்கலாம் என்ற மானின் செந்திறமும் இயற்கையால் அவைகட்குக் கொடுக்கப்பட்ட கொடையே என்பதை எண்ணி வியக்கலாம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com