சக்திப் பித்தரான பாரதி சித்தர்!

"தீர்க்கதரிசி, ஞானச் சித்தர், ஜீவன் முக்தர்' என்றெல்லாம் சொல்வதற்குரிய தகுதிகள் அனைத்தும் படைத்தவர் மகாகவி பாரதியார். அவரே ஓரிடத்தில் தன்னை "
சக்திப் பித்தரான பாரதி சித்தர்!

"தீர்க்கதரிசி, ஞானச் சித்தர், ஜீவன் முக்தர்' என்றெல்லாம் சொல்வதற்குரிய தகுதிகள் அனைத்தும் படைத்தவர் மகாகவி பாரதியார். அவரே ஓரிடத்தில் தன்னை "சித்தர்' (யானும் வந்தேன் ஒரு சித்தன் - பாரதி அறுபத்தாறு, பராசக்தி துதி) என்று கூறிக்கொள்கிறார்.
 அவருடைய படைப்புகளில் சங்க இலக்கியம், சமய இலக்கியம், சிறுவர் இலக்கியம், மொழிபெயர்ப்பு இலக்கியம், ஒப்பீட்டு இலக்கியம், படைப்பிலக்கியம் என எல்லாம் இருக்கும். அவருடைய பாடல்களில், தேசியம், தெய்வீகம், நாட்டு விடுதலை, அன்பு, அறிவு, காதல், பக்தி, புரட்சி, கருணை, இரக்கம், தயவு, ஜாதியம், மரபுக்கவிதை, புதுக்கவிதை, சிற்றிலக்கியம், இலக்கணம், ஸ்தோத்திரம், வழிபாடு, தியானம், யோகம், திருப்புகழ், வேள்வி, இசை, கலைகள், கூத்து, வாழ்த்து, விண்ணப்பம், நாட்டு விடுதலை, பெண் விடுதலை, சித்தாந்தம், வேதாந்தம், அரசியல், இதழியல் என அவர் பாடாத பொருளே இல்லை.
 நூறாண்டு காலம் வாழ ஆசைப்பட்டு, வரம் கேட்ட அவர் குறுகிய ஆயுளைப் பெற்றாலும், அக்குறுகிய காலத்துக்குள்ளேயே உலகிலுள்ள அனைத்தையும் பாடி, தனது பிறவிப் பயனை நிறைவேற்றிக் கொண்டுவிட்டார். அவரது சீரிய பக்திக்கு மகாசக்தி அத்தகைய வரத்தை அவருக்கு வழங்கியிருக்கிறாள்.
 "பக்திப் பாடல்கள்' பகுதியில் இருப்பதில் முக்கால் பகுதி சக்தி பாமாலைகள்தாம். மேலும், "யோக சித்தி' பகுதியில் அவர் சக்தியிடம் கேட்கும் வரங்களைப் பார்த்தால் வியப்பு மேலிடும்! "பரசிவ வெள்ளம்', "ஆத்ம ஜெயம்' என அவர் பாடிச்செல்லும் பகுதிகளில் எல்லாம் சக்தியை, பராசக்தியைத்தான் போற்றியுள்ளார்.
 ""பக்தியினாலே இந்தப் பாரினில் எய்திடும் மேன்மைகள் கேளடி'' என்று பக்தியால் சித்தம் தெளியும், வித்தை வளரும், ஆசை அழியும், காமம் அழியும், வீரம் வளரும், சோம்பல் அழியும், உடல் சொன்னபடி நடக்கும், கல்வி வளரும், இன்பம் சேரும், சந்ததி வாழும் என மிக நீண்டதொரு பட்டியலிட்ட அவரது "பக்திப் பாடல்க'ளில் மற்ற தெய்வங்களைக் காட்டிலும் சக்தியைத்தான் அதிகம் பாடிப் புகழ்ந்திருப்பார்; அவளிடம் அளப்பரிய அன்பு செலுத்தியிருப்பார்; வழிபாடு நிகழ்த்தி, விண்ணப்பம் வைத்து, வரமும் கேட்டிருப்பார்.
 உயிரின் இயல்பு அன்பு; இறைவனின் இயல்பு அருள். அருளை நாடுதலே அன்புக்குச் சிறப்பு. அதனால்தான் அடியார்கள் பலரும் இறைவனிடம் தூய அன்பு செய்து அவன் அருளைப் பெற்றார்கள். சைவ-வைணவ அருளாளர்கள் பலரும் நாயக-நாயகி (அகப்பாடல்கள்) பாவத்தில் பல பாடல்களைப் பாடி, உள்ளம் உருகி இறைவனோடு இரண்டறக் கலந்தனர். இதை "மதுர பாவம்' என்று வைணவம் கூறும்.
 மகாகவி பாரதியும் இந்த மதுர பாவத்தில் பாடியுள்ளார். கண்ணனையும், கண்ணம்மாவையும் தன் காதலன், காதலி என்று பாடிக்களித்து, ராதையின் காதலையும் பாடிக் கசிந்துருகியவர், "மூன்று காதல்' என்கிற தலைப்பில், சரஸ்வதி காதலை மனோஹரி ராகத்திலும், லக்ஷ்மி காதலை ஸ்ரீராகத்திலும், காளி காதலை புன்னாகவராளி ராகத்திலும் பாடிப்பரவியுள்ளார். மேலும் "திருக்காதல்' என்ற தலைப்பில் தனியானதொரு - தணியாததொரு காதல் பாடலையும் பாடிப் பரவியுள்ளார்.
 "ஆறு துணை' என்ற தலைப்பில் பராசக்தி, சரஸ்வதி, திருமகள் ஆகிய முப்பெருந்தேவியரைப் போற்றியுள்ளார். "சுய சரிதை'யில் பிள்ளைக் காதலையும், விடுதலைக் காதலையும், காதலின் புகழையும் எடுத்தியம்பும் மகாகவி, "குயில் பாட்டில்' குயிலின் காதலையும், காதலோ காதல் என்றும் வியந்து போற்றுகிறார். அத்தகைய மிகு காதல் அவருக்குக் கலைவாணியிடமும் உண்டு.
 "பிள்ளைப் பிராயத்திலே - அவள்
 பெண்மையைக் கண்டு மயங்கி விட்டேனங்கு
 பள்ளிப் படிப்பினிலே -மதி
 பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
 வெள்ளை மலரணைமேல் - அவள்
 வீணையுங் கையும் விரிந்த முகமலர்
 விள்ளும் பொருளமுதம் - கண்டென்
 வெள்ளை மனது பறிகொடுத்தேன் அம்மா!'
 என வெள்ளைக் கமலத்தில் வீற்றிருக்கும் கலைவாணியின் எழில் அழகைக் கண்டு இளம் வயது முதற்கொண்டே அவளிடம் தன் மனத்தைப் பறிகொடுத்தவர் மகாகவி.
 ஆற்றங்கரையினில், தனியானதோர் மண்டபத்தில் தென்றல் காற்றை நுகர்ந்து கொண்டிருந்த வேளையில், அந்தக் கலைவாணி அவருக்குக் "கன்னிக் கவிதை'யைக் கொண்டுவந்து தந்திருக்கிறாள். அப்பொழுதிலிருந்தே (சிறுவனாக) பாரதியார்
 கன்னிக் கவிதை பல எழுதியுள்ளார். கலைவாணியின் மீது அவருக்குக் காதல் வளர வளர... பித்துப் பிடித்தவர்போல்,
 "அவளிடை வைத்த நினைவை யல்லால் - பிற
 வாஞ்சை உண்டோ? - வய தங்ஙன மேயிரு
 பத்திரண் டாமளவும் - வெள்ளைப்
 பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்அம்மா!'
 என்கிறார். மேலும், கலைவாணியையும் (வாணி), இலக்குமியையும் (ஸ்ரீதேவி), பராசக்தியையும் (பார்வதி) காதல் களிகூர்ந்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய (மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி) முப்பெருந் தேவியரை "நவராத்திரிப் பாட்டு' என்கிற தலைப்பில் பாடிப் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது. பாஞ்சாலி சபதத்திலும் (கலை)வாணிக்கும், பராசக்திக்கும் வணக்கம் செலுத்தி, (கலை)வாணியையும் வேண்டுகிறார். "மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி'யின் முதல் பாடலில் பராசக்தியைப் பாடி, முப்பெரும் சக்தியாக விளங்கும் வாணியையும், ஸ்ரீதேவியையும், பார்வதியையும் முறையே (நான்கு பாடல்களில்) போற்றியுள்ளார்.
 மகாகவி காளிதாஸர் போல மகாகவி பாரதியாரிடமும் "சக்தி வழிபாடே' சிறந்தோங்கி, மேலோங்கி இருந்ததை அவருடைய சக்தி, காளி, பராசக்தி, கலைமகள் வழிபாட்டுப் பாடல்கள் அனைத்தும் வெளிப்படுத்துகின்றன.
 "திருமகள் துதி'யில், "நித்தமுனை வேண்டி மனம்/ நினைப்பதெல்லாம் நீயாய்ப் / பித்தனைப் போல் வாழ்வதிலே பெருமையுண்டோ?' - என்று கேட்டவர், சக்திப் பித்தனாகவே மாறினார். அதன் தாக்கத்தால்,
 "சக்திதாஸன்' என்ற புனைபெயரில்,
 "எகிப்தின் விடுதலை, விநோதச் செய்திகள், துர்க்கா பூஜை, நெல்லிக்காய்க் கதை, அபயம், ரஸத்திரட்டு, விநோதத்திரட்டு, விநோதக் கொத்து, விசேஷக் குறிப்புகள், இங்கிலாந்து தேசத்துச் செய்திகள், ஒளிர்மணிக்கோவை, முக்கியமான குறிப்புகள், உலகநிலை,
 குறிப்புகள், ஹாஸ்ய விலாஸம், காலவிளக்கு, சில குறிப்புகள், நேசக்கட்சியாரின் மூடபக்தி, பூகோள மஹாயுத்தம், புதுமைகள் (1 - 3) காலக்கண்ணாடி, என் ஈரோடு யாத்திரை' (நூல்கள் பற்றிய தகவல்: சொ.சேதுபதி)
 என கதை, கட்டுரை, குறிப்புகள், பயணக் கட்டுரை, வழிபாடு எனப் பலவற்றையும் எழுதிக் குவித்து மகிழ்ந்திருக்கிறார். "ஊழிக் கூத்து' என்கிற தலைப்பில்,
 "சக்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்
 சடசட சட்டென் றுடைபடு தாளங்கொட்டி-அங்கே
 எத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானே
 எரியுங் கோலங் கண்டே சாகும் காலம்
 அன்னை! அன்னை! ஆடுங் கூத்தை
 நாடச் செய்தாய் என்னை!'
 என்று சக்தியின் தாண்டவத்தைத் தனது கவிதையாக்கி இருக்கிறார் சக்திப் பித்தரான பாரதி சித்தர்!
 -இடைமருதூர் கி.மஞ்சுளா
 
 
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com