இந்த வாரம் கலாரசிகன்

அலுவலகத்தில் என்னை சந்திக்க முல்லை பதிப்பகம் மு. பழநியப்பனும், கவிஞர் ஆலந்தூராரின் மகன் முனைவர் மோ. பாட்டழகனும் வந்திருந்தனர். அவர்கள் சொன்ன செய்தி மகிழ்ச்சி அளித்தது.
இந்த வாரம் கலாரசிகன்

அலுவலகத்தில் என்னை சந்திக்க முல்லை பதிப்பகம் மு. பழநியப்பனும், கவிஞர் ஆலந்தூராரின் மகன் முனைவர் மோ. பாட்டழகனும் வந்திருந்தனர். அவர்கள் சொன்ன செய்தி மகிழ்ச்சி அளித்தது.
 பதிப்புத்துறை முன்னோடிகளில் ஒருவரான "முல்லை' முத்தையாவின் பிறந்த நூற்றாண்டு வரும் 2020, ஜூன் மாதம் வருகிறது. அதற்கான முன்னோட்ட ஏற்பாடுகளை இப்போதே முன்னெடுத்து வருகிறார் "முல்லை' பழநியப்பன். இப்போது பதிப்புத் துறையில் இருக்கும் முன்னணிப் பதிப்பகத்தார் அனைவருமே விழாக்குழுவினர் பட்டியலில் இருக்கிறார்கள். தங்களது வழிகாட்டியாக இருந்த ஒருவரது நூற்றாண்டு விழாப் பணியில் வடமிழுக்க இன்றைய பதிப்பகத்தார் அனைவரும் இணைந்திருப்பது, அந்த முன்னோடிக்குத் தரப்படும் மிகச்சிறந்த மரியாதை.
 "முல்லை' பதிப்பகம் முத்தையாவும், "சக்தி' காரியாலயம் வை.கோவிந்தனும், "தமிழ்ப் பண்ணை' சின்ன அண்ணாமலையும், தமிழ்ப் பதிப்புத் துறைக்கு ஆற்றியிருக்கும் சேவையை எழுத்தில் சுருக்கிவிட முடியாது. இப்போதுபோல வங்கிக்கடன் கிடைக்காத காலம் அவர்களுடையது. புத்தகம் வாங்கிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவு. விளம்பரப்படுத்தவோ, நூலக விற்பனை வாய்ப்போ இல்லாத காலம் அது.
 மூதறிஞர் ராஜாஜி, அறிஞர் அண்ணா, பாவேந்தர் பாரதிதாசன், கவிஞர் கண்ணதாசன் என்று "முல்லை' முத்தையாவுடன் நேரடித் தொடர்பும், அவர்மீது அன்பும் வைத்திருந்த அந்தநாள் ஆளுமைகள் ஏராளம், ஏராளம். இந்த நூற்றாண்டு விழா வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு பதிப்புத் துறையின் வளர்ச்சி குறித்தும், பதிப்புத்துறை முன்னோடிகள் குறித்தும் பள்ளி, கல்லூரிகளிலும், இலக்கிய அமைப்புகளிலும் கருத்தரங்கம் நடத்த வேண்டும். தமிழை வளர்க்கவும், பாதுகாக்கவும் அன்றைய தலை
 முறையினர் பட்ட பெரும்பாடு அப்போதுதான் இன்றைய தலைமுறையைச் சென்றடையும்.
 
 இமயமலைச் சிகரங்களின் முன்னால் நிற்கும்போதும், நயாகரா பேரருவியின் முன்னால் நிற்கும்போதும், குமரிமுனையில் முக்கூடல் கூடும் இடத்தில் சமுத்திரத்தின் விசாலத்தைப் பார்க்கும்போதும் ஏற்படும் மலைப்பை, ஒருசில ஆளுமைகளைச் சந்திக்க நேர்ந்த தருணங்களில் நான் உணர்ந்து வியந்திருக்கிறேன். விரல்விட்டு எண்ணக்கூடிய அத்தகைய ஆளுமைகளில் ஒருவர் "அருட்செல்வர்' நா.மகாலிங்கம். மணிக்கணக்காக அவர் பேசுவதை வாய்பிளந்தபடி கேட்டு கிரகித்துக்கொண்ட தருணங்களை வாழ்நாள் பயன் என்று அடிக்கடி நான் நினைவுகூர்வதுண்டு. அவர் குறித்த ஆவணப் படம் ஒன்றை எடுக்காமல் விட்டோமே என்கிற ஆதங்கமும் எனக்கு இருக்கிறது.
 அருட்செல்வர் அப்பழுக்கற்ற தேசபக்தர். அரசியல், ஆன்மிகம், அறிவியல், இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் தடம்பதித்தவர். வள்ளலாரின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உலகெங்கிலும் பரப்ப உதவியவர். பழந்தமிழ் இலக்கியங்களைப் பதிப்பித்து இளைய தலைமுறை பயன்பெறச் செய்தவர். அண்ணல் காந்தியடிகளைத் தன் தலைவராக ஏற்றுக்கொண்டு, இறுதி மூச்சுவரை அப்பழுக்கற்ற காந்தியவாதியாக வாழ்ந்து மறைந்தவர்.
 அருட்செல்வருடன் அரை நூற்றாண்டு காலம் நெருங்கிப் பழகிய "ஓம் சக்தி' இதழின் இணையாசிரியர் கவிஞர் பெ.சிதம்பரநாதன் அந்த மாமனிதருடனான தன்னுடைய பசுமையான நினைவுகளைப் புத்தகமாக்கியிருக்கிறார். எந்தவொரு பிரச்னையானாலும்
 அதுகுறித்த தெளிவான கருத்தினை மட்டுமல்லாமல், தீர்க்கமான தீர்வையும் வழங்கும் அருட்செல்வரின் சிந்தனைச் சிதறல்களைப் பதிவு செய்திருக்கிறார்.
 கவிஞர் பெ.சிதம்பரநாதன் தன்னுரையில் கூறியிருப்பதுபோல, "சுவடுகள் மறையாத பயணம்' என்கிற 85 கட்டுரைகள் கொண்ட இந்தப் புத்தகத்தில் "அரை நூற்றாண்டாகப் புதைந்து கிடந்தவற்றில் சேதாரமில்லாமல், எடுத்தவற்றை ஆதாரங்களாக அணி செய்திருக்கிறார்'.
 பல்வேறு பிரச்னைகளில் அருட்செல்வரின் பார்வை, அவர் முன்னெடுத்த முயற்சிகள், அரசுக்கும் சமுதாயத்திற்கும் அவர் வழங்கிய ஆலோசனைகள். இவை மட்டுமல்லாமல் அருட்செல்வரின் அன்புக்கும் நெருக்கத்துக்கும் உரித்தானவர்கள், அகநக நட்பாடியவர்கள், உறவினர்கள், உதவியாளர்கள் என்று அருட்செல்வர் என்கின்ற எவரெஸ்ட் சிகரத்தின் முப்பரிமாணத்தையும் புத்தகமாக்கியிருக்கிறார் கவிஞர் பெ.சிதம்பரநாதன்.
 அருட்செல்வரின் பல கருத்துகள் திடுக்கிட வைப்பவை. மற்றவர்கள் சிந்தித்தும் பார்க்காதவை. "ஓம் சக்தி' இதழில் அவர் எழுதிவந்த "எண்ணுகிறேன் எழுதுகிறேன்' கட்டுரைகளைத் தொடர்ந்து படித்தவர்களுக்கு அது தெரியும். உலகமயம், தனியார்த் துறையில் இட ஒதுக்கீடு, ராஜாஜியின் கல்வித் திட்டம், ஆசிரியர்களுக்கான ஆலோசனை, மதுவிலக்கு முதலிய எத்தனையோ பிரச்னைகளில் அருட்செல்வரால் மட்டும்தான் துணிந்து கருத்துகளை முன்வைக்க முடிந்திருக்கிறது.
 உச்சநீதிமன்றம் அயோத்தி பிரச்னையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ""பாபர் மசூதி என்பது ராமர் கோயிலாக மாற்றப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்து அருட்செல்வருக்கு இல்லை. இதேபோல, மதுராவிலுள்ள கிருஷ்ணர் கோயிலும், காசியிலுள்ள விஸ்வநாதர் கோயிலும் அமைக்கப்பட வேண்டும் என்பதும் அவருடைய விருப்பம். இவற்றை காந்திய வழியில்தான் மீட்டாக வேண்டுமே தவிர, வன்முறையால் அல்ல என்பது அவருடைய திடமான கொள்கை. சமரசப் பேச்சு வார்த்தைகள் மூலம் முஸ்லிம்களைத் திருப்திப்படுத்தி, மசூதியை வேறு இடத்தில் கட்டிக் கொடுத்து ராமர் கோயில் மீட்டெடுக்கப்பட்டிருக்குமானால், அது நாகரிகமாகவும், மதநல்லிணக்கமாகவும் இருந்திருக்கும்'' என்பது 1992, டிசம்பர் 6-இல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அருட்செல்வர் முன்வைத்த கருத்து. நேற்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பார்க்கும்போது, அருட்செல்வரின் தீர்க்கதரிசனம் பிரம்மிப்பை ஏற்படுத்துகிறது.
 அருட்செல்வர் என்கிற எவரெஸ்ட் சிகரத்தின் முப்பரிமாணத்தை "சுவடுகள் மறையாத பயணம்' படம் பிடித்துப் பதிவு செய்திருக்கிறது.
 
 த்தக விமர்சனத்திற்கு வந்திருந்தது வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் எழுதிய "மெல்லின தேசம்' என்கிற கவிதைத் தொகுப்பு. அதிலிருந்து ஒரு கவிதை.
 பெரிய மால்களை விட்டு
 வெளியே வந்தவர்கள்
 பேரம் பேசுகிறார்கள்
 ஆட்டோக்காரர்களிடம்!
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com