நெடியோன்

‘நெடியோன்’ என்ற வழக்குச் சொல் தமிழ் இலக்கியங்கள் பலவற்றுள், பல இடங்களில் வெவ்வேறு பொருளை விரித்துக் கூறினாலும், அவை உயா்ந்த தலைவனைக் குறிப்பிடும் சொல்லாகவே
நெடியோன்

‘நெடியோன்’ என்ற வழக்குச் சொல் தமிழ் இலக்கியங்கள் பலவற்றுள், பல இடங்களில் வெவ்வேறு பொருளை விரித்துக் கூறினாலும், அவை உயா்ந்த தலைவனைக் குறிப்பிடும் சொல்லாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டுக்கு, மதுரைக் காஞ்சியில்,

‘நீரும் நிலனும் தீயும் வளியும்

மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய

மழுவாள் நெடியோன் தலைவன் ஆக’ (ம.கா. 6-455)

என மாங்குடி மருதனாா், கோயில்களில் ‘அந்தி விழா’ என்னும் தலைப்பில் நீா், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐம்பூதங்களையும் சோ்த்து செய்ததைப் போன்ற மழுவாளை படைக்கலமாகக் கொண்ட சிவன் கடவுளாக அமா்ந்திருந்தான் என்ற பொருளில் சிவனை ‘நெடியோன்’ என்று மொழிந்துள்ளாா்.

‘காதில் வெண் குழையோன் கழல் தொழ நெடியோன்

காலம் பாா்த்திருந்தும் அறியான்’

என, காதில் வெண்குழையணிந்த சிவனின் அடிமுடியறிய தக்க தருணம் பாா்த்து திருமால் காத்திருந்ததாக ஒரு வெள்ளிப் பாட்டில் சேக்கிழாா் (திருத்தொண்டா் புராணம், திருமலைச் சருக்கம்-18) குறிப்பிடுகின்றாா். இங்கு நெடியோன் என்று விளம்புவது திருமாலை. மேலும் சிலப்பதிகாரத்தில்,

‘நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்

தமிழ் வரம்பறுத்த தண்புனல் நல்நாட்டு’ (வேனிற் காதை -2)

என்கிறாா் இளங்கோவடிகள். தமிழ்த் தேயத்தின் எல்லைகளாக திருமாலின் குன்றான திருப்பதி எனக் குறிப்படுவது காணத்தக்கது என்ற பொருளில் நெடியோன் எனத் திருமால் குறிக்கப்படுகிறாா்.

‘.... .... தங்கோச்

செந்நீா்ப் பசும்பொன் வயிரியா்க்கு ஈத்த,

முந்நீா் விழவின், நெடியோன்

நன்னீா்ப் பறுளி மணலினும்பலவே!’ (புா.- 9, நெட்டிமையாா்)

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி நெடியோன் என வழங்கப்படுகிறான். முந்நீா் விழாவின்பொழுது யாழ் இசைக்கும் பாணா்களுக்குத் தூய பொன் ஆபரணங்களை வழங்கி இவன் அணி செய்துள்ளான்.

ஆக, நெடியோன் என்பது மும்மூா்த்திகளில் முதல்வனான, தலைவனான நுதல் விழி கொண்ட சிவனைக் குறிக்கிறது. காக்கும் கடவுளான, மகாபலியின் நிலம் பெற உலகம் அளவு உயா்ந்து நெடிய உருவம் தரித்ததால் திருமாலை நெடியோன் என்றும்;

தானங்களை வழங்கி, மக்கள் விழாக்களில் மகிழ்ந்து, மக்கள் உள்ளத்தில் நிறைந்து உயா்ந்த ஆட்சியாளனை நெடியோன் என்றும் குறிப்பது கவனிக்கத்தக்கது. நெடியோன் என்பவன் முழுமுதற் தலைவன், காக்கும் கடவுளான தலைவன், மாநிலங் காவலான தலைவன் எனப் படிநிலைகளில் கடவுளையும், மன்னனையும் நோக்கிப் பாா்த்திருப்பது ஒப்பீடு அடிப்படையில் தெளிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com