'சிந்தையைக் கவரும் சீர்திருத்தக் கீதம்'!

இந்தியாவைக் கைப்பற்றிய வெள்ளைக்காரர்கள், தென்னிந்தியாவில் வணிக வலையை விரித்தனர். இலங்கையிலும் தம் அரசியலைக் கையிலெடுத்து ஆட்டிப்படைத்தனர்.
'சிந்தையைக் கவரும் சீர்திருத்தக் கீதம்'!

இந்தியாவைக் கைப்பற்றிய வெள்ளைக்காரர்கள், தென்னிந்தியாவில் வணிக வலையை விரித்தனர். இலங்கையிலும் தம் அரசியலைக் கையிலெடுத்து ஆட்டிப்படைத்தனர். சிங்களர் வாழ்விடத்தைத் தொடர்ந்து தமிழர் வாழும் இடமும் ஐரோப்பிய ஆதிக்கத்தின்கீழ், இலங்கை என ஒன்றிணைத்துக் கொண்டுவரப்பட்டது. 

மலைநாடான கண்டியில் தேயிலை பயிரிட்டனர். உள்ளூர்ச் சிங்களரை வைத்துத் தேயிலைப் பயிர் செய்ய முடியாமையால், சொன்னபடி கேட்கும் தென்னிந்தியத் தமிழரை அங்கிருந்து கண்டிக்குக் கொண்டு வந்தனர். அத்தமிழர் பெருந்துன்பத்திற்கு ஆளாயினர். "பாடுபட்டவன் எங்கள் பாட்டன் பூட்டன்; இப்போது பலன் அனுபவிப்பது வேறு ஒரு கூட்டம்' என வருந்தினர்.

எம்.எஸ்.கிருஷ்ணம்மாள் என்கிற கவிஞர் தமிழருக்காக, தமிழ்ப் பெண்டிருக்காக "சிந்தையைக் கவரும் சீர்திருத்தக் கீதம்' என்ற தலைப்பில் ஒன்பது பாடல்களைப் பாடினார்.  "கள்ளத்தோணி' என்று தமிழரை இழிவாகப் பேசுவதைக் கண்டித்தார். கங்காணிமார்க்கு அடங்கி, கணக்குப் பிள்ளைக்கு நடுங்கி, கண்டிப்பாக வேலை செய்தும் கருணையில்லை முதலாளிக்கு என்று துடித்தார். அவர் சுட்டும் பாடல் இதுதான்.

"ஆதியிலே வெள்ளையர்கள் கூட்டிவந்து
பாதியிலே தவிக்கவிட்டுப் பறந்துவிட்டார் 
நாதியற்று நடுத்தெருவில் நாம் வருந்தி
நீதியற்று நிற்கதியாய் வாழுகின்றோம்'
"தமது உறவினரையும் இனத்தாரையும் ஈழத்
தேயிலைப் புதரிலே புதைத்தார்கள். சேவை செய்த தமிழன் தேவையில்லை; சிலோனில் அவனுக்கு வேலையில்லை. சொந்தம் கொண்டாட உரிமையில்லை; சொன்னாலும் நாட்டுக்குத் தெரியவில்லை' என்று குமுறுகிறார். அவர் பெண்களைப் பற்றி எழுதிய கவிதை வரிகள் இவை:

"தேயிலை பறிப்பதில் திறமை பெற்ற 
திராவிடப் பெண்களின் சாதனைகள் 
மலையசைந்தாலும் மனம் கலங்கா
மாபெரும் வீரசிகா மணிகள்
அட்டை, பாம்பு, பூரான் வாழும் ஆரண்யத்தில் 
அரிவையர்கள் கொழுந்தெடுக்கும் மே மலையில்
கோடைவெயில் காலத்திலும் வேர்வை சிந்த
கொட்டும் மழை நேரத்திலும் குளிர்நடுங்க
பாலுமின்றிச் சோறுமின்றிப் பட்டினியாய்ப்
பதைபதைத்து வாடுதிங்கே குழந்தைகளும் 
பேருபோட்டு வீடுவர ஆறுமணி 
பிள்ளைகளைக் கவனிப்பது எப்போ இனி?'
கவிஞர் கிருஷ்ணம்மாள் என்ன படித்தார் 
என்பதை அறிய இயலவில்லை. கண்டியில் துன்பப்படும் தமிழருக்காக, தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்காக, உழைக்கும் பெண்களுக்காக வேதனைப்பட்டு, உணர்ச்சி பொங்க பாடல்களை எழுதியுள்ளார். இவரைப் போல, மலைநாட்டுப் பாட்டாளிகள் பட்ட பாட்டைப் பிறர் உணரப் பாட்டெழுதி வைத்த கவிஞர்கள் பலர் இருத்தல் கூடும்.  
கிருஷ்ணம்மாள் பாடியமைக்குச் சான்றாக அவர் பெயரைப் பாடலிலேயே அமைத்துள்ளார்.
"பாரத வீரர்களின் பழக்கத்தையே சொல்லிவிட்டேன் 
உத்தியோகக் காரர்களின் ஊழல்களைக் காட்டிவிட்டேன்
முதலாளி வர்க்கங்களின் மூர்க்கத்தனம் கூறிவிட்டேன் 
முத்தமிழ் கிருஷ்ணம்மாள் முழுவதையும் பாடிவிட்டேன்'
இப்பாடலில் தன் பெயருக்கு முன்னால்  கொடுத்துள்ள "முத்தமிழ்' என்ற அடை, அவர் எழுத்தாற்றலோடு, இசை, நாடகப் புலமையும் மிக்கவர் என்பதை அடையாளப்படுத்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com