ஆண் யானையின் அன்புச் செயல்!

திருவேங்கட மலையின் இயற்கை எழிலினைப் பேசவந்த கண்ணனார் என்னும் புலவர், ஒரு பெண் யானையும் அதன் குட்டியும் பசியால் வாடுவதைக் கண்டு
ஆண் யானையின் அன்புச் செயல்!


திருவேங்கட மலையின் இயற்கை எழிலினைப் பேசவந்த கண்ணனார் என்னும் புலவர், ஒரு பெண் யானையும் அதன் குட்டியும் பசியால் வாடுவதைக் கண்டு துடித்த ஆண் யானையானது இளைய மூங்கில் முளையினைக் கொண்டு
வந்து பெண் யானைக்கும் அதன் குட்டிக்கும் ஊட்டிய காட்சியை,
""...  ...  ... ...  சாரல்

ஈன்று நாள் உலந்த மென்னடை மடப்பிடி
கன்று பசி களைஇய பைங்கண் யானை
முற்றா மூங்கில் முளை தரு பூட்டும்
வென்வேல் திரையன் வேங்கட நெடுவரை'' 
(அகம் -85)

என்று காட்டுகிறார். இனி பூதத் தாழ்வாரின் ஒரு பாசுரத்தைப் பார்ப்போம்.
"பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இருகண் இள மூங்கில் வாங்கி - அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை'   (இரண்.திரு 75)
திருமலையில் மத நீரையுடைய யானையானது தன் சிறந்த பெண்யானையின் முன்னே நின்று, இரு கணுக்களையுடைய இளைய மூங்கில் குருத்தைப் பிடுங்கி, அதை அருகிலுள்ள தேனிலே தோய்த்து, பெண் யானைக்குக் கொடுக்கும் 
இக்கருத்தையே  திருமங்கையாழ்வாரும் பாடுகிறார்.

" ...     ...    ....   நல் இமயத்து
வரை செய் மாக்களிறு இளவெதிர்
வளர்முளை அளைமிகுதேன் தோய்த்து 
பிரசவாரி தன்னிளம் பிடிக்கு அருள் செயும்
பிரிதி சென்றடை நெஞ்சே'     (பெ.திரு.  1:2:5)

 கம்பரின் காவியக் காட்சி:  ஆண் யானை தன் பெண் யானை மீதுள்ள அன்பினால் மலை முழைஞ்சிலுள்ள தேன் கூட்டிலிருந்து அதில் மொய்க்கும் வண்டை ஓட்டித் தேனைத் தன் கையால் எடுத்து, தானே தன் கையால் எடுத்துப் பருக இயலாது வருந்தும் கடுஞ்சூல் கொண்ட அப்பெண்யானையின் வாயில் பருகுமாறு கொடுக்கின்றது. (அயோத்தியா காண்டம் - சித்திரகூடப் படலம் -10) இங்கு சூலுற்ற பெண் யானைக்கு ஆண் யானை செய்யும் அன்புச் செயல் குறிக்கப்படுகிறது. "மாவும் மாக்களும் ஐயறிவினருவே' - என்னும் தொல்காப்பியக் கருத்துபடி ஐயறி உயிராகிய யானையும் தன் பெண்யானை 
மீது கொண்டுள்ள அன்புச் செயலை அறிந்து வியக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com