இந்த வாரம் கலாரசிகன்

குமரி மாவட்டம் மணிக்கட்டிப் பொட்டல் என்கிற கிராமத்தில் இருந்தபடி தனது எழுத்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர்
இந்த வாரம் கலாரசிகன்


குமரி மாவட்டம் மணிக்கட்டிப் பொட்டல் என்கிற கிராமத்தில் இருந்தபடி தனது எழுத்தால் ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் சாகித்ய அகாதெமி  விருதாளர் பொன்னீலன். நாகர்கோவிலில் பொன்னீலனின் அகவை எண்பது விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அவருடைய மாணவர்கள், வாசகர்கள், ரசிகர்கள், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தினர், இயக்கத் தோழர்கள் என்று நூற்றுக்கணக்கானோர் அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க நாகர்கோவிலில் கடந்த வாரம் கூடினார்கள். அந்த நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டுமென்று எனக்கும் ஆசையாக இருந்தது. 
முடியாமல் போனதில் வருத்தமுண்டு.
வலிமையான எழுத்துக்குச் சொந்தக்காரரான பொன்னீலன் என்கிற எளிமையான மனிதர் நம்மில் ஏற்படுத்தும் பிரமிப்பை வார்த்தையில் விவரிக்க முடியாது. அவரது மணிக்கட்டிப் பொட்டல்வீட்டுத் திண்ணையில் அமர்ந்தபடி,  பேராசிரியர் அ.சீ.ரா.விடம் அவர் கவிதை கேட்டது போல, பேராசிரியர்  நா.வா.விடம் தனது "கரிசல்' நாவலை அவர் படித்துக் காட்டியதைப்போல,  தி.க.சி.யிடம்   அவர் இலக்கிய அளவளாவல்கள் நடத்தியதுபோல ஓர் அனுபவத்தைப் பெறவேண்டும் என்கிற எனது நீண்ட நாள் ஆவல் எப்போது நனவாகப் போகிறதோ தெரியவில்லை.
"கிழக்கு வாசல் உதயம்' மாத இதழில் தொடர்ந்து ஏறத்தாழ அறுபது மாதங்கள் (அடேயப்பா... ஐந்தாண்டுகள்!) வெளிவந்தது "என்னைச் செதுக்கியவர்கள்' என்கிற தலைப்பில் எழுத்தாளர் பொன்னீலன் எழுதிய தொடர். தன்னுடைய பிள்ளைப் பிராயத்தில் தொடங்கி, தான் வளர்ந்த விதத்தையும், தனது குடும்பத்தின் வரலாற்றையும்  பதிவு செய்து நகர்ந்து, படிப்படியாகப் பள்ளி மாணவனாக, கல்லூரி மாணவனாக, அரசுத் துறையில் குமாஸ்தாவாக, பள்ளி ஆசிரியராக, கல்வித்துறை அதிகாரியாக, எழுத்தாளராக என்று தனது வளர்ச்சியை அனுபவங்கள் மூலமும், சம்பவங்கள் மூலமும் அந்தத் தொடரில்  பதிவு செய்திருந்தார். இப்போது அகவை எண்பது காணும் பொன்னீலனின் அந்தத் தன் வரலாறு  "என்னைச் செதுக்கியவர்கள்' என்கிற பெயரில் வெளிவந்திருக்கிறது. 
இடதுசாரி சிந்தனாவாதியான எழுத்தாளர் பொன்னீலன் "தவத்திரு குன்றக்குடி அடிகளார் } தமிழகத்தின் ஆன்மிக வழிகாட்டி' என்கிற நூலை துணிந்து எழுதியதற்காக இயக்கத் தோழர்களின்  விமர்சனங்களை எதிர்கொண்டார். அதற்கு அவர் தந்த விளக்கம் அனைவரையும் வாயடைக்க வைத்துவிட்டது.  
தோழர் ஜீவாவை சந்தித்தது, அவரால் கவரப்பட்டது; எட்டயபுரம் பாரதி விழாவில் தோழர் நல்லகண்ணு அறிமுகமானது; ஜெயகாந்தன், தொ.மு.சி.ரகுநாதன், தி.க.சி., பேராசிரியர் தோத்தாத்ரி  ஆகியோருடனான தனது நட்பு என்று தன்னுடைய அறுபது ஆண்டுக்கும் அதிகமான அரசியல், இலக்கிய, சமுதாயப் பயணத்தில் சந்தித்த பலர் குறித்தும்  பதிவு செய்திருக்கிறார் பொன்னீலன். 
"என்னைச் செதுக்கியவர்கள்' என்று எழுத்தாளர் பொன்னீலனால் அடையாளம் காட்டப்படுபவர்கள் பலர்.  அதேபோல அவரால் செதுக்கப்பட்ட பலர் குறித்தும் அவரது "தன் வரலாறு' பதிவு செய்யத் தவறவில்லை. 


கடந்த ஞாயிற்றுக்கிழமை கும்பகோணத்தில் "துக்ளக்' வார 
இதழின் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சிகளின் தொடக்க விழா நடந்தது. துக்ளக்கின் முதல் இதழிலிருந்து தொடர்ந்து படித்து வரும் வாசகன் நான். துக்ளக்கின் வாசகனாகத் தொடங்கி, அந்த இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதும் வாய்ப்பையும் பெற்றவன். 
துக்ளக் ஆண்டு விழாவில் அந்த இதழில் பணிபுரிபவர்கள், பங்களித்தவர்கள் என்று அனைவரையும் மேடையில் அறிமுகப்படுத்துவது ஆசிரியர் "சோ'வின் வழக்கம். எனக்கு மட்டும் அந்த வாய்ப்பு கிட்டவேயில்லை. ஆண்டு விழா நிகழ்வுகளில் பெருந்திரளாகக் கூடும் வாசகர்களில் ஒருவனாகக் கலந்து கொண்டிருக்கிறேனே தவிர, மேடையில் ஏறியதில்லை. முதன்முறையாக துக்ளக் மேடையில் ஏறும் வாய்ப்பு கிடைத்தது.
"துக்ளக்' பொன்விழா நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரையாற்றியது மட்டுமல்லாமல்,  அங்கே வெளியிடப்பட்ட  ஆசிரியர் "சோ' 
எழுதிய "இவர்கள் சொல்கிறார்கள்' என்கிற புத்தகத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் துக்ளக் இதழில் வெளிவந்த பல்வேறு கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கிறார்கள். 
"இவர்கள் சொல்கிறார்கள்' என்கிற தொகுப்பில் ஆசிரியர் "சோ' எழுதியது மட்டுமல்லாமல், துக்ளக்கில் வெளிவந்த நேர்முகங்கள், கலந்துரையாடல்கள், கட்டுரைகள் என்று  பல முக்கியமான மாநில, தேசியப் பிரச்னைகள் அலசப்பட்டிருக்கின்றன. இன்றைக்குப் படித்தாலும் சுவாரசியமாக மட்டுமல்லாமல் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் அமைந்திருக்கும் அந்தக் கட்டுரைகள், அரசியல் நிலைமையில் பெரிய மாற்றமில்லாமல் இருப்பதை வெளிப்படுத்துகின்றன. 
"சட்டசபை கட்சித் தலைவர்கள் பேசுகிறார்கள்' என்கிற தலைப்பில்  1977}இல்  அமைச்சர் ஜி.ஆர்.எட்மண்ட் எதிர்க்கட்சித் தலைவர் மு.கருணாநிதி, காங்கிரஸ் தலைவர் ஏ.ஆர்.மாரிமுத்து, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் என். சங்கரய்யா,  ஜனதா கட்சித் தலைவர்  ஏ.ஜேம்ஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ். அழகிரிசாமி ஆகியோரின்  உரைகள் நம்மை நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்கின்றன.
"நடைமுறையில் நமது ஆட்சி' என்கிற தலைப்பில் முன்னாள் முதல்வர் எம்.பக்தவத்சலத்துடனான ஆசிரியர் சோவின் பேட்டி ஐந்து  கட்டுரைகளாக வெளியிடப்பட்டிருக்கிறது. இதைத்  தனியான சிறு புத்தகமாகப் பதிப்பித்து எல்லா அரசியல்வாதிகளுக்கும் வழங்க வேண்டும். ஆட்சிமுறை பற்றிய காட்சிப்பதிவுபோல அமைந்திருக்கிறது அந்தப் பேட்டி.
காலப் பெட்டகம் என்பார்களே, அது இதுதானோ?


இயக்குநர் பாரதிராஜாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் ராஜா சந்திரசேகர். சந்தோஷ் சிவன் உள்ளிட்ட பல முன்னணி இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு வசனம், பாடல்கள் எழுதியவர். தொடர்ந்து கவிஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்.
கைக்குள் பிரபஞ்சம், என்னோடு நான், ஒற்றைக் கனவும் அதை விடாத நானும், அனுபவ சித்தனின் குறிப்புகள், நினைவுகளின் நகரம், மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் என்று ஆறு கவிதைத் தொகுப்புகளைப் படைத்திருக்கும் ராஜா சந்திரசேகரின் ஏழாவது கவிதைத் தொகுப்பு,  "மிதக்கும் யானை'. இது விமர்சனத்திற்கு வந்திருந்தது. இந்தத் தொகுப்பில் மொத்தம் 266 கவிதைகள். அதில் இரண்டாவது கவிதை இது:


தாத்தா கதையில்
யாரும் இறந்ததே இல்லை
தாத்தா இறந்த பிறகு
ஒவ்வொரு கதையாய்
இறந்து போயின!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com