இன்றும் வளரும் தொன்மைத் தமிழ்!

ஞாலம் போற்றும் தமிழ், காலம் வென்ற ஓர் ஆலமரம் போன்றது. இதன் நீண்ட கிளைகளில் தோன்றிய விழுதுகள் நிலத்தில் ஊன்றித் தனிமரமாக உருவாவதைப் போல்,
இன்றும் வளரும் தொன்மைத் தமிழ்!

ஞாலம் போற்றும் தமிழ், காலம் வென்ற ஓர் ஆலமரம் போன்றது. இதன் நீண்ட கிளைகளில் தோன்றிய விழுதுகள் நிலத்தில் ஊன்றித் தனிமரமாக உருவாவதைப் போல், தமிழிலிருந்து கன்னடம், தெலுங்கு, மலையாளம், துளு முதலிய மொழிகள் பிறந்தன. தமிழில் காலம்தோறும் புதுப்புது சொற்கள் தோன்றின; தோன்றிக் கொண்டேயிருக்கின்றன.
 குதிரை, தமிழ் மண்ணுக்கு உரிய விலங்கு அல்ல. அரேபியாவிலிருந்து இங்கு வந்த அதற்குத் தமிழ்ச் சொல் இல்லை. அது குதித்து ஓடுவதைக் கண்டு அதற்குக் "குதிரை' என்ற தமிழ்ச்சொல் பிறந்தது. அதைப் போல் அயலகத்து மற்றொரு விலங்குக்கு ஒட்டிய அகம் மார்பு என்பதன் அடிப்படையில் "ஒட்டகம்' என்ற தமிழ்ச் சொல் எழுந்தது.
 சமயச் சான்றோரும் புதுச் சொல்லாக்கம் தந்து தமிழை வளர்த்தார்கள். சொல்லால் பரிந்துரை (ரெகமண்ட்) செய்யும் முறைக்குச் "சொற்றுணை' என்று திருநாவுக்கரசர் புதுச் சொல் வழங்கினார்.
 குருதி (இரத்தம், அரத்தம்) என்ற சொல்லுக்கு, "செம்பால்' என்றும், கிரியேட்டர் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு "ஆக்கன்' என்றும், "லேட்' என்பதற்குப் "பிற்பாடு' என்றும் வைணவப் பெரியோர் புதுச் சொற்களைத் தமிழுக்கு முன்பே நன்கொடை அளித்துள்ளனர்.
 "மருதாணி' என்பதற்கு "இடு சிவப்பு' என்றும், "சகஜம்' என்பதற்கு "உடன் வந்தி' என்றும் "ஆக்ஜம்' என்பதற்கு "வந்தேறி' என்றும் புதிய சொற்களை உருவாக்கினார்கள் என்கிறார் முனைவர் தெ. ஞானசுந்தரம்.
 சேக்கிழாரும் பல புதுச் சொற்களை உருவாக்கித் தமிழுக்கு வளம் சேர்த்துள்ளார். "பைபாஸ்' என்ற இன்றைய ஆங்கிலச் சொல்லுக்கு அவர் "மருங்குவழி' என்று அன்றே சொன்னார். "ஷிப்ட்' என்பதை "பணிமாறல்' என்றார். "வெல்கம்' என்பதை "வரவேற்பு' என்று கூறினார்.
 உருளைக்கிழங்கு தமிழ் மண்ணுக்கு உரிய உண் பொருள் அல்ல. இது அயலகத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்தது. இது ஓரளவு உருளைக்கிழங்கு என்ற தமிழ்ப் பெயரைப் பெற்றது. புகையை வெளிப்படுத்தும் மற்றொரு பொருளுக்குப் புகையிலை என்ற புதுச்சொல் எழுந்தது. மிளகு போல் காரமாக இருந்த சிவப்புக் காய்க்கு "மிளகுகாய்' என்ற சொல் சூட்டப்பட்டது. நாளடைவில் மிளகு காய் "மிளகாய்' என்று சுருங்கிவிட்டது.
 தொன்மைத் தமிழில் இன்றும் புதிய சொற்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. நூல்கள் சேமித்து வைத்துப் பாதுகாக்கப்படும் இடம் "நூல் அகம்' எனப்பட்டது. இந்த இரு சொற்களும் இணைந்து "நூலகம்' என்ற ஒரு சொல் உருவானது. இதே முறையையொட்டி உணவகம், செயலகம், பயிலகம் முதலிய புதுச் சொல்லாக்கம் அமைந்தது. "கல்ச்சர்' என்ற சொல் "பண்பாடு' என்று குறிக்கப்பட்டது.
 நாவல் தமிழில் புதினம் ஆனது. நெகிழி, செயலி, கணினி, முகநூல், இணையம் முதலிய அறிவியல் சார்ந்த புதுச் சொற்களும் தமிழில் தோன்றின. பணவிடை, தூதஞ்சல், தொடர்வண்டி, மிதிவண்டி முதலிய புதுச் சொற்களும் தமிழில் பிறந்தன. அறைகலன், அடுமனை முதலிய புதுச் சொற்களும் அண்மையில் உருவாயின.
 "புதியன புகுதல் வழுவல' (குற்றமில்லை) என்று நன்னூலார் சொன்னார். இது தமிழில் நடைபெற்று வருகிறது. பிறமொழிக் கலப்பு இல்லாத நிலையில் புதுச் சொற்களை உருவாக்கிக்கொண்டே இருந்தால் தமிழ்மொழி என்றும் வாழும். அயல்மொழிக் கலப்பும் புதுச் சொல்லாக்கம் இல்லா நிலையும் அமைந்துவிட்டால், ஒரு மொழி மங்கி மறைந்தே போகும்.
 - முனைவர் மலையமான்
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com