Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  de  சென்னையில் மிகப் பிரம்மாண்டமான ஆன்மிக மாநாடு ஒன்றைக் கூட்ட வேண்டும் என்பது எனது நீண்ட நாள் கனவு. சைவம், வைணவம் உள்ளிட்ட  பிரிவுகளையும் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்துவைதம் போன்ற தத்துவங்களையும், அவற்றில் தலைசிறந்த நிபுணத்துவம் பெற்றவர்கள் மூலம் விளக்குவதுடன் மட்டுமல்லாமல்,  சனாதன தர்மம்,  பெüத்தம், சமணம், கிறிஸ்துவம், இஸ்லாமியம் போன்றவற்றின் உன்னத மத ஆச்சாரியார்களை அந்த மாநாட்டில் 
  கலந்துகொண்டு  உரையாற்ற வைக்க வேண்டும் என்பதும் கனவு.
  அப்படியொரு மாநாட்டை நடத்துவதாக இருந்தால், அனைத்துப் பிரிவினராலும்  மதித்து ஏற்றுக்கொள்ளப்படும்  ஒருவரைக் கொண்டுதான் அதைத் தொடங்கி வைக்க முடியும். அந்தத் தகுதி பெüத்தரின் மறுபிறப்பு என்றும், திபெத்திய மக்களின்  தலைவர் என்றும் கருதப்படும், சமாதானத்துக்காக நோபல் விருது பெற்ற  தலாய்லாமாவுக்குத்தான்  இருக்கிறது என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. 

  கடந்த சில மாதங்களாக  உடல்நிலை சற்று சரியில்லாததால்  யாரையும் சந்திப்பதை தலாய்லாமா தவிர்த்து வந்தார்.  கடந்த வாரம் 11-ஆம் தேதி இமாசலப் பிரதேசத்தில் உள்ள தர்மஸ்தலாவில் தலாய்லாமா பக்தர்களுக்கு  ஆசி வழங்க இருக்கிறார் என்கிற செய்தியை, இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதிக் கழகத்தின் நிர்வாக இயக்குநரும், நமது தினமணி கட்டுரையாளருமான  நண்பர் செல்வம் தெரிவித்தார்.  அதுமட்டுமல்ல, தலாய்லாமாவை சந்திப்பதற்கான  ஏற்பாடுகளையும்  விரைந்து செய்து தந்தார். 
  நம்முடைய நற்பேறு வருமான வரித்துறையின் இணை இயக்குநர் கிளமெண்ட், தர்மஸ்தலா இருக்கும் கங்க்ரா பகுதியில்  தேர்தல் பணிக்காக நியமிக்கப்பட்டிருந்தார். அவருடைய உதவியால்தான் தலாய் லாமாவை சந்திக்க  முடிந்தது.

  உலகில் பல்வேறு பகுதியிலிருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் தலாய்லாமாவின் முக தரிசனத்துக்காக வந்து குவிந்திருந்தனர்.  சென்னையில் தினமணி நடத்த இருக்கும் ஆன்மிக மாநாட்டைத் தொடங்கி வைக்க வரவேண்டும் என்கிற கோரிக்கைக்கு,   உடல்நிலை ஏற்றுக்கொண்டால், அக்டோபர் மாதத்துக்குப் பிறகு  சென்னை வருவதற்கு அவர் ஒப்புக்
  கொண்டிருக்கிறார். இந்த நல்ல செய்தியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தால் எப்படி?

  எழுத்தாளர் சா.கந்தசாமி எந்தவொரு புத்தகத்தை வெளிக்கொணர்ந்தாலும், உடனடியாக ஒரு பிரதியை தனது கையொப்பமிட்டு எனக்கு அனுப்பித் தருவதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார். கடந்த மாதம் 23-ஆம் தேதி உலகப் புத்தக நாளை முன்னிட்டு, எழுத்தாளர் சா.கந்தசாமி எனக்கு அனுப்பித் தந்திருந்த புத்தகம் "தமிழில் சுயசரித்திரங்கள்'. தலாய்லாமாவை சந்திக்க இமாசலப் பிரதேசத்துக்குச் சென்றிருந்தபோது உடன் எடுத்துச் சென்ற புத்தகங்களில் இதுவும் ஒன்று.

  சுய சரித்திரம் அல்லது தன் வரலாறு என்பது தனது வாழ்க்கையின்  குறிப்பிடத்தக்க சம்பவங்களைப் பதிவு செய்யும் ஆவணம். தன் வரலாறு எழுதுவதற்கு அந்த எழுத்தாளருக்கு வரலாறு இருக்க வேண்டும்.  அவரது வாழ்க்கை வருங்கால தலைமுறைக்கு ஏதாவது செய்தியை எடுத்துரைக்க 
  வேண்டும்.  

  சாதனையாளர்கள் தன் வரலாறு எழுதுவது இன்றியமையாதது என்பது எனது கருத்து.

  நான் நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில்,  பள்ளியில் படிக்கும்போது எனது தமிழாசிரியராக இருந்த தேவ.பொ.சோமசுந்தரம் எங்களுக்கெல்லாம் சொன்ன அறிவுரை இதுதான் - ""தமிழனாய் பிறந்த ஒவ்வொருவரும்  தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதையரின் என் சரித்திரத்தை ஒருமுறைக்கு இருமுறை படித்திருக்க வேண்டும்.  அதைப் படித்தால் நமது தாய்மொழியான தமிழ் எவ்வாறு காப்பாற்றப்பட்டது என்பது புரியும். தமிழ்ப் பற்று வளரும்''.
  இந்தியாவிலேயே  தமிழில்தான் தன் வரலாறு  முதன்முதலாக எழுதப்பட்டது. எழுதியவர் துபாஷி ஆனந்தரங்கம் பிள்ளை. புதுவை பிரெஞ்சு அரசாங்கத்தில் ஆளுநராக இருந்த  தூப்ளே துரைக்கு மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. 1736-ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து 24 ஆண்டுகள்  அன்றாடம் நடந்த சம்பவங்களை தினந்தோறும் அவர் டைரிக் குறிப்பாக எழுதி வைத்தார். அது 258 ஆண்டுகளுக்குப் பிறகுதான் அச்சு வாகனம் ஏறியது. 

  எழுத்தாளர் சா.கந்தசாமி ஆனந்தரங்கம் பிள்ளையில் தொடங்கி, வ.உ.சி.,  உ.வே.சா., பாரதியார், நாமக்கல் கவிஞர், தி.சே.செü. ராஜன், சுத்தானந்த பாரதியார், ம.பொ.சி. நெ.து.சுந்தரவடிவேலு, மு.கருணாநிதி, ஜெயகாந்தன் ஆகியோரின் சுயசரித்திரங்களை தனது புத்தகத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். அவரது தொகுப்பைப் படித்து முடித்து புத்தகத்தை மூடி வைக்கும்போது, 12 சுயசரிதைகள் குறித்த  புரிதல் ஏற்பட்டது.

  நகரங்களில் ஏன், சிறு கிராமங்களில்கூட,  தனிமைக் குடும்பங்கள் என்றாகிவிட்டது. அப்பா, அம்மா மட்டுமல்லாமல், தாத்தா, பாட்டி, பெரியம்மா, பெரியப்பா, சித்தப்பா, சித்தி என்றும்,  ஓடிவிளையாட சகோதர-சகோதரிகளும்  என்பதெல்லாம் கனவாய், பழங்கதையாய் போய்விட்டது.

  வேலைக்குப் போகும் தாய்மார்களின் நிலைமை குறித்து வேதனைப்படுவதா, இல்லை அவர்கள் ஆயாக்களின் அரவணைப்பில் விட்டுச் செல்லும் குழந்தை
  களுக்காகக் கவலைப்படுவதா? அம்மாவையும், அப்பாவையும் எதிர்நோக்கி 
  அந்தக் குழந்தைகள் பகற்பொழுதை  கழிப்பது போன்ற சோகம் வேறு எதுவும் இருக்க முடியாது. 

  செல்லிடப்பேசியும், தொலைக்காட்சியும் வந்தபிறகு, பெற்றோர்கள் குழந்தைகளுக்காகச் செலவிடும் நேரம் மிகமிகக் குறைந்துவிட்டது.  "ஐஸ்கிரீம்' வாங்கிக் கொடுத்தும், சாக்லேட்டுகளையும் கேக்குகளையும் தந்தும் அவர்களை சமாதானப்படுத்த மேற்கொள்ளும் முயற்சிகள், அந்தக் குழந்தைகளின் உடல்நலத்தைப் பாதிப்பது குறித்த கவலை அவர்களுக்கு இல்லை. எல்லா தனிமைக் குடும்பங்களிலும் இதுதான் நிலைமை.

   விமர்சனத்துக்கு வந்திருந்தது கவிஞர் "பா.வெ.' எழுதிய "குறும்பகன்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்த ஒரு கவிதை, தனிமைக்  குடும்பங்களின் குழந்தைகள் மனநிலையைப் படம் பிடிக்கிறது.

  அலுவலகம் முடிந்து வந்த
  அம்மாவின் கைப்பேசியை
  அவசரமாக ஒளித்து வைக்கிறது,
  அந்திவரை ஆயாவிடம்
  அம்மாவைத் தேடிய குழந்தை!

  அடுத்த வாரம் சந்திப்போம்

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai