Enable Javscript for better performance
இந்த வார கலாரசிகன்- Dinamani

சுடச்சுட

  
  tm4

  அவர் எழுதிப் பதிப்பித்த  பாரதியார் தொடர்பான நூல்களையும், பாரதியாரின் படைப்புகளைக் கால வரிசைப்படுத்திய  சீனி. விசுவநாதனின் தொகுதிகளையும் எட்டயபுரம் மணிமண்டபத்து நூலகத்துக்கு வழங்குவதாக நல்லி குப்புசாமி செட்டியார் தெரிவித்திருந்தார். அதை நினைவுபடுத்தி செட்டியார் வழங்கவிருக்கும் நூல்களின் பட்டியலை சென்ற ஆண்டு "தினமணி'யின் மகாகவி பாரதியார் விருது பெற்ற பெரியவர் சீனி.விசுவநாதன் அனுப்பித் தந்திருக்கிறார். 

  அனைத்திந்திய தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் அடுத்த மாதம் எட்டயபுரத்தில் பாரதி விழா கொண்டாட்டத்தில் "தினமணி'யுடன் இணைந்து செயல்படுவது குறித்து கலந்து ஆலோசிக்க வருவதாக அதன் தலைவர் கோ. பெரியண்ணன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.  இந்த ஆண்டு மகாகவி பாரதியார் விருது யாருக்கு வழங்குவது என்பது குறித்த கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. 

  டிசம்பர் 11-ஆம் தேதி வழக்கம் போல எட்டயபுரத்தில்  கூடுகிறோம். மகாகவி பாரதியாரின் இல்லத்திலிருந்து ஊர்வலமாகச் செல்ல இருக்கிறோம். தமிழகத்திலுள்ள எல்லா இலக்கிய அமைப்புகளும், ஆர்வலர்களும், பாரதி அன்பர்களும் இப்போதே அதற்கான பயண ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டுகிறேன். கவிஞர்களும், எழுத்தாளர்களும் தமிழுக்குப் புதுப்பாதையிட்ட நவயுகக் கவிஞரை அவர் பிறந்த மண்ணில் வாழ்த்துவதைக் கடமையாகக் கொள்ள வேண்டும் என்கிற என்னுடைய கோரிக்கையை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன்.

  ""நான் என் மகனுடன் பாரதி விழாவுக்கு வரவுள்ளேன்'' என்று சீனி.விசுவநாதன் தெரிவித்துவிட்டார். இதேபோல இன்னும் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். எட்டயபுரத்தில் "தினமணி' மகாகவி பாரதியார் விருது விழாவில் அனைவரையும் சந்திக்க டிசம்பர் 11-ஆம் தேதியை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

  சென்ற ஆண்டு எட்டயபுரம் வந்தபோது அளித்த வாக்குறுதியை நினைவில் கொண்டு, மணிமண்டப நூலகத்துக்குப் புத்தகங்களை வழங்க விழையும் நல்லி குப்புசாமி செட்டியார் அகவை எண்பதை எட்டியிருக்கிறார். ஒவ்வோராண்டும் தனது பிறந்த நாளை ஆடம்பரமாகக் கொண்டாடாமல் புத்தகங்களை வெளியிட்டுக் கொண்டாடும் அவரது இயல்பை எண்ணி வியந்திருக்கிறேன்.  அவர் எழுதிய புத்தகமோ அல்லது அவரால் வெளியிடப்படும் வேறு ஒருவர் எழுதிய புத்தகமோ பிறந்த நாளன்று வெளியிடப்படும். அந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் சென்னை நகரப் பிரமுகர்கள் மட்டுமல்லாமல், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இசைக்கலைஞர்கள் என்று பெருந்திரளாகப் பலரும் கலந்து கொள்வார்கள்.

  இந்த ஆண்டும் தனது பிறந்த நாளையொட்டி நல்லி குப்புசாமி செட்டியார் வெளியிட்டிருக்கும் புத்தகம் "வியாசர் அறம்'. புதிய கோணத்தில் அவருக்கே உரித்தான பாணியில்  மகாபாரதத்தைப் புதிய பார்வை பார்த்திருக்கிறார் 
  தொழிலதிபர் நல்லி. 

  பிரம்மாண்டத்திலும் பிரம்மாண்டமான பாரதம் என்பது உலக இதிகாசங்கள் அனைத்திலும் மாளப்பெரிது. உலகில் இதுநாள் வரை எழுதப்பட்ட மிகப்பெரிய கவிதை நூல் மகாபாரதம்தான். இரண்டு லட்சம் வரிகளுடனான  ஒரு லட்சம் ஸ்லோகங்கள் உடைய மகாபாரதத்தில் 18 லட்சம் வார்த்தைகள் உள்ளன. கிரேக்க இதிகாசங்களான ஹோமரின் இலியட், ஒடிஸி இரண்டும் சேர்ந்ததை
  விடப் பத்து மடங்கு நீளம் கொண்ட காவியம் மகாபாரதம்.

  இராமாயணத்தைவிட மகாபாரதம் நான்கு மடங்கு பெரிது.
  மகாபாரதம் பல கதைகளையும், கிளைக் கதைகளையும் உள்ளடக்கியது. தேனில் குழைத்து மருந்தைத் தருவதுபோல, பகவத்கீதை, விதுரநீதி, தருமபுத்திரனுக்கு பீஷ்மர் உபதேசித்த தர்மோபதேசம் என்கிற மூன்றையும் உபதேசிப்பதற்காக எழுதப்பட்டது அல்லது தொகுக்கப்பட்டது அல்லது புனையப்பட்டது மகாபாரதம் என்கிற மகாகாவியம். மகாபாரதத்தில் காணப்படும் அத்தனை கிளைக் கதைகளுக்கும் பின்னால் ஏதாவது ஒரு தத்துவமோ, நீதியோ மறைபொருளாகக் காணப்படும். 

  மகாபாரதத்திலுள்ள 60 முக்கியமான கதைகளைத் தேர்ந்தெடுத்து அந்தக் கதையின் முடிவில் அது எடுத்துரைக்கும் நீதி சாரத்தை "அறம்' என்ற பெயரில் பதிவு செய்திருக்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார். அத்துடன் நிற்கவில்லை "வியாசர் அறம்'. அந்தக் கதைக்கும் நீதிக்கும்  பொருத்தமான திருக்குறளையும் தேர்ந்தெடுத்து வழங்கியிருப்பதுதான் இதுவரை வெளிவந்துள்ள மகாபாரதம் சார்ந்த எல்லா நூல்களிலிருந்தும் "வியாசர் அறம்' என்கிற இந்த நூலை வித்தியாசப்படுத்துகிறது.  

  ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி கே.வி.எஸ்.கோபாலகிருஷ்ணன் தனது அணிந்துரையில் குறிப்பிட்டிருப்பது போல, பிறர் அறிவுரைகளாகச் சொன்னவற்றை கதைகளாகச் சொல்கிறார் வியாசர். சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்கிற திறம் படைத்த நூலாசிரியர் நல்லி குப்புசாமி செட்டியார் அதை பாமரருக்கும் புரியும் விதத்தில் குறள் கூறி விளக்க முற்பட்டிருக்கிறார். 

  ""வியாசம்' என்றால் எழுதப்படுவது. "வியாசர்' என்றால் எழுதுபவர்.  எல்லாம் அறிந்த ஒரு தகவல் களஞ்சியமாக விளங்கினார் வியாசர் என்பதை மகாபாரதத்தைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. அரசியல், நிர்வாகவியல் என்று  வியாச பாரதத்தில் சொல்லப்படாத கருத்துக்களே இல்லை'' என்கிறார் நல்லி குப்புசாமி செட்டியார். கடந்த ஆண்டு தனது பிறந்த நாளின்போது "விதுர நீதியில் நிர்வாகம்' என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த ஆண்டு "வியாசர் அறம்' வெளிவந்திருக்கிறது. 

  மகாபாரதக் கதைகளுக்குக் குறள் வழி விளக்கம் அளிக்க முற்பட்டிருப்பது இதுவரை யாருமே முயற்சி செய்யாத புதிய உத்தி.

  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த பிள்ளைவயல் கிராமத்தில் பிறந்து, வளர்ந்து இப்போது சிங்கப்பூரில் பணி புரிகிறார் கவிஞர் யாழிசை மணிவண்ணன். தேவதைகள் தூவும் மழை, கூடுதலாய் ஒரு நுழைவுச் சீட்டு என்கிற இரண்டு கவிதைத் தொகுப்புகளைத் தொடர்ந்து இப்போது வெளிவந்திருக்கும் அவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பான "பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்' விமர்சனத்திற்கு வந்திருந்தது. அந்தத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதை:ழகரப்பிழை
  கேட்க இனிக்கிறது
  மழலை மொழியில்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai