Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm1

  எழுத்தாளர் பிரபஞ்சனின் பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை கவிக்கோ அரங்கத்தில் நடைபெற்றபோது, நீண்ட நாளாக எனக்கிருந்த ஆதங்கத்தை மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனிடம் தெரிவித்தேன். பலமுறை இதுகுறித்து "தினமணி'யில் எழுதியும்கூட, அரசு பாராமுகமாக இருக்கிறதே என்கிற என்னுடைய வருத்தத்துக்கு விடைதேட முற்பட்டிருக்கும் காந்தி பேரவைத் தலைவர் குமரி அனந்தனுக்கு நன்றி.
  சென்னை குரோம்பேட்டையில் உள்ள பாரதிபுரத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகியும், பாரதியார், வ.உ.சி. ஆகியோரின் நண்பருமான பரலி.சு.நெல்லையப்பர் பெயரில் ஒரு பள்ளி இயங்கி வந்தது.
  சுதந்திரப் போராட்டத் தியாகியான பரலி.சு.நெல்லையப்பருக்கு 5,000 சதுர அடி நிலத்தை அரசு வழங்கியது. அதை அப்படியே பள்ளிக்கூடம் கட்டுவதற்கு பல்லாவரம் நகராட்சிக்கு இலவசமாக வழங்கினார் தியாகி பரலி.சு.நெல்லையப்பர். இத்தனைக்கும் அவரொன்றும் செல்வச் செழிப்புடன் வாழும் தனவந்தராக இருக்கவில்லை.
  "பரலி.சு.நெல்லையப்பர் அரசுத் தொடக்கப்பள்ளி' என்று பெயரிடப்பட்டு, அந்தத் தொடக்கப்பள்ளி பல ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னால், போதிய மாணவர் சேர்க்கை இல்லை என்று காரணம் கூறப்பட்டு அந்தப் பள்ளி மூடப்பட்டது. அதுமுதல் பள்ளிக் கட்டடம் போதிய பராமரிப்பு இல்லாததால் சிதிலமடைந்து கிடக்கிறது. அந்த இடத்தைப் பாதுகாக்க எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததால் அதை சமூக விரோதிகள் தவறான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள். அந்த இடத்தை சட்ட விரோதமாக அபகரிக்கவும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
  "தம்பி' என்று பாரதியாரால் வாஞ்சையுடன் அழைக்கப்பட்ட தியாகி பரலி.சு.நெல்லையப்பர், தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை நல்ல காரியத்துக்காக தானம் செய்திருக்கும்போது, அதைப் பயன்படுத்தாமல் இருப்பதோ, சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கு உட்படுத்துவதோ தவறு. அங்கே மீண்டும் பள்ளிக்கூடம் திறக்க வேண்டும் என்பதில்லை. அதை ஏன் பரலி.சு.நெல்லையப்பர் நினைவு மண்டபமாக மாற்றக்கூடாது?
  கடந்த புதன்கிழமை குமரி அனந்தன், குரோம்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பொதுமக்களுடன் ஊர்வலமாகச் சென்று, பல்லாவரம் நகராட்சி ஆணையரிடம் பள்ளியை மீண்டும் திறக்கக்கோரி மனு கொடுத்திருக்கிறார். அரசும், நகராட்சியும் அனுமதி அளிக்குமேயானால் பொதுமக்களின் நன்கொடையில் எட்டயபுரத்தில் பாரதியார் மணி மண்டபம் எழுப்பப்பட்டது போல, அந்த இடத்தில் பொதுமக்களின் பங்களிப்பில் தியாகிகள் மணி மண்டபம் எழுப்பிவிட முடியும்.
  விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சி சில ஆண்டுகளுக்கு முன்பே என்னிடம் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி விஜயகார்த்திகேயன் குறித்து சிலாகித்துக் கூறியிருக்கிறார். அப்போது முதலே விஜயகார்த்திகேயனின் கட்டுரைகளைத் தொடர்ந்து கவனித்தும் வாசித்தும் வருகிறேன்.
  தனது இளம் வயதிலேயே ஐந்தாண்டுகளுக்கு முன்பு கோவை மாநகராட்சியின் ஆணையராக விஜயகார்த்திகேயன் பொறுப்பேற்றபோது, ஒரு சாதனையாளர் உருவாகிறார் என்பது தெரிந்தது. மருத்துவம் பயின்ற விஜயகார்த்திகேயன், குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று, 2011-ஆம் ஆண்டு அரசுப் பணியில் அடியெடுத்து வைத்தாலும், அவரது அடிப்படை தாகம் எழுத்தாகத்தான் இருந்திருக்கிறது. அதனால்தான் அவர் எழுதிய "எட்டும் தூரத்தில் ஐ.ஏ.எஸ்.' என்கிற புத்தகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
  அதைத் தொடர்ந்து "அதுவும் இதுவும்', "ஒரே கல்லில் 13 மாங்காய்' என்று ஒன்றன் பின் ஒன்றாக இளைஞர்களுக்குத் தன்னம்பிக்கையூட்டவும், வெற்றிக்கு வழிகாட்டவும் புத்தகங்கள் எழுதுவதை ஆர்வத்துடனும், ஒரு கடமையாகவும் செய்யத் தொடங்கினார். அவரது சமீபத்திய படைப்பு, "ஒரு கப் காபி சாப்பிடலாமா!'
  30 கட்டுரைகள் அடங்கிய "ஒரு கப் காபி சாப்பிடலாமா!' புத்தகம், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மிக எளிய நடையில் அவர்களுக்குப் புரியும் விதத்தில் சுவாரஸ்யமான சம்பவங்களையும், புகழ்பெற்ற மனிதர்களின் வாழ்வியல் வெற்றிகளையும் மேற்கோள் காட்டி வெளிக்கொணரப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு.
  டாக்டர் க.விஜயகார்த்திகேயன் தனது இந்தப் புத்தகத்தை "உங்கள் வெற்றிக்கான 30 ரகசியங்கள்' என்று குறிப்பிடுகிறார். அதற்குக் காரணம், ஒவ்வொரு கட்டுரையும் பதின்ம வயதைக் கடந்து, கடும் போட்டிகளை எதிர்கொள்ளும் நிஜ வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் இளைஞனுக்கு சவால்களைத் துணிவுடன் எதிர்கொள்வதற்கான 30 வழிகளை எடுத்துரைக்கிறது என்பதுதான். வெற்றிக் கதைகள், தன்னம்பிக்கையை ஊட்டும் விதமான நிகழ்வுகள், தோல்விகளை எதிர்கொள்வதற்கான குணநலன்கள், வழிமுறைகள் என்று உற்சாகத்தையும் உத்வேகத்தையும் ஊட்டும் கட்டுரைகளின் தொகுப்பு இது. படிக்கும்போது ஆக்கப்பூர்வமான உணர்வையும், படித்தபின் தன்னம்பிக்கையை தரும் ஆர்வத்தையும் ஏற்படுத்துவதுதான் இந்த நூலின் இலக்கு.
  வழக்கமான சுயமுன்னேற்ற, தன்னம்பிக்கையூட்டும் கட்டுரைகளிலிருந்து டாக்டர் க.விஜயகார்த்திகேயனின் கட்டுரைகள் வித்தியாசப்படுகின்றன. அதற்குக் காரணம், அவர் கையாளும் சரளமான பேச்சு நடையும், சட்டென்று மனதில் பதியும் சம்பவங்களும். இந்தப் புத்தகத்துக்கு அவர் ஏன் " ஒரு கப் காபி சாப்பிடலாமா!' என்று தலைப்பு வைத்தார் என்று கேட்பார்கள் என்று தெரிந்து அதற்கான விளக்கத்தையும் தன்னுடைய என்னுரையில் அளித்திருப்பதை ரசித்தேன். ரசித்துச் சிரித்தபடி படித்தேன்.

  தெருவோர நடைமேடைப் பழைய புத்தகக் கடைகள் உண்மையில் சொல்லப்போனால் அறிவுப் பொக்கிஷங்கள். இப்போதெல்லாம் தெருவோரப் புத்தகக் கடைகள் அருகி வருகின்றன. பழைய பேப்பர் கடைகள் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் ஒரு பழைய புத்தகக் கடையில் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை நோட்டமிட்டபோது, ஒருபுறம் ஆறுதலும் இன்னொருபுறம் ஆத்திரமும் மேலிட்டது.
  எடைக்குப் போடப்பட்டிருந்த விலை மதிப்பில்லாத நல்ல புத்தகங்களைப் பிரித்தெடுத்து, மறு விற்பனைக்கு வைத்திருப்பதற்காக அந்தப் பழைய புத்தகக் கடைக்காரைப் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது. இவ்வளவு நல்ல புத்தகங்களை
  எல்லாம் எடைக்குப் போட்டிருக்கும் மாபாதகர்களை மனதிற்குள் ஆசைதீர சபிக்கவும் தோன்றியது.
  அந்தப் புத்தகங்களுக்கு நடுவே அட்டை கிழிந்து, பக்கம் பக்கமாக ஒரு புத்தகம். அது ஒரு கவிதைத் தொகுப்பு. அதில் இருந்த கவிஞர் தாமரையின் "ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும்' கவிதையிலிருந்து எடுக்கப்பட்டவை, இந்தக் கவிதை வரிகள்.
  வர்க்க பேதத்தின் கோர முகத்தையும், ஆண்டான் - அடிமைத்தனத்தின் நிதர்சனத்தையும் படம் பிடிக்கின்றன இந்த வரிகள். அதிகார ஆணவமும், மனித நேயமற்ற மனநிலையும் நான்கே வரிகளில் நச்சென்று வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன.
  "ஏய் பல்லக்குத் தூக்கி
  கொஞ்சம் நிறுத்து...
  உட்கார்ந்து உட்கார்ந்து...
  கால் வலிக்கிறது....'

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai