Enable Javscript for better performance
பழியேற்ற பாத்திரமும் பணிவின் பயனும்!- Dinamani

சுடச்சுட

  
  tm2

  'வென்றிசேர் இலங்கையானை வென்றமால் வீரம்ஓத நின்ற ராமாயணத்தில்' நினைவை விட்டு நீங்கா பாத்திரங்கள் பல. அவற்றுள் பழியேற்ற பாத்திரமாய் படைக்கப் பெற்றவள் கைகேயி.
   கோசலை பெற்ற வரதனை தன் மகனாகவும், தான் பெற்ற பரதனை கோசலையின் மகனாகவும் கருதியதோடு, நான்கு பிள்ளைகளையும் தன் பிள்ளைகளாகவே எண்ணிப் பாசம் கொண்டவள் கைகேயி.
   இந்த அளவுக்கு ராமன் மீது பாசம் வைத்துள்ள கைகேயி அவன் காடேகச் செய்தாள் என்றால், அது விதியின் விளையாட்டு என்றுதானே கூற வேண்டும்! கைகேயியால் ராமன் காட்டுக்குச் செல்ல நேர்ந்ததை அறிந்து தாய் மீது வெகுண்டெழுந்த இலக்குவனைப் பார்த்து, "நதியின் பிழையன்று' என்று தொடங்கும் பாடலின் இறுதியில் "இது விதியின் பிழை' என்று கூறி, ராமன் அவனைத் தேற்றினான்.
   அந்த விதி யாதெனில், ராமன் இளம் பருவத்தில் விளையாட்டாக செலுத்திய பாணத்தால் நிலம் பெயர்ந்து ஒரு களிமண் உருண்டை கூனி மீது விழுந்து வருத்தம் உண்டாக்கியது. அதற்குப் பழி வாங்கக் காத்திருந்த கூனி தகுந்த நேரம் பார்த்து கைகேயியைக் கருவியாக்கிக்
   கொண்டாள். இதற்கும் மேலாக தசரதனுக்குக் காட்டில் தவம்
   செய்து கொண்டிருந்த கண் தெரியாத சலபேச முனிவர் என்ற முனிவன் கொடுத்த சாபம். தசரதன் கோசலைக்குக் கூறுவதாகக் கம்பர் கூறுவது:
   "பொன்ஆர் வலயத்தோளான்
   கானோ புகுதல் தவிரான்
   என்ஆர் உயிரோ அகலாது
   ஒழியாது இது கோசலை கேள்
   முன்நாள் ஒருமா முனிவன்
   மொழியும் சாபம் உளது என்று
   அந்நாள் உற்றது எல்லாம்
   அவளுக்கு அறைவான்'
   அதாவது, மகப்பேறு இல்லாதபோது ஒருநாள் தசரதன் வேட்டையாட காட்டுக்குச் சென்றபோது, அவர் எய்த அம்பு ஓர் இளைஞன் மீது பட்டுவிடுகிறது. அதிர்ச்சிக்குள்ளான தயரதன், ""நீ நீர் எடுக்கும் ஓசையை யானை தண்ணீர் குடிக்கும் ஓசை என்று தவறாக எண்ணி அடித்துவிட்டேன்'' என்று கூறி மன்னிப்பு கேட்கிறார்.
   அதற்கு அவ்விளைஞன் ""விதி வசத்தால் இவ்வாறு நிகழ்ந்தது. என் பெயர் சுரோசனன். காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் கண் தெரியாத என் பெற்றோருக்கு நானே கண்ணாக இருந்து பணிவிடை செய்து வருகிறேன். என் தந்தையின் பெயர் சலபேச முனிவர். நீங்கள் இந்த நீரை எடுத்துச் சென்று அவர்களுக்குக் கொடுங்கள். அவர்கள் நீர் பருகிய பின் என் நிலையை எடுத்துக் கூறுங்கள்'' என்று கூறிவிட்டு இறந்து விடுகிறான்.
   தசரதன் நீர் எடுத்துக்கொண்டு முனி தம்பதிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று, ""நான் இந்நாட்டு அரசன் தசரதன்'' எனத் தொடங்கி, காட்டில் நடந்ததைக் கூறி, அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அழுது தம் அரண்மனைக்கு அழைக்கிறார்.
   தங்களின் மகன் இறந்தான் என்று கேள்விப்பட்டதும் அம்முனித் தம்பதிகள் அழுது புலம்பினர். பின்னர் ஒருவாறு தெளிந்து ""எங்கள் மகனை இழந்து நாங்கள் வாழ விரும்பவில்லை, நீ ஒரு பேரரசனாக இருந்தும் உன் தவறை உணர்ந்து எங்கள் காலில் சரணடைந்து, என்னைக் காப்பாற்றுங்கள் என்று கெஞ்சினாய். அதனால் நான் கொடுமையான சாபம் தரவில்லை. இருந்தாலும், நாங்கள் எங்கள் மகனை இழந்து தவிப்பதைப் போன்று நீயும் ஏவா முன் ஏவல் செய்யும் உன் மகன் பிரிவால் வருந்தி இறப்பாய்'' என்று சாபமிட்டு இறந்தனர். இதைக் கம்பர்,
   "தாவாது ஒளிரும் குடையாய்
   தவறு இங்கு இது நின் சரணம்
   காவாய் என்றாய் அதனால்
   கடிய சாபம் கருதோம்
   ஏவாமகனைப் பிரிந்து இன்று
   எம்போல் இடர் உற்றனை நீ
   போவாய் அகல்வான் என்னா
   பொன் நாட்டிடை போயினரால்'
   என்கிறார். ஆக, ராமனின் இளவயது விளையாட்டு, கூனியின் பழிவாங்கும் எண்ணம், தசரதனின் ஆராயாமல் அம்பு விட்ட செயல் ஆகிய காரணங்களால்தான் ராமன் காடேகினான். பாசம் நிறைந்த கைகேயி பழியேற்றாள் என்பதை அறிகிறோம்.
   தசரதன் அரசருக்கெல்லாம் பேரரசனாக இருந்தும் தன் தவறை உணர்ந்து முனிவனிடம் பணிவாய் நடந்து கொண்டதால், முனிவன் உன் மகனை இழந்து வருந்தி இறப்பாய் என்று சாபமிடவில்லை. "ஏவா முன் ஏவல் செய்யும் உன் மகன் பிரிவால் வருந்தி இறப்பாய்' என்று சாபமிட்டான்.
   எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வம் தகைத்து (125)
   என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கு ஏற்றபடி தசரதன் பணிவாய் நடந்து கொண்டான். இல்லையேல்,
   அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
   ஓம்புதல் தேற்றா தவர் (626)
   இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
   துன்பம் உறுதல் இலன் (628)
   என்கிற திருக்குறள்களுக்கு இலக்கணமானவனும்,
   மெய்த் திருப்பதம் மேவென்ற போதிலும்
   இத்திருத் துறந்தே கென்ற போதிலும்
   சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை
   ஒத்திருக்கும் முகத்தினை
   உடையவனுமான ராமனை இழந்து ராமகாவியத்தையும் இவ்வுலகம் இழந்திருக்கும் அல்லவா!
   -வயலாமூர் வீ.கிருஷ்ணன்
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai