Enable Javscript for better performance
இந்த வாரம் கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm2

  இந்திய மொழிகளில் முதன்முதலில் அச்சுவாகனம் ஏறிய பெருமைக்குரிய மொழி தமிழ்மொழிதான் என்று கடந்த வாரம் பதிவு செய்திருந்தேன். அப்போது, தமிழில் அச்சான முதல் நூல் 1714-இல் தரங்கம்பாடியில் கிறிஸ்துவ பாதிரியார் சீகன் பால்குவால் வெளியிடப்பட்ட பைபிளின் "புதிய ஏற்பாடு' என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
   புலவர் செ.இராசு ஒரு திருத்தம் அளிக்கிறார். தரங்கம்பாடியில் "புதிய ஏற்பாடு' அச்சாவதற்குப் பல ஆண்டுகள் முன்பே தமிழ் அச்சு வாகனம் ஏறிவிட்டது என்கிற வரலாற்று உண்மையைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
   அபிசீனிய மன்னரின் விருப்பப்படி போர்ச்சுகல் மன்னர் 6.6.1556-இல் கோவாவுக்கு ஓர் அச்சு இயந்திரத்தை அனுப்புகிறார். மன்னரின் "டாக்ட்ரினா கிறிஸ்தம்' என்னும் போர்ச்சுக்கீசிய மொழி நூலை அண்டிரிக் பாதிரியார் என்பவர் "தம்பிரான் வணக்கம்' என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தார். சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட காகிதத்தில் பாரியா என்கிற பாதிரியார் உருவாக்கிய தமிழ் அச்சுக்களைப் பயன்படுத்தி, "தம்பிரான் வணக்கம்' என்கிற அந்தத் தமிழ் நூல் 20.10.1578-இல் அச்சிடப்பட்டது. 16 பக்கங்கள் கொண்ட அந்த நூல் கல்வெட்டு எழுத்து வடிவில் புள்ளியில்லாத நூலாக இருந்தது. இவையெல்லாம் புலவர் செ.இராசு அனுப்பித் தந்திருக்கும் தகவல்கள். வாழ்க தமிழ்!
   
   காரைக்கால் செல்லும் போதெல்லாம் நான் மிகவும் மதிக்கும், "உமர் நானா' என்று பாசத்துடன் எங்களால் அழைக்கப்படும் பெரியவர் எஸ்.எம். உமரை சந்திக்காமல் திரும்புவதில்லை. அகவை 90 கடந்த உமர் நானாவின் காரைக்கால் இல்லத்தில் "கலைமாமணி' மு.சாயபு மரைக்காயரை சந்தித்திருக்கிறேன்.
   நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கும் சாதனையாளர் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர், காரைக்கால் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது "சைவ இலக்கியச் சோலை' என்கிற நூல் சமய இலக்கியவாதிகளால் போற்றிப் பாராட்டப்படும் படைப்புகளில் ஒன்று.
   அவரது "காரைக்கால் அம்மையார் திருமுறைத் தெளிவுரை' புத்தக விமர்சனத்துக்கு வந்திருந்தது.
   சங்க காலம் முதல் காரைக்கால் அம்மையார் காலம் வரையில் அவரைத் தவிர வேறு எவருமே தமிழில் சிவபெருமான் மீது தனி இலக்கியம் எதுவும் பாடவில்லை. முதன்முதலில் சிவபெருமான் மீது மூன்று சிற்றிலக்கியங்களை யாத்தவர் அம்மையார்தான். அவருடைய "அற்புதத் திருவந்தாதி', "திரு இரட்டை மணிமாலை', "மூத்த திருப்பதிகங்கள்' மூன்றுமே தமிழில் அதுவரையில் எவரும் செய்யாத புதிய சிற்றிலக்கிய வடிவங்கள்.
   இந்தப் புத்தகத்தில் அந்த மூன்று பிரபந்தங்களுக்கும் எளிய உரையைப் படைத்திருக்கிறார் பேராசிரியர் மு.சாயபு மரைக்காயர். "சைவ இலக்கியச் சோலை', "ஆண்டாள் இலக்கியத் திறன்' ஆகிய இரண்டும் இவர் படைத்திருக்கும் நூல்கள். அந்த வரிசையில் இப்போது "காரைக்கால் அம்மையார் திருமுறைத் தெளிவுரை'யும் இணைகிறது.
   
   "பாரதிதாசன் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த சேவை வேர்ட்ஸ் வொர்த்தும், காலரிட்ஜும் ஆங்கில மொழிக்குச் செய்த தொண்டுக்கு ஒப்பாகும். பாரதி - புதுமை மேனாடு தந்த எண்ணங்களின் விளைவு. அவர் பழமை இடைக்காலத் தமிழகப் புதுமை. பாரதிதாசன் தமிழ்ப் பழமையாகிய சங்ககாலப் பழமையுடன் இக்காலத்தில் மலர்ந்த புதுமையை இணைத்து வெற்றி கண்டவர்'' என்பார் "பன்மொழிப் புலவர்' கா.அப்பாதுரையார்.
   பாரதிதாசனின் கவிதைப் படைப்புகள் பற்றிய திறனாய்வு நூல்கள் பல வெளிவந்துள்ளன. ஆனால், பாரதிதாசனின் உரைநடைப் படைப்புகள் பற்றி வெளிவந்த திறனாய்வு நூல்கள் மிகவும் குறைவு. அதிலும் அவருடைய நாடகங்கள் குறித்து விரிவான அளவில் ஆய்வு நிகழ்த்தப்படவில்லை. தா.வே.வீராசாமி, கூ.வ.எழிலரசு ஆகியோர் ஆய்வு செய்திருக்கிறார்கள். முனைவர் திருமதி. சரளா இராசகோபாலன் "பாரதிதாசன் நாடகங்கள் ஒரு பார்வை' எனும் நூலில், நூல் வடிவம் பெற்ற நாடகங்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.
   இப்போது டாக்டர் ச.சு.இளங்கோ நூல் வடிவம் பெற்ற நாடகங்களோடு, நூல் வடிவம் பெறாத நாடகங்களையும், அச்சு வடிவம் பெறாத நாடகங்களையும், கையேட்டுப் படிகளில் உள்ள நாடகங்களையும் ஒருங்கே ஆய்வு செய்து "பாரதிதாசன் நாடகங்கள்-ஓர் ஆய்வு' என்கிற முழுமையான ஆய்வை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.
   இந்தப் புத்தகத்தில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பாரதிதாசனின் நாடகங்கள் 47. அவற்றில் நூல் வடிவம் பெற்றவை 32. நூல் வடிவம் பெறாதவை 4. எஞ்சிய 11-ன்றும் அச்சேறாதவை. இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்புப் பகுதியில் பாரதிதாசன் படைப்புகளின் காலவரிசை, நாடகங்களின் கால வரிசை, அவற்றின் அகர வரிசை, அச்சு வடிவம் பெறாத நாடகங்கள், நூல் வடிவம் பெறாத நாடகங்கள், சில கையேட்டுப் படிகள் என்று பல முதன்மையான தரவுகள் தரப்பட்டிருக்கின்றன.
   ஆய்வு மாணவர்களுக்குப் பயன்படக்கூடிய விரிவான ஆய்வு நூல்!
   
   கவிஞர் இரா.மீனாட்சி, மகாகவி பாரதிக்குப் பிறகு வந்த அவர் உள்ளிட்ட 97 கவிஞர்களின் கவிதைகளைத் தேடி, "சிட்டுக் குருவியைப் போல...' என்கிற தலைப்பில் தொகுத்திருக்கிறார். கவிஞர் கண்ணதாசன் உள்ளிட்ட முக்கியமான கவிஞர்கள் சிலர் ஏன் விடுபட்டனர் என்று தெரியவில்லை.
   சிட்டுக் குருவியைப் போல அவர் தேடிப் பொறுக்கி எடுத்த கவிதைகள் அத்தனையும் பாரதிதாசனில் தொடங்கி சு.சுபமுகி வரை ஒன்றன்பின் ஒன்றாகக் கவிதைகளுடன் பயணிக்கும் அனுபவத்தைத் தருகின்றன. அந்தக் கவிஞர்கள் பற்றிய சிறு குறிப்பும், புகைப்படமும் இணைத்திருக்கலாமோ? நல்ல பல கவிஞர்கள் விடுபட்டிருக்கிறார்களே, இன்னொரு தொகுப்பைக் கொண்டு வருவாரோ?
   இரா.மீனாட்சி தொகுத்த "சிட்டுக் குருவியைப் போல...' என்கிற கவிதைத் தொகுப்பில் இருந்த, கவிஞர் போப்பு என்பவர் எழுதிய "நம்பிக்கை' என்கிற கவிதை இது:
   அஞ்சுக்கும் பத்துக்கும்
   குத்திக் கொலையாகும்
   வீதியில்தான்
   வண்ணக் கலவையில்
   வரைந்து போன ஓவியனுக்கு
   அனுமன் மார்பில் சிதறும்
   சில்லறைகள்!
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai