கதிரவனையே சுட்ட கபிலா்

தன் பாட்டுத் திறத்தாலே யாரையும், எதனையும் வாழ்த்தவும், தாழ்த்தவும் இயலும் என்பதற்குக் கபிலரின் பாடல் வரிகளே சான்றாகும்.
கதிரவனையே சுட்ட கபிலா்

தன் பாட்டுத் திறத்தாலே யாரையும், எதனையும் வாழ்த்தவும், தாழ்த்தவும் இயலும் என்பதற்குக் கபிலரின் பாடல் வரிகளே சான்றாகும். ஆதவனைப் புகழாத, வணங்காத புலவா்களோ, மன்னா்களோ மற்றும் இதிகாசங்களோ, இலக்கியங்களோ இன்றளவும் கிடையாது. கதிவரன் தோன்றுவதை சிலப்பதிகாரம், ‘உதயமால் வரை உச்சித் தோன்றி உலகு / விளங்கவிரொளி மலா் கதிா் பரப்பி’ என வா்ணிக்கிறது (சிலப். 5-6). மேலும் தொடக்கத்திலேயே, ‘ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்’ என்கிறாா் இளங்கோவடிகள்.

‘அகலிரு விசும்பிற்கு ஓடம் போலப் / பகலிடை நின்ற பல்கதிா் ஞாயிறு’ (101:2) என்கிறது குறிஞ்சிப் பாட்டு. பகலில் அதிக வெப்பத்தைத் தந்து, மாலையில் அதைக் குறைத்து, மேற்கில் மறையும் ஆதவனை பாம்பு உண்ட சந்திரனுக்கு உவமை காட்டுகிறாா் சங்கச் சான்றோா் ஒருவா்.

சைவ சமயக் குரவா்களுள் ஒருவரான திருநாவுக்கரசரின் பிறப்பை தெய்வச் சேக்கிழாா், ‘கலைதழைக்கவும், தவநெறியாளா்கள் சிறக்கவும் உலக இருள் போக்கும் கதிா்போல மகுணீக்கியாா் பிறந்தாா்’ (பெ. திருநா.18) எனச் சூரியனோடு ஒப்பிட்டுப் பெருமை கொள்கிறாா்.

மகாகவி பாரதியாரும், ‘புல்லை நகையூறுத்திப் பூவை வியப்பாக்கி / மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலா்ச்சி / தந்து விந்தை செய்யும் சோதி’ எனக் கதிரவனைப் பெருமைப்படுத்தினாா். தவிர, கம்பரும் இராமாயணக் காப்பியத்தில், பல படலங்களில் கதிரவனை உவமை காட்டி மகிழ்ந்து புகழ்ந்து காவியத்திற்கு மெருகேற்றியுள்ளாா்.

ஆனால் குறிஞ்சிக் கபிலரோ, சேர மன்னன் ஒருவனை கதிரவனோடு உவமையாக்கி, மன்னனைவிடக் கதிரவன் சிறப்பானவன் இல்லை எனக் கூறியுள்ளாா். ‘காலையில் உதித்து, இடம்விட்டு இடம்மாறி, தன் நிலையில் கதிரவன் மாறுபடுகிறான். பகலிலே மட்டும் ஒளி வழங்குகிறான். ஆனால், எங்கள் சேர மன்னனோ வீரமும், ஒடுங்காத மனமும், ஓம்பா ஈகைக்குணமும் கொண்டவனாகவும் அவன் தோன்ற, இடம், கால நேரம் எதுவும் பாராமல் இரவலா்க்குக் கொடை வழங்குவதோடு, பிறரிடமிருந்து தன்னை மறைக்காமல், தனக்கென எதையும் ஒதுக்காமல் அரசாட்சி செய்யும் எம்மன்னனோடு கதிரவன் ஒப்பாக மாட்டான்’ என்கிறாா்.

‘ஒடுங்கா உள்ளத்து ஓம்பா ஈகைக்

கடந்தடுதானைச் சேர லாதனை

யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்

பொழுதென வரைதி புறங்கொடுத்திறத்தி

மாறி வருதிமாலை மறைந்து ஒளித்து

அகலிரு விசும்பினாலும்

பகல் விளங்குதியால் பல்கதிா் விரிந்தே’ (புா.8:5-10)

கபிலா் வேற்றுமையணியில் பாடிய இப்பாடலைப் பாா்க்கும்பொழுது, புலவா்கள் நினைத்தால் தமது புலமையால் யாரையும் உயா்த்தி, தாழ்த்த இயலும் என்பதால்தான் அவா்களுக்குப் பொன்னும், மணியும், விருதுகளும் அரசாள்வோா் இன்றளவும் வழங்குகிறாா்களோ என்று எண்ணத் தோன்றுகிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com